மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 பிப் 2018

12ஆயிரம் பேர் வேலையிழப்பு?

12ஆயிரம் பேர் வேலையிழப்பு?

சென்னையை அடுத்த ஆவடியில் செயல்பட்டு வரும் ராணுவ சீருடை தயாரிப்பு ஆலையை மூடும் முடிவு தொலைநோக்குப் பார்வையற்றது என்றும், மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவைக் கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

இந்திய ராணுவத்தினருக்கான சீருடைகளைத் தயாரிக்கும் ஆலைகள் உத்தரப்பிரதேசத்திலும், தமிழகத்திலும் செயல்பட்டு வருகின்றன. சென்னையை அடுத்த ஆவடியில் செயல்பட்டு வரும் ஆலையில், ராணுவத்தினருக்குத் தேவைப்படும் அனைத்து வகையான சீருடைகளும் தயாரிக்கப்படுகின்றன.

ராணுவ வீரர்களின் சீருடைகளுக்குப் பதிலாக, சீருடைப்படியாக ராணுவத்தினரின் பணி நிலையைப் பொறுத்து ஆண்டுக்கு ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை வழங்கலாம் என்று ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை செய்தது. இதனையடுத்து, ராணுவ வீரர்களுக்குச் சீருடை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், உத்தரப்பிரதேசத்திலுள்ள 4 ஆலைகள் மற்றும் ஆவடியிலுள்ள ஆலை என மொத்தமுள்ள 5 ஆலைகளும் வரும் ஏப்ரல் மாதம் முதல் மூடப்படவுள்ளன.

மத்திய அரசின் இந்த முடிவினால், ஆவடி தொழிற்சாலையில் பணியாற்றும் 2321 தொழிலாளர்கள் உட்பட நாடு முழுவதும் 12 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள் என்று தெரிவித்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ். இதுகுறித்து, இன்று (பிப்ரவரி 1) அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த முடிவு பணியாளர்களின் குடும்பங்களை மட்டுமல்லாமல், நாட்டின் பாதுகாப்புக்கும் ராணுவத்தின் மரியாதைக்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று தனது அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“ராணுவச் சீருடைகள் தனியாகத் தயாரிக்கப்பட்டு பொது இடங்களில் விற்பனை செய்யப்பட்டால், அதை யார் வேண்டுமானாலும் அணியலாம் என்ற நிலை உருவாகி விடும். அதை கட்டுப்படுத்துவது சாத்தியமற்றது. இதனால் ராணுவச் சீருடைகளுக்கு உரிய கம்பீரமும் மிடுக்கும் பறிக்கப்பட்டு விடும்.

மேலும், ராணுவ உடைகள் பாதுகாப்புத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படாமல் வெளியில் தயாரிக்கப்பட்டால், அது தேச விரோதிகள், பயங்கரவாதிகள் ஆகியோரின் கைகளுக்கு எளிதாக கிடைக்க வாய்ப்புள்ளது. இது நாட்டின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைந்து விடும்.

இதற்கெல்லாம் மேலாக மத்திய அரசு வழங்கும் ரூ.10,000 படியில் தரமான சீருடைகளை வாங்குவதும் சாத்தியமற்றது. இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் ஏழாவது ஊதியக்குழு அளித்த பரிந்துரையை அப்படியே செயல்படுத்துவது மிக மோசமான, விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆவடியில் இயங்கிவரும் ராணுவ சீருடை தயாரிப்பு ஆலை ஏராளமான விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ள ராமதாஸ், ஆவடி உட்பட நாடு முழுவதும் செயல்பட்டு வரும் 5 ஆலைகளும் தொடர்ந்து இயங்கும் என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட வேண்டுமெனக் கூறியுள்ளார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வியாழன் 1 பிப் 2018