மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 பிப் 2018

மீண்டும் தள்ளிப்போகும் உள்ளாட்சித் தேர்தல்!

மீண்டும் தள்ளிப்போகும் உள்ளாட்சித் தேர்தல்!

‘வார்டு வரையறை செய்யும் பணிகள் முடிவடைந்த பிறகே உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியாகும்’ என்று தெரிவித்துள்ளார் தமிழக அமைச்சர் சி.வி.சண்முகம். இதனால், உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுவதில் மீண்டும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதில் வெற்றிபெற்ற பிரதிநிதிகளின் பதவிக்காலம் 2016ஆம் ஆண்டில் முடிவடைந்தது. அதன்பிறகு, உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகத்தைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளே கவனித்து வருகின்றனர். கடந்த ஆண்டே உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டுமென்று தமிழகத் தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் கெடு விதித்திருந்தது.

ஆனால், நீதிமன்ற உத்தரவுப்படி தேர்தல் நடத்தப்படாததற்காகத் தேர்தல் ஆணையம் வருத்தம் தெரிவித்தது. கடந்த ஆண்டு இறுதியில் உள்ளாட்சி அமைப்புகளிலுள்ள வார்டு வரையறை செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடந்தன. 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி அவை மாற்றியமைக்கப்பட்டன. வார்டு வரையறை செய்யப்பட்டது குறித்து உள்ளாட்சி அமைப்புகளில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதுபற்றி புகார் தெரிவித்தவர்களின் கருத்துகள் கேட்கப்பட்டு, தற்போது அதைச் சரிசெய்யும் பணிகளில் அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று (பிப்ரவரி 1) உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுவது குறித்து கருத்து தெரிவித்தார் தமிழக சட்ட அமைச்சர் சி,வி.சண்முகம். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தமிழக முன்னாள் முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் பிறந்த நாள் விழா, நேற்று தமிழக அரசின் சார்பில் கொண்டாடப்பட்டது. அதில் தமிழக அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, சி.வி.சண்முகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது, ‘வார்டு வரையறை செய்யும் பணிகள் முடிவடைந்த பிறகே உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வெளியிடும்’ என்று தெரிவித்தார் அமைச்சர் சி.வி.சண்முகம்.

வார்டு வரையறை செய்யும் பணிகள் பிப்ரவரி மாதம் இறுதிவரை தொடரும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. அதன்பிறகு, மார்ச் மாதம் ப்ளஸ் டூ மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வுகள் நடைபெறும். அது மட்டுமல்லாமல், தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்புக்குப் பின்னரே உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் சூழலும் தற்போது நிலவுகிறது. இதனால், ஏப்ரல் மாதத்துக்குப் பிறகே உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆனாலும், தமிழகத்திலுள்ள கட்சிகள் அனைத்தும் உள்ளாட்சித் தேர்தலை மனதில்கொண்டு, தங்களது செயல்பாடுகளில் வேகம்காட்டி வருகின்றன.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

வெள்ளி 2 பிப் 2018