மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 பிப் 2018

சிறப்புக் கட்டுரை: ஸ்டாலின் - அரசியல் ஆளுமையும் கட்சியின் எதிர்காலமும்!

சிறப்புக் கட்டுரை: ஸ்டாலின் - அரசியல் ஆளுமையும் கட்சியின் எதிர்காலமும்!

அ. குமரேசன்

விஜய் தொலைக்காட்சியின் ‘நீயா நானா’ நிகழ்ச்சியொன்றில் தலைமைப் பண்பு பற்றிய விவாதம் ஒளிப்பதிவு செய்யப்பட்டது. கம்யூனிஸ்ட் தலைவர்கள் இவ்வளவு நேர்மையாக இருக்கிறார்கள், எளிமையாக வாழ்கிறார்கள், தியாகம் செய்யத் தயாராக இருக்கிறார்கள்... ஆனாலும், மக்களிடம் செல்வாக்குப் பெறவில்லையே ஏன் என்று கேட்டார் நெறியாளர் கோபிநாத்.

மற்ற கட்சிகளோடு கூட்டுவைத்துக் கொண்டது உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இருப்பதாக மற்றவர்கள் சொல்லிவந்தார்கள். என்னிடம் மைக் வந்தபோது சொன்னேன்: “புறக்காரணங்கள் அகக்காரணங்கள் எல்லாம் உண்டுதான். முக்கியமானதொரு புறக்காரணம் ஊடகங்கள்” என்றேன். ‘ஊடகங்களை எப்படிக் காரணமாக்குகிறீர்கள்?’ என்று கேட்டார் அவர்.

“கம்யூனிஸ்ட் தலைவர்கள் நேர்மையாக இருப்பது, சாதாரணமாகப் பேருந்துகளில் பயணம் செய்வது, வாடகை வீட்டில் வசிப்பது, பழைய இருசக்கர வண்டி வைத்திருப்பது, தெருவோரக் கடைகளில் நின்று தேநீர் குடிப்பது என்றெல்லாம் அவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்ற செய்திகளை வெளியிடுகிற ஊடக நிறுவனங்கள் எப்போதாவது, கம்யூனிஸ்ட் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை வெளியிட்டதுண்டா?”

கம்யூனிஸ்ட் தலைவர்கள் சொல்வது செய்தியாக்கப்படுவதில்லை. அல்லது, வெட்டிச் சுருக்கிச் சில வரிகளோ, சில பத்திகளோதான் வெளியிடப்படும். மற்ற பல கட்சிகளின் தலைவர்கள் என்ன சொன்னாலும் செய்தியாக்கப்படும். எவ்வளவு சொன்னாலும் வெளியிடப்படும். ஆதரித்தோ, மறுத்தோ அது விவாதப் பொருளாக்கப்படும். அந்த இடத்தில் இருப்பவர்தான் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின்.

மறுக்க முடியாத சக்தி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் முன்தொகை இழக்கிற அளவுக்கு ஏற்பட்ட தோல்வியால் திமுக ஒரு முக்கியமான, பெரிய எதிர்க்கட்சி என்ற நிலையை எவரும் மறுக்க முடியாது. அந்த நிலையிலிருந்து அக்கட்சியைத் தள்ளிவிடப் பல சக்திகள் ஆசைப்பட்டாலும், அதற்கான குயுக்திகளில் இறங்கினாலும் அது நிறைவேறவில்லை. அது நிறைவேற விடாமல் தடுத்து வைத்திருப்பதில், கலைஞரைத் தொடர்ந்து ஒரு மைய விசையாக இருந்துவருபவர் ஸ்டாலின்.

‘தி இந்து’ தமிழ் நாளேட்டின் நேர்காணலில் (ஜன.28) சமஸ் கேள்விகளுக்கு ஸ்டாலின் அளித்துள்ள பதில்கள் உரையாடலுக்கான நம்பிக்கையைத் தருகின்றன. புதிய கேள்விகளை எழுப்பலாம் என்ற முனைப்பையும் ஏற்படுத்துகின்றன.

ஆயிரம்தான் இருந்தாலும் கலைஞரின் மகன் என்ற பின்புலத்தின் பலத்தோடுதானே ஸ்டாலின் உருவெடுத்தார். அப்படி இல்லாமல் தன் சொந்த முயற்சியில் கட்சியில் இணைந்து, அறிமுகமாகி உயர் பொறுப்புகளுக்கு வந்தவர் என்று சொல்ல முடியுமா என்று கேட்கப்படுகிறது. திமுகவின் ஆகப்பெரும் தலைவரது மகன் என்ற சூழல் ஸ்டாலினுக்கு ஓர் எளிதான நுழைவுக்கும் முன்னேற்றத்துக்கும் வழி செய்திருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால், கட்சிக்குள் ஸ்டாலினின் வளர்ச்சியை அந்தக் காரணத்தோடு மட்டும் சுருக்கிப் பார்த்துவிட முடியாது. அன்று, எம்.ஜி.ஆர் செல்வாக்கை வீழ்த்த, மு.க.முத்துவைத் திரைப்படங்களில், அவரைப் போலவே கதாபாத்திரங்களில் நடிக்கவைத்து அரசியல் பாடல்களைப் பாடவைத்த முயற்சிகள் பலிக்கவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ளலாம்.

ஸ்டாலின் மிக இளவயதிலேயே கட்சிச் செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். நெருக்கடி நிலை ஆட்சிக்காலத்துச் சிறைக் கொடுமைகள் இவர் கலைஞரின் மகன் என்பதற்காகவும் சேர்த்துக் கிடைத்த பரிசுகள்தான். கலைஞரோடு ஓர் உதவியாளராகக் கூடவே இருந்து கட்சி அமைப்பு சார்ந்த பல்வேறு பிரச்னைகள், தீர்க்கும் வழி முதலியவற்றைக் கற்றுக்கொள்ளும் அரிய வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. கட்சிக்குள் மாவட்ட மட்டங்களில் வரக்கூடிய செல்வாக்குப் போட்டி விவகாரங்களில் திறமையாகப் பஞ்சாயத்துச் செய்யக்கூடியவராகத்தான் பெருமளவுக்கு அவரது கடந்த கால அடையாளங்கள் அமைந்திருந்தன என்பதையும் ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். ஆகவேதான் சித்தாந்த ஆழமுள்ள அறிக்கைகள், அரசியல் உள்ளடக்கமுள்ள சொல்லாடல்கள், தன்னை அடையாளப்படுத்தும் கொள்கை வெளிப்பாடுகள் ஆகியவை இவரிடமிருந்து வரவில்லை என்பதும் சுட்டிக்காட்டப்படுகிறது. மத்திய அரசின் பணமதிப்பு ஒழிப்பு, நீட், சமஸ்கிருத - இந்தித் திணிப்பு, எங்கும் தாண்டவமாடும் மதவெறி சார்ந்த கருத்துரிமை ஒடுக்குமுறை உள்ளிட்ட தாக்குதல்கள் வருகிறபோது, இப்பிரச்னைகளில் கலைஞர் எவ்வாறு உடனடியாகவும், கூர்மையாகவும், தனித்துவத்தோடும் எதிர்வினையாற்றியிருப்பார் என்ற வினா எழுப்பப்படுகிறது.

ஒப்பீடு வேறு, எதிர்பார்ப்பு வேறு

அவரோடு ஒப்பிடப்படுவதை விரும்பவில்லை. அவருடைய உயரம் வேறு. தன்னுடைய சமகாலத்தவர்களோடுதான் தன் செயல்பாட்டை ஒப்பிட வேண்டும் என்று பேட்டியில் ஸ்டாலின் கூறியிருப்பது ஏற்கத்தக்கதுதான். ஆனால், அரசியல் களத்தின் மதவெறி உள்ளிட்ட இருட்டுச் சூழல், கலைஞரை விடவும் வேகமாக, கூர்மையாக இவரிடமிருந்து எதிர்வினைகளை எதிர்பார்க்கத்தான் வைக்கிறது. கட்சிக்கு உள்ளே இருப்பவர்கள் மட்டுமல்லாமல், வெளியே இருப்பவர்களிடையேயும் உள்ள அந்த எதிர்பார்ப்பை, ஒப்பிடும் முயற்சியாகத் தள்ளிவிடக்கூடாது. “முடிவு எடுப்பது எவ்வளவு பெரிய சுமை” என்பது இப்போதுதான் புரிகிறது என்று கூறியிருக்கிறார் ஸ்டாலின். இதில் வெளிப்படும் தெளிவு மேலும் கூடுதலாக எதிர்பார்க்க வைக்கிறது.

கட்சிக்குள் இவரது பயணத்துக்கென்றே இளைஞரணி தோற்றுவிக்கப்பட்டது. அப்போது இவரோடு புறப்பட்டவர்களில் பலரும் இன்று தோள்கொடுப்பவர்களாக இருக்கிறார்கள். இந்நிலையில், கலைஞரின் முடிவெடுக்கும் திறனில் இருந்த இன்னொரு முக்கியமான பின்னணியைக் குறிப்பிட்டாக வேண்டும். அது, தனது தனிப்பட்ட ஆளுமையை நிறுவியபடியே, சக தலைவர்களோடு கலந்து பேசுதல் என்ற கூட்டுத் தலைமைப் பண்பாட்டையும் அவர் வளர்த்திருந்தார். “ஆளுமை சம்பந்தமான விஷயம் மட்டும் இல்லை அது. எதிர்கொள்கிற காலகட்டம், உடனிருக்கிற ஆட்கள், சூழல் எல்லாம் சேர்ந்து தீர்மானிக்கிறது” என்று ஸ்டாலின் கூறுகிறபோது அந்தக் கூட்டுத் தலைமைப் பண்பை வளர்க்க என்னவிதமான அணுகுமுறைகள் கடைப்பிடிக்கப்படும் என்ற அடுத்த கேள்விக்கு அது இட்டுச் செல்கிறது.

அன்று இளைஞரணி கட்டப்பட்ட காலகட்டமும் இன்று புதிய இளைஞர்களை ஈர்த்தாக வேண்டிய காலகட்டமும் ஒன்றல்ல. இன்றைய இளைய தலைமுறையினரின் அரசியல் புரிதல்கள், அவர்களின் கோரிக்கைகள், நிபந்தனைகள் எல்லாமே மாறுபட்டிருக்கின்றன. உலகமயமாக்கல், தனியார்மயமாக்கல் நடவடிக்கைகளோடும், மதவாதத்தோடு கலந்த வலதுசாரி அரசியல் மேலோங்கித் தெரிகிற நிலைமைகளோடும் தொடர்புள்ளதாக இருக்கிறது இளையோர் மனநிலை.

ஓய்வெடுக்கும் சமூகச் சீர்திருத்தம்

ஸ்டாலினின் அரசியல் ஆளுமை பற்றிப் பேசுகிறபோது, திராவிடர் இயக்க சித்தாந்தம், அதன் தற்போதைய நிலவரம் ஆகியவற்றை விட்டுவிட்டுப் பேச முடியாது. பகுத்தறிவு, சமூக நீதி, சமூக சீர்திருத்தம் உள்ளிட்ட இயக்க அடையாளங்களோடுதான் திராவிடர் இயக்கம் கம்பீரமாகப் புறப்பட்டது. ஆட்சியதிகாரத்தில் திமுக அமர்ந்த பிறகு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பது உண்மை. ஆனால், அவையெல்லாம் திமுக அரசின் நடவடிக்கைகளாக மட்டும் ஒதுங்கிவிட்டன. திமுக என்ற பெரியதொரு கட்சி, அந்த இலக்குகளுக்கான பரப்புரை இயக்கத் தடத்திலிருந்து விலகிவிட்டது என்று சமூக ஆய்வாளர்கள் பலரும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இடையில், சமூக சீர்திருத்தத் துறை ஒன்றையே ஏற்படுத்தினார் முதல்வர் கலைஞர். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அந்தத் துறை எத்தகைய சீர்திருத்தங்களை மேற்கொண்டது? மூடநம்பிக்கை ஒழிப்பு உள்ளிட்ட பல சட்டங்கள் வேறு சில மாநிலங்களில் வந்தது போல், தமிழகத்தில் வருவதற்கு திமுக ஆட்சி செய்தது என்ன? ஒருமுறை முதல்வர் கலைஞர் தன் கட்சிக்காரர்களைப் பார்த்து, ஒழுங்காகச் செயல்படாவிட்டால் “கட்சியை சமூக சீர்திருத்த இயக்கமாக மாற்றிவிடுவேன்” என்று எச்சரித்தார். சமூகச் சீர்திருத்த இயக்கமாகவும் செயல்படுவது, அந்தப் பாரம்பர்யம் உள்ள திமுகவுக்கு ஒரு கடமையா அல்லது ஒழுங்காகச் செயல்படாதவர்களுக்கான தண்டனையா? அன்றைக்கு அவர் என்ன சூழலில் சொன்னார்? முறையாகச் செயல்படத் தொடங்கினார்களா? அதனால்தான் சமூகச் சீர்திருத்த இயக்கம் தொடங்கப்படவில்லையா என்ற வினாக்கள் வரிசையாக வருகின்றன.

“தேர்தல் அரசியலுக்கு வந்து ஓட்டுக்காக சமூகச் சீர்திருத்தம் பேசுகிற இயக்கம் இல்லை இது. சமூகச் சீர்திருத்தத்துக்காகத் தேர்தல் அரசியலுக்கு வந்த இயக்கம்” என்று ஸ்டாலின் கூறியிருப்பது வரவேற்கத்தக்கதுதான். ஆனால், இயக்கம் தொடர்ந்து சமூகச் சீர்திருத்தம் பேசவில்லையே! அது திமுக மாநாட்டுக் கருத்தரங்கத் தலைப்புகளில் ஒன்றாக மட்டுமேயல்லவா மாற்றப்பட்டுவிட்டது.

அப்படியோர் இயக்கத்தை இணையாக மேற்கொண்டிருந்தால், தமிழகத்தில் முன்னெப்போதையும்விட சாதியமும் சாதி ஆணவக் கொலைகளும் தலைவிரித்தாடுகிற செய்திகள் வந்தபோது, அதை வெறும் சட்டம் ஒழுங்குப் பிரச்னையாக, அரசாங்கத்தை மட்டும் சாடுகிற பிரச்னையாக திமுக பார்த்திருக்காது. அந்தப் பிரச்னைகளில் காட்டப்பட்ட மௌனம் அல்லது அடக்கி வாசித்தது என்பதன் பின்னால், சம்பந்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்களின் வாக்குகளை இழக்க நேரிடுமோ என்ற தேர்தல் ஆதாயக் கணக்கும் இருந்தது என்ற கடுமையான விமர்சனம் வந்திருக்காது அல்லவா?

(கட்டுரையின் நிறைவுப் பகுதி நாளை)

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

வெள்ளி 2 பிப் 2018