ஜிஎஸ்டி: பெயின்ட் வரி குறையுமா?


பெயின்ட் பொருள்கள் ஜிஎஸ்டி வரி விதிப்பில் 18 சதவிகித வளையத்துக்குள் கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஜூலை 1ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரி விதிப்பில் பெயின்ட் பொருள்களுக்கு 28 சதவிகித வரி விதிக்கப்பட்டது. 28 சதவிகித வரியால் இத்துறை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வரியைக் குறைக்க வேண்டுமெனவும் இத்துறையினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இவர்களின் கோரிக்கை நிறைவேறும்விதமாக நடப்பு பட்ஜெட் தாக்கலில் வரி விதிப்பு 18 சதவிகிதமாக குறைக்கப்படும் என்று இத்துறையினர் மிகுந்த ஆர்வத்தோடு எதிர்நோக்கியுள்ளனர்.
இதுகுறித்து இந்திய பெயின்ட் அசோசியேஷன் சங்கத் தலைவர் அபிஜித் ராய் பிசினஸ் லைன் ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில், "பெயின்ட்டுக்கான வரி விகிதம் 18 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டால், தற்போதைய விலையிலிருந்து விலைக்குறைவு ஏற்பட்டு பெயின்ட் விற்பனை அதிகரிக்கும்” என்றார். பெயின்ட் தயாரிப்புக்குப் பயன்படும் மூலப்பொருளான டைட்டானியம் டையாக்சைடு (டி.ஐ.ஒ-2) வரியையும் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
அக்சோ நோபல் இந்தியா நிறுவனத்தின் தலைவரான ஜெயகுமார் கிருஷ்ணசாமி பிசினஸ் லைன் ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில், “இந்தியாவில் ரீ-பெயின்டிங் காலம் தற்போது 7 முதல் 10 வருடங்களாக அதிகரித்துள்ளது. முன்னதாக இதன் கால அளவு 5-7 வருடங்களாக இருந்தது. பெயின்ட் தயாரிப்பு நிறுவனங்களைப் பொறுத்தவரையில் டி.ஐ.ஒ-2 இறக்குமதிக்கான வரியைக் குறைக்க வேண்டுமென எதிர்பார்க்கிறோம். தற்போது 85 சதவிகித டி.ஐ.ஒ-2 இறக்குமதி செய்யப்படுகிறது” என்றார்.