மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 பிப் 2018

சிறப்புக் கட்டுரை: பரிணாமக் கோட்பாட்டை ‘நிராகரித்தல்’ என்றால் என்ன?

சிறப்புக் கட்டுரை: பரிணாமக் கோட்பாட்டை ‘நிராகரித்தல்’ என்றால் என்ன?

எஸ்.கே. அருண் மூர்த்தி

சமீபத்தில், மனித வள மேம்பாட்டுத் துறை மத்திய அமைச்சர் சத்யபால் சிங், பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு, விஞ்ஞானபூர்வமற்றது என்று கூறி, காவி அறிவியல் விமர்சகர்களைவிட ஒருபடி மேலே போய்விட்டார். காவி அறிவியல் ஆதரவாளர்கள், நவீன கண்டுபிடிப்புகள் அத்தனையையும் பண்டைய ரிஷி, முனிவர்களின் நுண்ணறிவில் பிறந்தவைதான் என்றும் அவை வேதங்கள், புராணங்கள் மற்றும் பிற வகை சாத்திரங்களில் காணப்படுகின்றன என்றும் கூறும் எல்லைக்குப் போய்விட்டனர். பரிணாம வளர்ச்சியைகூட தசாவதாரத்தோடு ஒப்பிட்டனர். இப்படிப்பட்ட நவீன கோட்பாடுகள் எல்லாமே பண்டைய புராணங்களில் உள்ளன என்று உலகம் முழுவதும் நிகழும் அறிவில் கண்டுபிடிப்புகளுக்கான அத்தனை பெருமையையும் அபகரிக்கின்றனர். சிங்கின் விமர்சனம் இவை எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிட்டுவிட்டது.

பரிணாமக் கோட்பாடு என்பது உயிரியல் விஞ்ஞானத்தின் தரமான அங்கமாகத் திகழ்கிறது. அறிவியலின் எந்தக் கோட்பாடும் என்றென்றும் நிரந்தரமானது எனக் கூறிவிட முடியாது என்பது உண்மைதான், அவை அப்படி இருக்கவும் கூடாதுதான். அதே சமயத்தில், ஒரு விஞ்ஞானக் கோட்பாடு தவறு என்று அமைச்சர் செய்தது போல பொது அறிவிப்பு மூலம் நிராகரிக்கப்படவும் கூடாது. அது சான்றுகளுடன் விளக்கங்கள், விவாதங்களுடன் நிரூபிக்கப்பட வேண்டிய ஒன்று.

ஒரு அறிவியல் கோட்பாடு தவறு என்று நிராகரிக்கும் செயல்பாடு எது உண்மையான அறிவியல் என்பதுடன் இணைந்து வர வேண்டும். அமைச்சருக்கு அது தெரியுமா?

அமெரிக்காவில் நடந்த விவாதம்

இதே போன்ற ஒரு விஷயம் அமெரிக்காவிலும் நடைபெற்றது. 1980களில் சில அரசியல்வாதிகளும் மக்களும் படைப்பியல் அறிவியலைப் பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினர். பள்ளியில் ஆசிரியர்கள் பரிணாம வளர்ச்சி மற்றும் படைப்பியல் இரண்டையும் ஒரே மாதிரியாக போதிக்க வேண்டும் என்று படைப்பியலின் ஆதரவாளர்கள் விரும்பினர். ஆர்கன்சாஸ் என்ற இடத்தில் இதற்காகவே ஒரு சட்டம் இயற்றப்பட்டது. அந்தச் சட்டத்தை இயற்றியவர்கள், சிங்கைப் போல அப்பட்டமாகப் பரிணாமக் கோட்பாடு விஞ்ஞானபூர்வமற்றது எனக் கூறாமல், படைப்பியலும் இதற்குச் சமமாக விஞ்ஞானபூர்வமானதுதான் என்று நிரூபிக்க விரும்பினார்கள்.

இதைத் தொடர்ந்து, விஞ்ஞானிகள் இந்தச் சட்டத்திற்கு அரசியல் அமைப்பு ரீதியாக சவால் விடுத்தனர், அதை விசாரணை செய்த நீதிபதி படைப்பியலை ஒரு விஞ்ஞானமாக ஏற்க மறுத்துவிட்டார். நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு சிங்கிற்கும் காவி அறிவியல் படையினருக்கும் பாடம் கற்றுத் தந்திருக்க வேண்டும்.

விஞ்ஞானிகள் மற்றும் தத்துவவாதிகளின் சாட்சியங்களின் அடிப்படையில் நீதிபதி அறிவியலின் சில கருத்துகளுக்கு ஒரு அளவுகோலை வரையறுத்தார். விஞ்ஞான அறிவு பின்வரும் அம்சங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்று தீர்ப்பில் (மெக்லீன் எதிர் ஆர்கன்ஸ், 1982) கூறப்பட்டது. அவை பின்வருமாறு:

1. இயற்கை விதிமுறையின்படி வழிநடத்தப்படுதல்

2. இயற்கை விதிமுறையை விளக்குவதன் மூலம் விளக்கமளிக்கப்பட வேண்டும்

3. உலக அனுபவத்திற்கு எதிராக சோதிக்கப்படுவதாக இருக்க வேண்டும்

4. தற்காலிக முடிவுகளைக் கொண்டிருத்தல் (இறுதி வார்த்தையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை)

5. தவறு என்று நிரூபிக்கக்கூடியதாக இருத்தல்

படைப்பியலும் அறிவியலும்

அர்கன்சாஸின் சட்டத்தை எதிர்த்த விஞ்ஞானிகள், படைப்பியல் ஆன்மிக ஊகத்தின் அடிப்படையில் பொய்யான அறிவியலை ஊக்குவிக்கும்படி உள்ளது என்று கூறி இதை எதிர்த்தனர். நீதிபதி இதற்கான முக்கிய விஷயமாகக் குறிப்பிட்ட எதுவுமே மத நூலில் காணப்படவில்லை. மேலும் அவர் படைப்பாளிகள் பைபிளில் உள்ள வார்த்தைகளை அப்படியே எடுத்துக்கொண்டு அதையே விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்க முயற்சி செய்துள்ளனர் என்பதையும் குறிப்பிட்டார். தன் கூற்றை வலுப்படுத்த, ஹென்றி மோரீஸ் என்ற படைப்பாளியின் ஸ்டடீஸ் இன் தி பைபிள் அன்ட் சயின்ஸ் நூலிலிருந்து பின்வருமாறு மேற்கோள் காட்டினார்.

… தற்போதைய செயல்முறைகள் ஆக்கபூர்வமான தன்மை உடையவை இல்லை என்பதால், சிருஷ்டி குறித்து தற்போதைய செயல்பாடு மூலம் எதையும் தீர்மானிப்பது மிகவும் அசாத்தியமானது. மனிதன் படைப்பு பற்றி (படைக்கப்பட்ட காலம், படைப்பிற்கு எவ்வளவு காலம் ஆனது, எந்த வரிசைகிரமத்தில் படைக்கப்பட்டது, படைப்பு முறைகள் அல்லது வேறு விவரங்கள்) ஏதாவது தெரிந்துகொள்ள விரும்பினால், அவனுக்கு உள்ள ஒரே ஆதாரம் தெய்விக வெளிப்பாடு மட்டுமே. அது நடைபெற்றபோது இறைவன் அங்கிருந்தார். நாம் அங்கே இருக்கவில்லை… எனவே, நமக்கு இறைவன் எதைக் கூறுவது பொருத்தமாக இருக்கும் என்று எண்ணினாரோ அதை மட்டுமே வெளிப்படுத்தியுள்ள நிலையில் அந்தத் தகவல்கள் அவரால் எழுதப்பட்ட வார்த்தைகள். இது நமது படைப்பு விஞ்ஞானத்தின் பாடப் புத்தகம்!

சிங்கின் வார்த்தைகளும் மோரீசின் வார்த்தைகளைப் போலவே உள்ளன: “நமது முன்னோர்கள் உட்பட யாருமே எழுத்துபூர்வமாகவோ அல்லது வாய்மொழியாகவே ஒரு மனிதக் குரங்கு மனிதனாக மாறியதைக் குறிப்பிடவில்லை… நமது தாத்தா, பாட்டிகள் ஒருபோதும் டார்வின் காட்டுக்குள் போய் ஒரு மனிதக் குரங்கு மனிதனாக மாறியதைப் பார்த்தார் எனக் குறிப்பிட்டதில்லை. அவரது கோட்பாடு தவறு, அது பள்ளிகளில் கற்றுக்கொடுக்கப்படக் கூடாது. ஆரம்ப காலங்களில் இருந்தே பூமியில் மனிதன் மனிதனாகவே தோன்றியுள்ளான்” என்று கூறியுள்ளார்.

அறிவியல் கோட்பாடுகள் என்பவை அனுபூதியிலிருந்து பிறப்பவை என சத்யபால் நம்புவதை அவருடிஅய கூற்று உணர்த்துகிறது. அவை பகுத்தறிவு அடிப்படையிலும் இயற்கையின் விதிமுறைகள் மற்றும் அனுபவ அடிப்படையிலும் ஆராயக்கூடியவை அல்ல என்றும் அவர் நம்புவதாகத் தெரிகிறது. ஒற்றை மாற்றத்தில் மனிதக் குரங்குகள் திடீரென மனிதர்களாக வடிவம் பெற்றன என பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டில் கூறப்படவில்லை. இந்தப் பகுதிக்கும் இந்தக் கோட்பாட்டின் பிற பகுதிகளுக்கும் தொல்படிமங்கள் ஆதாரங்களாக உள்ளன.

மொத்தத்தில், அமைச்சர் தான் என்ன பேசுகிறோம் என்பதை அறியாதது மட்டுமல்ல, அறிவியலின் அடிப்படை அம்சங்களையும் அறியாதவராக உள்ளார்.

(கட்டுரையாளர் எஸ். கே. அருண் மூர்த்தி அறிவியல் தத்துவம் கற்றுக்கொடுக்கிறார். எபிஸ்டமாலஜி மற்றும் மெட்டாஃபிசிக்ஸ், இந்திய தத்துவம் மற்றும் அரசியல் தத்துவம் ஆகியவற்றைக் குறித்து ஆராய்ந்துவருகிறார்.)

நன்றி: https://thewire.in/216863/means-reject-evolution-words-1982-judgment/

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வெள்ளி 2 பிப் 2018