திருப்பம் தருமா தஞ்சை சென்டிமென்ட்?


டி.டி.வி.தினகரன் இன்று (பிப்ரவரி 2) முதல் மக்களைச் சந்திக்கும் புரட்சிப் பயணத்தைத் தஞ்சை மாவட்டத்திலிருந்து தொடங்குகிறார். ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேச்சையாக நின்று வெற்றி பெற்றதிலிருந்து அதிமுகவைக் கைப்பற்ற தீவிரமாக முயன்றுகொண்டிருக்கும் தினகரனுக்கும் முதல்வர் - துணை முதல்வர் அணியினருக்கும் கடுமையான மல்லுக்கட்டு நடைபெற்று வருகிறது.
பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிராக தினகரன் அணியினர் கடந்த சில நாள்களாகத் தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்களை நடத்தியதில் அதிக அளவு மக்கள் கூட்டம் குவிந்தது. இந்த நிலையில்தான் ஏற்கெனவே திட்டமிட்டப்படி இன்று மாலை தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரிலிருந்து தனது புரட்சிப் பயணத்தைத் தொடங்குகிறார் தினகரன்.
இதுபற்றி ஏற்கெனவே அறிவித்த தினகரன், “மத்திய பிஜேபி அரசின் அருளாசியுடன் தங்களது சுயநல அதிகாரம் தொடர்ந்திடுவதற்காகத் தமிழகத்தை அடமானம் வைத்துள்ளது எடப்பாடி பழனிசாமி கூட்டம்.
நீட் தேர்வு, உணவுப் பாதுகாப்பு சட்டம், ஜிஎஸ்டி, மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ, காவிரிப் பிரச்னை, ஓகி புயல் என்று ஒவ்வொரு வகையிலும் தமிழகத்துக்குத் துரோகம் இழைத்து, மனசாட்சியே இன்றி ஆட்சி நடத்திவரும் ஆணவக் கும்பலின் ஆட்டத்துக்கு முடிவு கட்டிடவே, ‘தமிழகம் தலை நிமிரட்டும், தமிழர் வாழ்வு மலரட்டும்’ என்ற முழக்கத்தை முன்வைத்து மக்களைச் சந்திக்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
அதன்படியே இன்று தஞ்சாவூர் மாட்டத்தில் இருந்து டி.டி.வி.தினகரன் பயணத்தைத் தொடங்குவதால் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தஞ்சை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த திருவிடைமருதூரில் இருந்து இன்று மாலை பயணத்தைத் தொடங்குகிறார் தினகரன்.
சோழபுரம், அடுத்து திருப்பனந்தாள், மணலூர், ஆடுதுறை, திருவிடைமருதூர், திருபுவனம், திருநாகேஸ்வரம், நாச்சியார் கோயில், திருச்சேறை என இன்று திருவிடைமருதூர் தொகுதியில் ஒன்பது இடங்களில் மக்களைச் சந்திக்கிறார். இதற்கான பாயின்ட்டுகளும், பேசும் இடங்களும் தினகரன் தரப்பினரால் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மாலை 4.30க்கு தொடங்கி இரவு 9.30க்கு முடிக்கும் வகையில் திட்டமிட்டுள்ளனர்.
தஞ்சை, கும்பகோணம், மன்னார்குடி என்று இந்த வட்டாரமே தினகரன் ஆதரவாளர்களின் பேனர்கள், போஸ்டர்களால் நிறைந்துள்ளன. தினகரனின் இந்த பயணத் தொடக்க விழாவைப் பிரமாண்டமாக நடத்துவதற்காக தினகரன் அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், தலைமை நிலையச் செயலாளர் பழனியப்பன், தேர்தல் பிரிவு செயலாளர் செந்தமிழன் ஆகியோர் நேற்று தஞ்சையிலிருந்து கிளம்பி திருவிடைமருதூர் சென்று ஆய்வு செய்தனர். தங்களது அணியின் மாவட்ட நிர்வாகிகளிடம் ஏற்பாடுகள் பற்றி தீவிரமாக ஆலோசித்தனர்.
இது சசிகலாவின் சொந்த பகுதி என்பதால் கூட்டத்தை மிக அதிகமாக திரட்ட வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர் தினகரன் ஆதரவாளர்கள்.
பயண ஏற்பாடுகளில் தீவிரமாக இருந்த தஞ்சை வடக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் பொன். த.மனோகரனிடம் பேசினோம்.
“புரட்சித் தலைவி அம்மா அவர்கள் எந்த வழியில் பயணித்தாரோ அதே அரசியல் வழியில்தான் டிடிவி இன்று பயணித்துக்கொண்டிருக்கிறார். அம்மாவின் பாதையில் இருந்து தவறி வெகுதூரம் சென்றுவிட்டவர்களிடம் இருந்து கட்சியைப் பாதுகாக்கவே இந்தப் பயணம். எங்கள் பக்கம் குறைவான நபர்கள் இருந்தால் இடையூறு செய்து பயணத்தைத் தடுத்துவிடலாம் என்று அரசுத் தரப்பில் முயற்சித்தார்கள். ஆனால், டிடிவி அவர்களை நோக்கி இளைஞர்கள், பெண்கள் என மக்கள் கூட்டம் திரண்டு வருவதால் அரசுத் தரப்பால் பெரிய அளவு இடையூறு செய்ய முடியவில்லை. நாங்கள் சட்ட விதிகளுக்குட்பட்டு முறையான அனுமதி பெற்று இந்தப் பயணத்துக்கான அனுமதியைப் பெற்றிருக்கிறோம். அதனால் அரசுத் தரப்பு எதுவும் செய்ய முடியவில்லை” என்று கூறிய பொன். த.மனோகரன் இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட்டார்.
“1989ஆம் ஆண்டு அம்மா சேவல் சின்னத்தில் நின்றபோது மக்களை நோக்கிய தனது முதல் பயணத்தை தஞ்சை மாவட்டத்தில் இருந்துதான் தொடங்கினார். அப்போது அம்மாவிடம் இரட்டை இலை இல்லை. ஆனால், அதன்பின் அம்மாவே இரட்டை இலையைக் கைப்பற்றினார். ஆட்சியையும் கைப்பற்றினார். அதேபோல இப்போது அம்மாவின் வழியில் டிடிவி இன்று தஞ்சை மாவட்டத்தில் இருந்து மக்களைச் சந்திக்கும் பயணத்தைத் தொடங்குகிறார். விரைவில் இரட்டை இலை டிடிவியிடமே வரும். முப்பது வருடங்களுக்கு முன் அம்மா செய்ததை இன்று டிடிவி செய்வார்” என்றார் மனோகரன்.
இந்தத் தஞ்சை சென்டிமென்ட் தினகரன் ஆதரவாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
- ஆரா