பாவம் செய்த பாஜக பதில் சொல்ல வேண்டும் : மம்தா பானர்ஜி


“மத்திய அரசு தாக்கல் செய்யும் இந்த பட்ஜெட் தற்போதைய ஆட்சியின் கடைசி பட்ஜெட்டாக மட்டும் இருக்கக் கூடாது. இதுவே பாஜகவின் அரசியல் வரலாற்றின் கடைசி பட்ஜெட்டாகவும் இருக்க வேண்டும்" என்கிறார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.
நேற்று (ஜனவரி 31) மேற்கு வங்கத்தில் நடந்த கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்ட மம்தா பானர்ஜி, பாஜகவின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். “இந்திய மக்கள் இன்று அனுபவித்துவரும் பல இன்னல்களுக்கும் ஆளும் மத்திய அரசு கண்டிப்பாக பதில் சொல்லியே ஆக வேண்டும். விவசாயிகள் தற்கொலை, விலையேற்றம், ரயில்துறை திட்டங்களில் ஏற்பட்டிருக்கும் முடக்கம் என இந்திய மக்களுக்கு பா.ஜ.க ஆட்சி ஒரு பெரும் சுமையாக மாறிவிட்டது” என்றவர், நாம் என்ன சாப்பிட வேண்டும், எப்பொழுது சாப்பிட வேண்டும் என்பதையும்கூட இன்று முடிவு செய்யும் சக்தியாக பாஜக தன் யுத்திகளை வகுக்கிறது. இதையெல்லாம் முடிவு செய்ய அவர்கள் யார் என்று கேள்வி எழுப்பினார்.
பிற கட்சிகளையும் அவர் விட்டுவைக்கவில்லை. “தேசியக் கட்சிகளான காங்கிரசும் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பா.ஜ.க வின் எந்த செயல்பாடுகளுக்கும் முறையான எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. ஏனெனில் எங்களது கட்சியையும், கொள்கைகளையும் விமர்சிக்கவே அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை. காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜக இந்த மூன்றும்தான் இந்தியாவின் பணக்காரக் கட்சிகள் . தாங்கள் ஆட்சியிலிருந்தபோது சுரண்டிய அனைத்தையும் இன்று ஆட்சியில் இல்லாதபோது அவர்கள் சுதந்திரமாக அனுபவித்துவருகிறார்கள் .ஆனால் எங்களது கட்சிக்கோ தேர்தலில் நிற்பதற்கே நிதிப்பற்றாக்குறையாக இருக்கிறது” என்றார் மம்தா.
அருண் ஜேட்லி தாக்கல் செய்யும் மத்திய பட்ஜெட் மக்களவைத் தேர்தலில் மக்களை கவர்வதற்கான ஒரு மாய வலை என்று விமர்சித்த மம்தா, “இன்று (31 ஜனவரி) நாங்கள் தாக்கல் செய்திருக்கும் இந்த மாநில பட்ஜெட் ஒவ்வொரு துறையின் முன்னேற்றத்திற்கும் உதவும்” என்றார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இந்த செயல்பாடுகள் இனி மேற்கு வங்கத்தோடு நின்றுவிடாது. நமது கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் இனி ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் நலனுக்காகவும் பாடுபட வேண்டும் என்றும் கூறித் தன் கட்சி உறுப்பினர்களை சுறுசுறுப்பாக்கியுள்ளார் மேற்கு வங்க முதல்வர்.
திரிணாமுல் காங்கிரஸ் இனி தேசிய அளவில் போட்டியிடும் என்பதைச் சொல்லாமல் உணர்த்தியுள்ளது மம்தா பானர்ஜியின் இந்த உரை!