கட்டண உயர்வு: தஞ்சையில் மாணவர்கள் போராட்டம்!

தமிழக அரசின் பேருந்துக் கட்டண உயர்வைத் திரும்ப பெற வலியுறுத்தி தஞ்சாவூரில் கல்லூரி மாணவர்கள் 3ஆவது நாளாக இன்றும் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசு கடந்த மாதம் ஜனவரி 20 ஆம் தேதி முதல் பேருந்துக் கட்டணத்தை இருமடங்காக உயர்த்தியுள்ளது. இந்தக் கட்டண உயர்வால் ஏழை மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே இந்தக் கட்டண உயர்வை அரசு திரும்ப பெறுமாறு வலியுறுத்தி கல்லூரி மாணவர்களும், அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் கடந்த 28 ஆம் தேதி சிறிய அளவில் பேருந்துக் கட்டணம் குறைக்கப்பட்டது.
இந்நிலையில் தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் பேருந்துக் கட்டண உயர்வை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி, தொடர்ந்து 3 ஆவது நாளாக இன்று(பிப்ரவரி 1) வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் காரணமாக பல மாவட்டங்களில் கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையிலும் தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.