மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 பிப் 2018

விடுப்பில் சென்ற நீதிபதி சுக்லா

விடுப்பில் சென்ற நீதிபதி சுக்லா

உச்ச நீதிமன்றத் தீர்ப்பையடுத்து, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சுக்லா விடுப்பில் செல்வதாக நேற்று (ஜனவரி 31) அறிவிப்பு வெளியாகியுள்ளது.

குஜராத்தில் விதிகளை மீறிச் செயல்பட்டு வந்த மருத்துவக் கல்லூரியின் சேர்க்கைக்கு உச்ச நீதிமன்றமும், இந்திய மருத்துவ கவுன்சிலும் அனுமதி மறுத்திருந்தது. இந்த விவகாரத்தில் ஓய்வு பெற்ற ஒடிசா உயர் நீதிமன்ற நீதிபதி ஐ.எம். குடூஸி மற்றும் கல்லூரி அறக்கட்டளை தலைவர் ஆகியோர் கடந்த ஆகஸ்டு மாதம் சுக்லாவை சந்தித்ததாகத் தெரிவித்திருந்தது சிபிஐ. கடந்த செப்டம்பர் மாதம் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக குடூஸி உட்பட சிலர் மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. ஆனால், அதில் சுக்லாவின் பெயர் இடம்பெறவில்லை.

சிபிஐ நடத்திய விசாரணையில் குடூஸி தவறு செய்தது நிரூபணமாகி, அவர் கைது செய்யப்பட்டு, பின் ஜாமீனில் வெளிவந்தார். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதியன்று அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சுக்லா, அனுமதி மறுக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிக்கு மீண்டும் அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இந்தத் தீர்ப்பு பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியது.

இதனால் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளித்த விவகாரம் விசுவரூபம் எடுக்கத் தொடங்கியது. அவர் லஞ்சம் பெற்றுக்கொண்டு இந்த உத்தரவைப் பிறப்பித்ததாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்குக் கடந்த நவம்பர் மாதம் புகார்கள் குவிந்தன.

இந்நிலையில் இந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யச் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, சிக்கிம் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.அக்னிஹோத்ரி, மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதி பி.கே.ஜெய்ஸ்வால் ஆகியோரை நியமித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தக் குழுவானது விசாரணை நடத்தி இரு தினங்களுக்கு முன்பு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையில், தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு முறைகேடாக சுக்லா அனுமதியளித்ததாகவும் இத்தகைய நடவடிக்கைகளால் நீதித் துறைக்கே சுக்லா களங்கம் ஏற்படுத்திவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, “நீதித்துறை நெறிமுறைகளின்படி, நீதிபதி சுக்லா விருப்ப ஓய்வு பெறவேண்டும் அல்லது ராஜிநாமாவோ செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

இதற்கு சுக்லா மறுப்பு தெரிவித்ததையடுத்து, அவருக்கு நீதித்துறை சார்ந்த எந்த வித பணிகளையும் வழங்கக் கூடாது, அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பணியையும் திரும்பப் பெற வேண்டும் என்று அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், அவர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்யவும் அனுமதி வழங்கியது. பின்னர், அவர் பதவியை ராஜிநாமா செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு எழுத்துபூர்வமாகப் பரிந்துரை செய்தார்.

2005ஆம் ஆண்டு அலகாபாத் நீதிமன்ற நீதிபதியாகப் பதவி ஏற்ற சுக்லா, 2020ஆம் ஆண்டு ஜூலையில் ஓய்வு பெறவிருந்தார். இந்த நிலையில், நேற்று முதல் அவர் விடுப்பில் சென்றுள்ளார்.

இதைத் தொடர்ந்து அவர் மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் சான்றுகள் குறித்து ஆய்வு செய்து, பணியிலிருந்து அகற்றும் கண்டனத் தீர்மானத்தை மாநிலங்களவையில் கொண்டு வந்து விவாதிக்கலாமா என்பது குறித்து ஆலோசனை நடைபெற்றுவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கொள்கை அடிப்படையில் நடவடிக்கை எடுத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்குப் பாராட்டு தெரிவித்த காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் கபில் சிபல் இது அனைத்து வழக்குகளுக்கும் பொருந்தும் என்று தெரிவித்துள்ளார்.

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

வியாழன் 1 பிப் 2018