மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 பிப் 2018

அதிருப்தியில் தெலுங்கு தேசம் கட்சி!

அதிருப்தியில் தெலுங்கு தேசம் கட்சி!

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில், ஆந்திர மாநில வளர்ச்சிக்கான திட்டங்கள் ஏதும் இல்லை என அதிருப்தி தெரிவித்துள்ளது தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இரண்டாவது பெரிய கட்சியான தெலுங்கு தேசம் கட்சி. வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 4) அமராவதியில் நடைபெறவுள்ள தெலுங்கு தேசம் கட்சி எம்பிக்கள் கூட்டத்தில், பாஜகவுடனான உறவு குறித்து விவாதிக்கப்படும் என அக்கட்சியைச் சேர்ந்த எம்பிக்கள் தெரிவித்துள்ளனர்.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, நேற்று (பிப்ரவரி 1) நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்தார். ஆந்திராவில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து எவ்வித அறிவிப்பும் இதில் இடம்பெறவில்லை என அதிருப்தி தெரிவித்துள்ளது தெலுங்கு தேசம் கட்சி. இக்கட்சிக்கு, 16 மக்களவை உறுப்பினர்கள் உள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இரண்டாவது மிகப்பெரிய கட்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஒய்எஸ் சவுத்ரி, தற்போது வெளியாகியுள்ள பட்ஜெட் மக்களுக்கும் கட்சிக்கும் பலத்த அதிருப்தியைத் தந்துள்ளதாகக் கூறினார். “அறிவிக்கப்பட்டுள்ள பட்ஜெட்டில் எங்களுக்குத் திருப்தியில்லை. இதனை ஈடுகட்ட, நாங்கள் எந்த விதத் தியாகத்திற்கும் தயாராக இருக்கிறோம்” என்றார்.

மேலும், ”ரயில்வே மண்டலம் அமைப்பது, புதிய தலைநகரம் அமராவதிக்கான நிதி ஒதுக்குவது, போலாவரம் திட்டத்திற்கான நிதி உட்பட ஆந்திரா தொடர்பான பல்வேறு விஷயங்கள் பற்றி பட்ஜெட்டில் எதுவுமே குறிப்பிடப்படவில்லை” என்று அவர் வருத்தம் தெரிவித்தார்.

விசாகப்பட்டினம் மற்றும் விஜயவாடாவில் மெட்ரோ ரயில் திட்டம் அமைக்கப்படுவது குறித்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். 2014ஆம் ஆண்டு தெலங்கானாவும் ஆந்திராவும் தனியாகப் பிரிக்கப்பட்ட பின்பு, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டுமென கோரி வருகிறது தெலுங்கு தேசம் கட்சி. நான்கு ஆண்டுகளாகக் கூட்டணியில் தொடர்ந்தும், அதுபற்றி எதுவுமே குறிப்பிடாமல் மத்திய அரசு இருப்பதையும் அக்கட்சி எம்பிக்கள் கண்டித்துள்ளனர்.

இந்த நிலையில், இன்று காலை டெல்லியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் தெலுங்கு தேசம் கட்சி எம்பி டிஜி வெங்கடேஷ். “நாங்கள் போர் அறிவிக்க இருக்கிறோம். எங்களிடம் மூன்று வாய்ப்புகள் உள்ளன. முதலாவது, எங்களது முயற்சிகளைத் தொடர்ந்து செய்யும் விதத்தில் கூட்டணியில் தொடர்வது. இரண்டாவது, எங்களது கட்சி எம்பிக்கள் ராஜினாமா செய்வது. மூன்றாவது, பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொள்வது. ஞாயிற்றுக்கிழமை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் ஆலோசனை நடத்திய பிறகு, இதுபற்றி அறிவிப்போம்” என்று அவர் தெரிவித்தார்.

முத்தலாக் மசோதா விவகாரத்தில், மாநிலங்களவையில் எதிர்கட்சிகளுடன் இணைந்து தெலுங்கு தேசம் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. அது மட்டுமல்லாமல், கடந்த சில மாதங்களாக தெலுங்கு தேசம் கட்சியின் நிர்வாகத்தை ஆந்திர மாநில பாஜகவினர் கடுமையாக விமர்சித்துவருகின்றனர். இந்த உரசல் அதிகமாகும் விதத்தில், தற்போது பட்ஜெட்டுக்கு எதிராக உரத்த குரலில் எதிர்ப்பை தெரிவித்திருக்கின்றனர் தெலுங்கு தேசம் கட்சி எம்பிக்கள். இதனால், பாஜக – தெலுங்கு தேசம் கூட்டணியில் பிளவு இருப்பது வெளிப்படையாகத் தெரியவந்துள்ளது.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

வெள்ளி 2 பிப் 2018