மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 பிப் 2018

சிறப்புக் கட்டுரை: கல்வியை மேம்படுத்துமா மத்திய பட்ஜெட்?

சிறப்புக் கட்டுரை: கல்வியை மேம்படுத்துமா மத்திய பட்ஜெட்?

பிரியங்கா வெங்கட்

(2017-18 பட்ஜெட்டில் கல்விக்கு அளித்த முக்கியத்துவம் குறித்து 2018-19 பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக (ஜனவரி 28) தி கிரியஸ் ஊடகத்தில் பிரியங்கா வெங்கட் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இது. இத்துடன் பின்னிணைப்பாக நேற்று (பிப்ரவரி 1) அருண் ஜேட்லி கல்வித் துறைக்கு 2018-19 பட்ஜெட்டில் அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவம் குறித்து மேற்கோள்காட்டிப் பேசியதும் இணைக்கப்பட்டுள்ளது).

இந்தியாவில் சமத்துவமின்மை என்பது அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சமமான கல்வியை அளிப்பதிலும் நீடிக்கிறது. ஒரு வலுவான கல்வி அமைப்பைச் சமூகத்துக்கு வழங்க வேண்டியது அவசியமான ஒன்றாகும். ஒட்டுமொத்த சமூகத்துக்கும் ஒரு வலுவான கல்வி அமைப்பை அளித்திட குறைந்தபட்ச நிதி ஒதுக்கீடாவது அவசியமாகிறது. அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கலில் கல்விக்கு என்ன முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிய வேண்டிய நேரமிது. அதற்கு முன்பான 2017-18ஆம் நிதியாண்டில் கல்வித் துறைக்கு பட்ஜெட்டில் என்ன முக்கியத்துவம் அளிக்கப்பட்டது என்பது குறித்துக் காண்போம்.

2017-18ஆம் நிதியாண்டில் மத்திய அரசின் பட்ஜெட்டில் கல்விக்கு அனைத்துத் தரப்புக்கும் கணிசமான அளவில் கூடுதல் நிதி ஒதுக்கப்படவில்லை என்பதுதான் யதார்த்தம். ரூ.79,685.95 கோடி 2017-18ஆம் ஆண்டுக்கான கல்வித் துறை பட்ஜெட்டாக ஒதுக்கப்பட்டது. இது 2016-17ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 9.9 சதவிகிதம் கூடுதலாகும். 2016-17ஆம் நிதியாண்டில் ரூ.72,934 கோடி கல்வித் துறைக்கான நிதியாக ஒதுக்கப்பட்டிருந்தது. இதிலும் சில குறிப்பிட்ட பகுதிகளுக்கான நிதி கவலையை ஏற்படுத்தியது. தேசிய கல்வித் திட்டத்துக்கு ரூ.1,305 கோடி மட்டுமே கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. கல்வியை மேம்படுத்துவதற்கான அனைத்துத் திட்டங்களையும் தேசிய கல்வித் திட்டம் உள்ளடக்குகிறது. குறிப்பாகச் சர்வ சிக்சா அபியான் (எஸ்.எஸ்.ஏ), ராஷ்டிரிய மத்யமிக் சிக்சா அபியான் (ஆர்.எம்.எஸ்.ஏ) ஆகிய திட்டங்களைத் தேசியக் கல்வித் திட்டம் உள்ளடக்கியுள்ளது. ராஷ்டிரிய மத்யமிக் சிக்சா அபியான் திட்டத்தில் ஆசிரியர் பயிற்சி மற்றும் வயதுவந்தோர் கல்வி போன்றவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது. சர்வ சிக்சா அபியான் தொடக்கக் கல்வியில் கவனம் செலுத்துகிறது. இந்தத் திட்டத்துக்கு ரூ.23,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. 2016-17ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் இதன் நிதி ரூ.1,000 கோடி அதிகரிக்கப்பட்டிருந்தது. 2016-17ஆம் நிதியாண்டில் ரூ.22,500 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது.

அதேபோல மதிய உணவுத் திட்டத்துக்கு 2017-18ஆம் நிதியாண்டில் ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. 2016-17ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு நிதியாண்டில் ரூ.300 கோடி இத்திட்டத்துக்குக் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது. குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்கும்வகையில் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆனால், இத்திட்டத்துக்குப் போதுமான அளவில் நிதி அளிக்கப்படவில்லை. கடந்த பட்ஜெட்டில் பள்ளிகளில் கற்றல் விளைவுகளை மதிப்பிடுவதற்கு ஓர் அமைப்பையும் மத்திய நிதியமைச்சர் முன்மொழிந்தார். உயர்நிலைப் பள்ளிகளை வளர்ப்பதற்கான ஊக்குவிப்பு நிதியும் ஒதுக்கப்பட்டது.

அருண் ஜேட்லி பேசுகையில், “உயர்நிலைக் கல்வியை மேம்படுத்துவதற்கான ஊக்குவிப்பு நிதி, உயர்நிலைக் கல்வியில் உலகளாவிய அணுகலை உருவாக்குதல், பாலினப் பாகுபாடுகளை நீக்கிச் சமத்துவத்தை அதிகரித்தல் ஆகியவற்றை நோக்கமாகக்கொண்டு செயல்படுத்தப்படும். மேலும், தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கற்றல் முறையில் மாற்றத்தைக் கொண்டுவர முயற்சிக்கப்படும். இத்திட்டம் கல்வி ரீதியாகப் பின்தங்கிய வகுப்பினராகக் கருதப்படும் 3,479 சமூகத்துக்குச் செயல்படுத்தப்படும்” என்றார்.

நாடு முழுவதும் 100 சர்வதேச திறன் மேம்பாட்டுப் பயிற்சி நிறுவனங்களை ஏற்படுத்தி மாணவர்களுக்கு வெளிநாடுகளில் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கான பயிற்சிகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியானது. அதேபோல சங்கல்ப் என்ற திட்டத்தையும் நிதியமைச்சர் அறிவித்தார். இத்திட்டத்துக்கு ரூ.4,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்தத் திட்டமும் வேலைவாய்ப்பு தொடர்பான பயிற்சியளிக்கும் திட்டமாகும். இதையடுத்து ஸ்ட்ரைவ் என்ற திட்டம் குறித்த அறிவிப்பு வெளியானது. ரூ.2,200 கோடி மதிப்பிலான இந்தத் திட்டம் தொழில்துறை நிறுவனப் பணிகளுக்கான பயிற்சியை வழங்குகிறது.

உயர் கல்வியைப் பொறுத்தவரையில் நடப்பு நிதியாண்டில் ரூ.33,330 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2016-17 நிதியாண்டை விட 12 சதவிகிதம் கூடுதலாகும். 2016-17ஆம் நிதியாண்டில் உயர்கல்வித் துறைக்கு ரூ.29,703 கோடி நிதியாக ஒதுக்கப்பட்டிருந்தது. பல்கலைக்கழக மானியக் குழுவிலும் சில சீர்திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்தது. இந்தியாவில் பல்கலைக்கழகக் கல்வியின் தரத்தை உருவாக்குவதற்கும், ஒருங்கிணைப்பதற்கும், பராமரிப்பதற்கும் இந்தக் கமிஷன் பொறுப்பேற்கும். ஆனால், இந்தக் கமிஷனின் பணிகளில் மிகுந்த தொய்வே காணப்படுகிறது. பல்வேறு சீரமைப்புகள் மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வது, தரமான உணவுகளைப் பல்கலைக்கழகங்களில் அளிப்பது உள்ளிட்டப் பணிகளை மேற்கொள்வதில் பல்கலைக்கழக மானியக் குழு தொய்வாகவே செயல்பட்டுள்ளது. இந்தப் பிரச்னைகளுக்கு உரியத் தீர்வு காண்பதாக நிதியமைச்சகம் கூறியிருந்தது.

மற்றொரு முக்கியமான அறிவிப்பும் நடப்பு பட்ஜெட்டில் இருந்தது. தேசிய ஆய்வு ஏஜென்சி நிறுவனத்தையும் மத்திய அரசு அமைத்தது. இந்தக் குழு தன்னாட்சி அதிகாரம் கொண்ட கல்வி நிறுவனங்களில் உயர் கல்விக்கான நுழைவுத் தேர்வைக் கண்காணிக்கும் பொறுப்பைக் கொண்டுள்ளது. ஆனால், இந்த அமைப்பு ஏ.ஐ.சி.டி.இ மற்றும் சி.பி.எஸ்.சி கல்வி சார்ந்தவற்றுக்குக் கல்வியின் தரம் கருதித் தேர்வு முறைகள் மற்றும் செயல்பாடுகளுக்கு அதிக சுதந்திரம் அளிக்கிறது. இந்தக் குழுவுக்கான கேபினட் ஒப்புதல் 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பெறப்பட்டது. ஸ்வயம் என்ற ஆன்லைன் தளமும் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இந்தத் தளம் உயர்கல்வியின் தரத்தை அதிகரிக்க உருவாக்கப்பட்டது. இந்தத் தளம் 350க்கும் அதிகமான படிப்புகளை வழங்குகிறது. அதேபோல, குஜராத் மற்றும் ஜார்க்கண்டில் இரண்டு எய்ம்ஸ் மருத்துவமனைப் பல்கலைக்கழகம் அமைக்கவும் நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.

இவ்வாறு நடப்பு நிதியாண்டின் பட்ஜெட் பல்வேறு உறுதிமொழிகளை அளித்தது. இவ்வாறு ஒதுக்கப்பட்ட நிதிகள் அனைத்தும் கல்வித் துறையின் இலக்கை அடைய உதவியதா என்பதுதான் தற்போது எழுந்துள்ள கேள்வி. 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டம் (ஆர்.டி.இ) கட்டாயக் கல்வியை வலியுறுத்துகிறது. இந்தச் சட்டத்தைச் செயல்படுத்தும் பணியில் தான் எஸ்.எஸ்.ஏ ஈடுபடுகிறது. இந்தச் சீர்திருத்த நடவடிக்கைகளினால் கிட்டத்தட்ட 100 சதவிகித ஆரம்பக் கல்வி இலக்கை அடைந்துள்ளோம். ஆனால், அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்கவில்லை. கல்வி கிடைப்பது மட்டுமே போதாது. அது தரமானதாகவும் இருக்க வேண்டும். பயிற்றுவித்தலிலும் போதிய தரம் நிறைந்ததாக இல்லை. இதன் தரத்தை மேம்படுத்த உரிய நிதி ஒதுக்கப்படுவதில்லை. ஒட்டுமொத்த கல்வித் துறையையும் மறுகட்டமைப்பு செய்ய வேண்டியுள்ளது. ஆசிரியர் - மாணவர் விகிதாச்சாரத்தையும் அதிகரிக்க வேண்டியுள்ளது. எஸ்.எஸ்.ஏ திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ.1,000 கோடி நிதி லட்சக்கணக்கான ஆரம்பப் பள்ளிகளுக்கு ஒதுக்கப்படுவதால் இந்த நிதி அவற்றின் இலக்கை நிறைவேற்றுவதற்குப் போதுமானதாக இருப்பதில்லை.

அதேபோல உயர்நிலைப் பள்ளிக் கல்வியையும் கவனத்தில்கொள்ள வேண்டியுள்ளது. ஆர்.எம்.எஸ்.ஏ திட்டத்தின்படி உயர்நிலைப் பள்ளிக் கல்வியில் உலகளாவிய முறைகளைக் கொண்டுவர முயற்சிக்கப்படுகிறது. 2020ஆம் ஆண்டுக்குள் இதை நிறைவேற்றவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாவட்டக் கல்வி அமைப்பின் தகவல்படி 2015-16ஆம் நிதியாண்டில் மொத்தமாகப் பதிவான 80 சதவிகிதத்தில் இடைநிற்றல் விகிதம் 17 சதவிகிதமாக உள்ளது. நடப்பு நிதியாண்டில் இத்துறைக்குக் கூடுதலாக ரூ.130 கோடி மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டது. இதில் பள்ளி மதிப்பீட்டுத் திட்டத்துக்கான நிதி 2017-18 நிதியாண்டில் ரூ.67 லட்சமாகக் குறைக்கப்பட்டுள்ளது. 2016-17ஆம் நிதியாண்டில் இதன் மதிப்பு ரூ.5 கோடியாக இருந்தது. ஆனால், இந்தியாவில் 10 லட்சத்துக்கும் அதிகமான பள்ளிகளில் 25 கோடிப் பேர் வரை படிக்கின்றனர்.

நிதியை அதிகரிப்பது மட்டுமே இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வாகும் என்று கூற இயலாது. கல்வித் துறையின் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதற்கான சில கொள்கைகளை வகுத்து அவற்றை நடைமுறைப்படுத்திக் கற்றலை மேம்படுத்த வேண்டும். கல்வித் துறைக்கான செலவுகளை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி) 6 சதவிகிதமாக உயர்த்த வேண்டுமென்று கோதாரி கமிஷன் (1964-66) பரிந்துரைத்துள்ளது. ஆனால், இந்தியாவில் இப்போதும்கூட கல்வித் துறைக்கான செலவுகள் ஜிடிபியில் 3.8 சதவிகிதமாக மட்டுமே உள்ளது. இந்த நிலையில் வரும் பட்ஜெட்டில் (நேற்று தாக்கல் செய்யப்பட்டு விட்டது) பள்ளிக் கல்விக்கான நிதி ஒதுக்கீடு 14 சதவிகிதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் மதிய உணவுத் திட்டத்துக்கான நிதி அதிகமாக ஒதுக்கப்படலாம். தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அடுத்த நிதியாண்டில் (2018-19) மாவட்ட அளவிலான பள்ளிகளுக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கத் திட்டமிட்டுள்ளது. அதேபோல நவோதயா பள்ளிகளுக்கும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கும் மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கத் திட்டமிட்டுள்ளது. நவோதயா பள்ளிகளும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும் தரமான கல்வியை வழங்குபவையாக மத்திய அரசால் அறியப்படுகின்றன.

அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகள் தரமான கல்வியை வழங்கி வருகின்றன. தனியார் பள்ளிகளைப் பொறுத்தவரையில் ஆசிரியர்கள் திறன் கொண்டவர்களாகவும், மாணவர்கள் - ஆசிரியர்கள் விகிதாச்சாரம் கூடுதலாகவும் காணப்படுகிறது. ஆர்.டி.இ சட்டத்தின்படி இப்பள்ளிகளுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளும் உள்ளன. தனியார் பள்ளிகளுக்குக் கூடுதலான தன்னாட்சி அதிகாரமும், கூடுதல் நிதி முதலீடும் தேவைப்படுகிறது. இதற்கு வரும் பட்ஜெட் தீர்வளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வரும் நிதியாண்டில் கல்வித் துறையில் தொழில்நுட்ப வளர்ச்சிகளும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கல்வித்தரத்தை உயர்த்தும் வேளையில் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பையும் அதிகரிக்க வேண்டியுள்ளது. இதற்கான ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் தற்போது உருவெடுத்துள்ளன. கல்விச்சேவைகளுக்கான ஜிஎஸ்டி விகிதங்களையும் குறைக்கக் வேண்டியுள்ளது.

2018-19 பட்ஜெட்டில் கல்விக்கு அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவம்:

நேற்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட் உரையில் பேசிய அருண் ஜேட்லி, "கல்வித் துறையைப் புதுப்பித்து உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அடுத்த நான்கு வருடங்களில் ரூ.1 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும். தொழில்நுட்ப வளர்ச்சிகள் அதிகரிக்கப்படும். குறிப்பாகக் கரும்பலகைகள் டிஜிட்டல் பலகைகளாக மாற்றப்படும். பள்ளிக் கல்வியில் முழுமையும், சமத்துவமும் ஏற்படுத்தப்படும். 2022ஆம் ஆண்டுக்குள் பழங்குடியின மக்கள் கல்வி பெறும் வகையில் அவர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் நவோதயா மற்றும் ஏகலவ்யா பள்ளிகள் ஏற்படுத்தப்படும். இதன்மூலம் 20,000 பழங்குடியின மக்கள் பயன்பெறுவர்.

திட்டமிடல் மற்றும் கட்டடக் கலைக்கான புதிய பள்ளிகள் அமைக்கப்படும். புதிதாக 18 ஐ.ஐ.டி மற்றும் என்.ஐ.ஐ.டி கல்லூரிகள் துவக்கப்படும். அண்மையில் வெளியிடப்பட்ட 'DIKSHA' தொழில்நுட்பம் மூலம் ஆசிரியர்களின் திறன்கள் மேம்படுத்தப்படும். கல்வி மற்றும் ஆசிரியர்களின் தரத்தை மேம்படுத்த ஆசிரியர்களுக்கான பட்டப்படிப்பு ஒருங்கிணைக்கப்படும். 2018ஆம் ஆண்டில் 24 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும். பிரதம மந்திரி ஆராய்ச்சித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு அதன்கீழ் 1,000 பி.டெக் மாணவர்களின் மேற்படிப்புக்கு பி.எச்டி செய்வதற்கென ஐஐடியில் வாய்ப்புகள் செய்து தரப்படும்” என்று குறிப்பிட்டிருந்தார். கடந்த காலம் போலத் திட்டங்களும், அறிவிப்புகளும் பெயரளவில் நடைபெறாமல் கல்வித் துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காகப் பயன்பட வேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

- பிரகாசு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வெள்ளி 2 பிப் 2018