ஆன்லைனில் கலந்தாய்வு : அமைச்சர் அறிவிப்பு!

2018-19 ஆம் கல்வியாண்டு முதல் பொறியியல் கலந்தாய்வு ஆன்லைன் மூலம் மட்டும் நடைபெறும் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். மாணவர்கள் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலே பொறியியல் படிப்பில் சேரலாம் என்றும் கூறியுள்ளார்.
அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகள் என 500 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் தமிழகத்தில் இயங்கி வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் பொறியியல் படிப்புக்கான சுமார் 2 .77லட்சம் இடங்கள் ஒற்றைச்சாளர முறையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.
அனைத்துக் கல்லூரிகளுக்கும் மொத்தமாக மாணவர் சேர்க்கை நடத்துவதால் அதிக பொருட்செலவு, மனிதவளம் தேவைப்படுவதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது .இதுதவிர மாணவர்கள், பெற்றோர்களும் அலைச்சலுக்கு ஆளாகுகின்றனர்.
இந்த சிரமங்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை, ஆன்லைனுக்கு மாற்றப்படுவதாக. உயர் கல்வி துறை அமைச்சர், அன்பழகன், நேற்று உறுதி அளித்துள்ளார்.. இதற்கான ஏற்பாடுகள், முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக அதிகாரியான, பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ் தலைமையில் குழு அமைக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுதவிர மாணவர்களின் வசதிக்காகத் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உதவி கணினி மையங்கள் அமைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“பொறியியல் படிப்பில் சேர நுழைவுத் தேர்வு ஏதும் கிடையாது, பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தான் நடைபெறும் “ என்று உயர் கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.