மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 பிப் 2018

மக்கள் நலனில் லாப நஷ்டம் பார்க்கக்கூடாது!

மக்கள் நலனில் லாப நஷ்டம் பார்க்கக்கூடாது!

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (ஜனவரி 31) நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டார் ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் தினகரன். சேவை மனப்பான்மையோடு அரசுப் பேருந்துகள் இயக்கப்பட வேண்டுமென்றும், மக்கள் நலனில் லாப நஷ்டம் பார்க்கக்கூடாது என்றும் அக்கூட்டத்தில் அவர் பேசினார்.

ஜனவரி 19ஆம் தேதியன்று, அரசு போக்குவரத்துக்கழகப் பேருந்துகளில் பயணக்கட்டணம் உயர்த்தப்பட்டதாக தமிழக அரசு அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்திலுள்ள பெரும்பாலான கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், பேருந்து கட்டண உயர்வுக்குக் கண்டனம் தெரிவித்து, நேற்று (ஜனவரி 31) திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஈக்காட்டில் ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினரும் சசிகலாவின் உறவினருமான தினகரன் ஆதரவாளர்கள் சார்பில் கூட்டம் நடத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் பேசிய தினகரன், போக்குவரத்து துறையில் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட, வேறு துறைகளில் இருந்து பணத்தை ஈடு செய்ய வேண்டுமென்று தெரிவித்தார். மேலும், “அரசு பேருந்துகளை, மக்கள் நலனுக்காக சேவை மனப்பான்மையோடு இயக்க வேண்டும். இதில், அரசாங்கம் லாப நஷ்டம் பார்க்கக்கூடாது” என்றார்.

“ஒரே இரவில் பேருந்து கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியிருக்கிறார்கள்; மக்களின் வாழ்வாதாரத்தில் கை வைத்திருக்கிறார்கள். இதற்குக் காரணம் போக்குவரத்து துறையில் ஏற்பட்டுள்ள நஷ்டம் என்று சப்பைக்கட்டு கட்டுகிறார்கள். பேருந்து கட்டண உயர்வைத் தாங்கிக்கொள்ள முடியாமல், மக்கள் ரயில்களில் செல்கின்றனர்.

வழக்கத்தை விட ரயில்களில் கூடுதலாகப் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை 2.25 லட்சம் அதிகரித்துள்ளது எனவும், மாத பயண அட்டையைப் பெற்றவர்கள் எண்ணிக்கை 5.5 லட்சமாக உயர்ந்துள்ளது எனவும் ஒரு புள்ளிவிவரம் வெளியாகியிருக்கிறது. ஒரு வாரத்தில் மட்டும் தமிழகத்திலுள்ள ரயில்வே துறைக்கு ரூ. 2 கோடி வசூலாகியிருக்கிறது. இதுபற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டும்” என்று பேசினார்.

பேருந்து கட்டண உயர்வை, சில தனியார் பேருந்து உரிமையாளர்கள் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொண்டனர் என்று தெரிவித்தார். ”தனியார் பேருந்து உரிமையாளர்கள் பயணக்கட்டணத்தை உயர்த்திக்கொள்ளவும், புதிய பஸ் ரூட்களை பெறவும் முன்வந்திருக்கிறார்கள். குறிப்பாக, கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அமைச்சர்களின் பினாமிகளுக்கு புதிய பேருந்து மார்க்க அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், இப்போது பல மடங்காக உயர்த்தப்பட்ட கட்டணத்தில் ஒரு ரூபாய் குறைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். இது அப்பட்டமான நாடகம். மலை போல உயர்த்திவிட்டு கடுகளவு குறைத்திருக்கிறது தமிழக அரசு” என்றார்.

மேலும், கட்சிக்கும் ஆட்சிக்கும் துரோகம் செய்த பன்னீர்செல்வத்துடன் கைகோர்த்த எடப்பாடி பழனிச்சாமி, அவர் முதலமைச்சராகத் தோள் கொடுத்த 18 எம்எல்ஏக்களை பதவி நீக்கம் செய்து துரோகம் இழைத்திருப்பதாகக் குற்றம்சாட்டினார். நீதிமன்ற தீர்ப்பு வெளியாகும்போது, எடப்பாடியின் ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும் என்று கூட்டத்தினரிடையே பேசினார் தினகரன்.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

வியாழன் 1 பிப் 2018