மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 பிப் 2018

இமையத்தின் செல்லாத பணம்: உணர்வின் அறிவு!

இமையத்தின் செல்லாத பணம்: உணர்வின் அறிவு!

ப்ரஸன்னா ராமஸ்வாமி

இமையத்தின் செல்லாத பணம் அவருடைய மற்ற நாவல்களிலிருந்து மிகவும் வேறுபட்டதாக எனக்குத் தெரிகிறது.

கதை நிகழும் சில நாள்களுக்கு முன்னோட்டமாக இருந்த வாழ்க்கைச் சம்பவங்களைச் சுருக்கமாக, பாத்திரங்களின் வார்ப்பு துலங்க முதல் சில பக்கங்களில் தெரியப்படுத்தி விடுகிறார். பின்னர் வாசகரைத் தூக்கி அந்தக் கந்தக வெளியில் எரிகிறது எழுத்து.

முதல் சில பக்கங்களில் ஆண்டுகளைத் தாவி அலையாட்டத்தில் கப்பலை நிறுத்தி இரண்டு மூன்று நாள்கள் என்னும் காலத்தை வதைப்படலத்தின் மனக்காலமாக, கதைக்காலமாக விரிகிறது எழுத்து.

கதை சொல்வதில் இப்படியான தேர்வு, அதை அடர்த்தியும் சிக்கனமுமாகக் கையாண்டிருக்கும் முறை, இடையிலோடிய காலப் பாய்ச்சலை அங்கங்கே தொட்டுச் செல்லும் விதம் என்பவை தேர்ந்த கதைசொல்லியின், முதிர்ந்த எழுத்தின் குணம். ‘கதை’யல்ல இலக்கியம், கதையூடாகப் பேசுவதே என்ற நிலைப்பாட்டிலும் வாழ்க்கையைக் கதை அல்லது கதைகள் வழிதானே பேச இயலும் என்ற அறிவுக்குள்ளும் இயங்குகிறது எழுத்து.

உயிரின் துடிப்பு

பயம், கோபம், ஆற்றாமை என்னும் உணர்வுகளின் உச்சத்தின் நடுக்கத்தில் நகர்கிறது புதினம்.

செடல் நாவல் பல்வகை அடவுகளைச் சொல்கிறதென்றால் இது தொல்காப்பியத்தின் மெய்ப்பாட்டியல் கற்பிக்கையில் துணைப்பாடமாக எடுக்கக்கூடிய அளவில் உணர்வெழுச்சி, அதன் உடல் வெளிப்பாடுகளை உயிரின் துடிப்பாகச் சொல்கிறது.

மகளின் காதல் மணத்தை ஒப்புக்கொள்ளாத பெற்றோர், உடன்பிறந்தான், மையப் பாத்திரமான பெண்ணின் ‘காதல்’ தொலைத்த, அவளது தற்கொலைக்குக் காரணியாகக் குற்றப்படுத்தப்படிருக்கும் அன்புக் கணவன் என்பவர்களின் இப்பொழுதின் உணர்வுத் தாக்கம், நினைவுக் காலத்திலிருந்து எழும்பிவரும் உணர்ச்சிக் குவியல்கள் இவற்றினூடாக உடல் வெந்து மரணத்துக்குக் காத்துக் கிடக்கும் ஒரு பெண்ணின் வாழ்க்கை அறியப்படுகிறது.

வதை முகாம் பற்றிய விவரணை போலும் மருத்துவமனையின் களமும் மனிதர்களும் துயரம், பயம், ஆற்றாமை என்னும் அலைகளில் எழும்பியும் தாழ்ந்தும் புலப்படுகிறார்கள். உடலால் வதைபடும் பாத்திரங்களின் வாய்மொழியால் அல்ல, உயிரில் வதைபடும், பார்த்திருப்போரின் கூற்றாக விரிகிறது வதைப் படலம். ஒவ்வோர் உணர்வின் தாக்குதலும், அதன் ஏற்ற இறக்கங்களில் வெடிக்கும், விசும்பும், ஓலமிடும் சொற்களாலும் இறந்துகொண்டிருக்கும் பெண்ணின் ஒவ்வொரு கட்டத்தினூடாகவும் நகர்கிறது ‘கதை’. உணர்வுகளைப் பேசும்போதுதான், உணர்வில் நின்று ஒரு பாத்திரம் உரையாடுவதை எழுத்தாக்கும்போதுதான் எழுதுபவனின் கூர்மை, நிதானம், உணர்வின் களத்தில் ஆழங்கால்பட்டு உயிர்த்தல், எனினும் விலகி நிற்றல் என்னும் பல்வகைகளில் எழுதுபவரின் ஆளுமை வெளிப்படும்.

ஒவ்வொரு விம்மலிலும் ஓலத்திலும் வாசிப்பவரின் அடிவயிறு கலங்குகிறது. ஆனால், வாசகன் விம்முவதில்லை; கண்ணீருக்குப் பதிலாக வாழ்க்கையின் தன்மையை, மனதின் எண்ணப்போக்கை நினைத்து ஒரு நெடுமூச்சுதான் சீறுகிறது. இந்த உயிர்ப்பையும் விலகலையும் ஒருசேரக் கிடைக்கச் செய்வது, அதிலும் வரிக்கு வரி வதைப்படலம் போன்ற கதையில், சாமான்யமாகக் கூடிவராது.

எழுத்தில் உயிர்பெறும் களம்

கதைக்களனாக இருக்கும் மருத்துவமனை பற்றிய விவரங்கள், முக்கியப் பாத்திரங்களின் இருப்பு, நடமாட்டம், அவர்கள் அங்குள்ள சிப்பந்திகளோடும் மற்ற நோயாளிகளின் உறவினர்களோடும் கொள்ளும் பரிமாற்றம் இவற்றின் வழியே சிக்கனமாக ஆனால், செறிவாக உணர்த்தப்பட்டுவிடுகின்றன.

முற்றிலும் மாறாக, காவல் நிலையத்தை, அதன் பவுதீக அமைப்பைக் கொண்டோ அங்குள்ள பாத்திரங்களைக் கொண்டோ நிறுவுவதில்லை இமையம். அதன் தன்மையைத் தீற்றும் கோடுகளும் நிறங்களுமாக உரையாடல்களை அமைப்பதன் மூலம் வடிவம் கொடுக்கிறார்.

இறந்துகொண்டிருக்கும் ஒவ்வோர் உயிருடனும் துடித்துக்கொண்டிருக்கும் மனிதர்களால் காட்சிப்படுத்தப்பட்ட மருத்துவமனைக்கு மாறாக விபத்திலும் கொலையிலும் மாண்டவர்கள் விவரங்களாகவும் கோர்ட்டுக்குக் கொண்டுபோக வேண்டிய வழக்குகளாகவும் எழுதும் வாக்கியங்களாகவும் படர்க்கையாகிவிடுகிற சூழல். அந்தச் சூழலின் மழுக்குதலையும் மொண்ணைத்தனத்தையும் மீறி எட்டிப்பார்க்கும் கணங்களில் உயிரின் இயல்புக்கு மீண்டு, அமரச் சொல்லும், குடிக்கத் தண்ணீர் கொடுக்கும் காவல் அதிகாரி. குரூரங்களுக்கு மத்தியில், மனிதத்தன்மை மழுங்கச்செய்யும் இந்தச் சூழலில் பணியைத் தொடங்கியிருக்கும் ஓர் இளைஞனின் மென் மனதின் போராட்டம் என்பனவற்றைப் படிக்கும்போது நிறுவப்பட்ட முன்மாதிரிகளை அநாயாசமாகக் கடக்கிறது எழுத்து. வெற்று வார்த்தைகளாக லஞ்சம், அறம் கெட்டவர்கள், கொள்ளை, மனிதம் என்று பொழிப்புரையில் அல்ல. நெகிழ்ச்சியும் மாண்பும் எவ்விதம் சிதைவுக்குள்ளாகிறது என்னும் புரிதலுக்கு வாசகனை நகர்த்தியபடி. காவல் நிலையம், காவலர்கள், மருத்துவமனைப் பணியாளர்கள் ஆகியோரின் நிற மாறுபாடுகள், பேச்சு என்பவை, இயல்பு கெடாமல், மனிதர்களாகிய நாம் எப்படி மாண்பும் இழிவும் கலந்தே இருக்கிறோம் என்று புலப்படுத்துகின்றன.

‘இப்படிச் செய்திருந்தால்’, ‘இப்படி இப்படிச் செய்யாததால்’ என்று ஒருவர் மற்றவரைக் குற்றப்படுத்துகின்றனர். ‘உள்ளே தூக்கி வைக்க வேண்டும்’ என்று கொதித்தும் ‘பாதகத்தி செய்த செயலால் வாழ்க்கையே முடிந்து போகுமோ’ என்று நடுங்கியும் இரு வேறு முனைகளில் நிற்க, “அண்ணா என்னை ரேவதீன்னு கூப்பிடு” என்று சக்தியனைத்தையும் திரட்டிக் கெஞ்சுகிறது அந்தப் பெண். இந்த மூன்று மனநிலைகளையும் படிக்கும் வாசகர் வாழ்தலின் அறம் பற்றி, எவ்விதமான மதிப்பீடுகளின் வழியாக வாழ்க்கையைக் கட்டமைத்துக்கொள்கிறோம்.என்பது குறித்து யோசிக்காமலிருக்கவே முடியாது.

தலைப்பில் தொடங்கி, பணம் இடுபொருளாக, குறியீடாக வந்துகொண்டே இருக்கிறது நெடுகிலும். ‘பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை, அருளில்லார்க்கு அவ்வுலகில்லை’ என்னும் வசனத்தை மறுவாசிப்பு செய்யத் தூண்டும் விதமாகப் பொருள் விவாதிக்கப்படுகிறது. எல்லாவற்றையும் உணர்த்திக்கொண்டும் சிந்திக்க வைத்துக்கொண்டும் வருகிற எழுத்து ஓர் இடத்தில் சற்றே தடம் புரள்கிறாற்போல் எனக்கு ஸ்ருதி பிசகிற்று. தீக்காயத்தோடு இறந்துகொண்டிருக்கும் பெண்ணின் கணவன் அவளுடைய மனப்போராட்டத்துக்குக் காரணமாக பொருள் சார்ந்த, அந்தஸ்து சார்ந்த அவளுடைய பெற்றோர் நடத்தையே காரணம் என்று சொல்லும் இடம்தான் அது.

அந்தக் கருத்தும் விவாதமும் மிக உண்மையானது. திடமானது. கதையுடைய மையத் தத்துவத்தின் அருகில் இருப்பது. ஆனால், அந்த இடத்தில் அந்த நேரத்தில் அந்தப் பாத்திரம் அதை அப்படிப் பேசுவது பொருந்தவில்லை.

வாசிக்கிற ஒவ்விருவருக்கும் நிறைந்த வாசிப்பனுபவத்தோடுகூட, வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் நாம் எடுக்கும் தீர்மானங்கள், பேச்சு, மொழி, உணர்வு இவற்றின் மீது சூழலின் தாக்கம், அறிவென்பது என்ன, வாழ்க்கையின் பொருள்தான் என்ன... நாம் ஏன் இப்படியெல்லாம் இருக்கிறோம் என்ற திகைப்பில் வாசகரைக் கொண்டு நிறுத்துகிற எழுத்து, எப்போதும் போலவே, இமையத்தின் இந்த எழுத்தும்.

நூல் விவரம்:

செல்லாத பணம் – நாவல்

ஆசிரியர்: இமையம்

வெளியீடு: க்ரியா

ஆண்டு: ஜனவரி 2018

விலை: 285/-

புத்தகம் கிடைக்கும் இடம்:

க்ரியா, புது எண் 2, 17ஆவது கிழக்கு தெரு, காமராஜர் நகர், திருவான்மியூர், சென்னை – 600 041. தொலைபேசி எண் – 9445040529

மின்னஞ்சல்: [email protected]

இணையதளம்: www.crea.in

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வெள்ளி 2 பிப் 2018