இடைத்தேர்தல் முடிவுகள்: பா.ஜ.க விற்கு பின்னடைவு !


ராஜஸ்தான் மற்றும் மேற்குவங்க இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் பா.ஜ.க வை பின்னுக்குத் தள்ளி முன்னிலை வகிக்கின்றன .
ராஜஸ்தான் மாநிலத்தில் அஜ்மீர், அல்வார் மக்களவைத் தொகுதிகளிலும், மண்டல்கர் பேரவைத் தொகுதியிலும் கடந்த திங்கட்கிழமை அன்று நடைப்பெற்ற இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியுள்ளது .
அஜ்மீர் தொகுதியில் பா.ஜ.க சார்பில் ராம் ஸ்வரூப் லாம்பாவும், காங்கிரஸ் சார்பில் ரகு சர்மாவும் போட்டியிட்டுள்ளனர். அல்வார் தொகுதியில் ஜஸ்வந்த் சிங் யாதவ் மற்றும் காங்கிரஸ் சார்பில் கரன் சிங் யாதவ் போட்டியிட்டுள்ளனர். மண்டல்கர் தொகுதியில் சக்தி சிங் ஹதாவ் மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் விவேக் தகாது களத்தில் உள்ளனர். இதில் அல்வார், அஜ்மீர் மக்களவை தொகுதிகளில் எதிர்கட்சியான காங்கிரஸ் முன்னணியில் உள்ளது. மண்டல்கர் சட்டப்பேரவை தொகுதியில் ஆளும் பாஜக முன்னணி வகிக்கிறது.
ராஜஸ்தானில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வசுந்தரா ராஜே தலைமையிலான பாஜக அரசுக்கு, இந்த இடைத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அங்கு ரஜபுத் சமூக மக்கள் பாஜகவுக்கு எதிராக வாக்களிக்கப்போவதாக அறிவித்தனர். அவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் பாஜக இறங்கியபோதிலும் அது பலனளிக்கவில்லை என்பதையே இது வரையிலும் நடந்த வாக்கு எண்ணிக்கை காண்பிக்கிறது.