மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 பிப் 2018

சிறப்புப் பார்வை: சட்டென மாறுது வானிலை!

சிறப்புப் பார்வை: சட்டென மாறுது வானிலை!

ஆரா

வானிலை என்பது சட்டென மாறுவதல்ல. வறண்ட வானிலையில், கருமேகங்கள் திரள்வதற்குக் கணிசமான கால அவகாசம் தேவை. அந்த கருமேகங்களை உடைத்துவிட காற்றழுத்தமும் தேவை. இதெல்லாம் நாம் வானத்தை அண்ணாந்து பார்க்கும் விநாடியில் நடந்துவிடுவதில்லை. ஆனால், நமக்கு அப்படித்தான் தோன்றும்.

அதுபோலத்தான் இன்றைய நிலைமையும். தமிழ்நாட்டின் அரசியல் வானிலை கடந்த சில நாள்களாக சட்டென மாறுவதுபோல ஒரு தோற்றம் இருக்கிறது. மோடி புராணம் பாடிக்கொண்டிருந்த அமைச்சர்கள் எல்லாம் இன்று மத்திய அரசை விமர்சிக்கிறார்கள். மத்திய அரசுக்குச் சவால் விடுகிறார்கள். தேசியக் கட்சிகள் என்ற பொதுப் பெயரில் பாஜகவையே தாக்குகிறார்கள். தொலைக்காட்சிகளைப் பார்த்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு தமிழனும் தன்னைத்தானே கிள்ளிப் பார்த்துக்கொள்கிறான்.

சில நாள்கள் முன்புவரைகூட மோடியைப் புகழ்ந்துகொண்டிருந்த அமைச்சர்களெல்லாம் இன்று மத்திய அரசைச் சொல்லிவைத்தாற்போல எதிர்ப்பதன் பின்னால் ஏதோ ஒரு திட்டமிட்ட அரசியல் இருக்கிறது என்பதை சின்னக் குழந்தையும் புரிந்துகொள்ள முடிகிறது.

அவர்களா இவர்கள்?

தமிழகத்தில் ஆளுநர் ஆய்வு செய்வதை தலைதாழ்ந்து ஆதரித்து, அடுத்த ஆய்வுக்கான அடியை தனது தலையில் வைக்குமாறு கேட்டுக்கொள்ள துணிந்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ‘மக்களின் ஆளுநர்’ என்று அழைத்தார். இன்று அவரே மத்திய அரசு பெரும்பாலான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கவில்லை என்று குற்றம் சாட்டுகிறார். கீழடி பணிகள் முடக்கப்பட்டிருப்பதாகச் சொல்லுகிறார்.

ஜிஎஸ்டி வரிவிதிப்பின்போது மாநில உரிமை பேசியவர்கள் எல்லாம் கொந்தளித்துக்கொண்டிருக்க, மத்திய அரசின் கிளிப்பிள்ளையாக மாறி வகுப்பெடுத்தவர் அமைச்சர் ஜெயக்குமார். இன்று அவர், ‘தமிழகத்துக்கு நிதி தன்னாட்சி வேண்டும். மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்துகொள்ளக் கூடாது’ என்று குரல் மாற்றுகிறார்.

‘மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்களைச் சந்தித்தேன்’ என்று ஒவ்வொரு முறை மோடியைச் சந்தித்துவிட்டு புளகாங்கிதம் அடையும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று, ‘தேசியக் கட்சிகள் தமிழகத்தில் காலூன்ற முடியாது’ என்று சவால் விடுகிறார். ‘மத்திய அரசு நிதி என்பதே மாநில அரசுகளின் நிதிதான்’ என்று புதிய பொருளாதார விளக்கம் தருகிறார்.

ஆகா... இப்போதாவது இவர்களுக்குப் புத்தி வந்ததே என்று மனது திருப்தி அடையத் துடிக்கிறபோதே, ‘இவர்கள் ஏன் இப்படி பேச ஆரம்பித்திருக்கிறார்கள்?’ என்ற சந்தேகம்தான் பெரிதாக எழுகிறது.

ஜெயலலிதா இறந்த நிமிடத்திலிருந்து இன்னும் சொல்லப்போனால் ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும்போதே மத்திய அரசின் அதிகாரக் கரங்கள் தமிழகத்தின் மீது படர்ந்தபோது அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் மாறாக வரவேற்ற இவர்களா இப்போது இப்படிப் பேசுவது என்பதுதான் அந்தச் சந்தேகம்.

தகுதி நீக்க வழக்குத் தீர்ப்பு நெருங்குகிறது

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்று ஆளுநரிடம் புகார் கொடுத்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் சபாநாயகர் தனபாலால் அதிரடியாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார்கள். அவர்கள் இதுகுறித்துத் தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணையெல்லாம் முடிந்து தீர்ப்புக்காகக் காத்திருக்கிறது. தீர்ப்பு யாருக்குச் சாதகமாக வந்தாலும் உடனடியாக எதிர்தரப்பு மேல் முறையீடு செய்யும் என்பது சட்ட வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படும் சங்கதி. ஆனால், அரசியல் வட்டாரத்தில் இந்தத் தீர்ப்பு ஏற்படுத்தப் போகும் விளைவு என்பது தமிழகத்தில் பெருத்த அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும்.

ஒருவேளை 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தவறு என்றும், அவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாகத் தொடருவார்கள் என்றும் தீர்ப்பு வந்துவிட்டால்... தமிழகச் சட்டமன்றத்தில் இப்போது ஒற்றை ஆளாக இருக்கும் தினகரன் 19 பேர் கொண்ட அணியாக மாறுவார். அவர் தமிழக முதல்வர்மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தால் அதை எதிர்க்கட்சியான திமுகவும் ஆதரித்தால் நிச்சயம் இந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு கவிழும் நிலை உருவாகலாம். மாறாக இந்தத் தீர்ப்பை அடுத்து தினகரன் தரப்பு நியாயத்தை உணர்ந்து மற்ற எம்.எல்.ஏக்களும் அவர் தரப்புக்குச் சென்றால் முதல்வர் மாறி ஆட்சி தொடரும் நிலையும் உண்டாகலாம்.

இன்னொரு பக்கம்... சபாநாயகரின் தீர்ப்பில் தலையிட முடியாது என்று நீதிமன்றம் மறுத்து எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்தை உறுதி செய்துவிட்டால், அதே ரீதியிலான தீர்ப்பு ஓ.பன்னீர் உள்ளிட்ட 12 பேர் மீதான தகுதி நீக்கம் செய்ய வேண்டிய வழக்கிலும் எதிரொலிக்க வேண்டிவரும். இதன்படி பார்த்தால் 18 தொகுதிகள் காலியாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் உருவாகும். ஒரு ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலே தேர்தல் ஆணையத்துக்கு மிக சவாலாக மாறிப்போன நிலையில் 18 தொகுதிகளில் மீண்டும் இடைத்தேர்தல் நடத்துவது பற்றி ஆளுநர் சில பரிந்துரைகளை மத்திய அரசுக்குச் செய்யக்கூடும்.

ஆக, இந்த வழக்கின் தீர்ப்பு எப்படி இருந்தாலும் தமிழக அரசின் ஆயுளை அது பாதிக்கும் என்பதை முதல்வரும், துணை முதல்வரும் உணராதவர்கள் அல்லர்.

பாஜக எதிர்ப்பே தமிழகத்தில் மூலதனம்!

நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் பெற்ற வெற்றி வெறும் பணத்தால் வாங்கப்பட்டது அல்ல என்பதையும் காலம் கடந்தே உளவுத்துறை அறிக்கை மூலம் உணர்ந்திருக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி. பாஜகவின் கைப்பாவையாகத் தமிழக அமைச்சரவை செயல்படுகிறது என்பது பொது அரங்கில் வலுவாக வைக்கப்பட்ட விமர்சனம்.

அதேபோல பிரதமர் மோடி திமுக தலைவர் கருணாநிதியை வீடு தேடி வந்து பார்த்தது என்பது சிறுபான்மை மக்கள் மீது திமுக பற்றிய ஒரு சந்தேகத்தையும் ஏற்படுத்தியது. மேலும், திமுக பாஜகவுடன் கூட்டணி போட ஆயத்தமாவதாகவும் ஒரு தகவல் பரவியது.

இந்த நிலையில் நிர்பந்தத்தால் பாஜக எதிர்ப்பு ஆயுதத்தைக் கையில் எடுத்திருக்கும் டி.டி.வி.தினகரன் அதை உறுதியாக கையில் பிடித்திருப்பதால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜக எதிர்ப்பு ஓட்டுகளான சிறுபான்மை ஓட்டுகள் அப்படியே தினகரனுக்கு விழுந்தன. ஆக, சிறுபான்மை மற்றும் பாஜக எதிர்ப்பு வாக்குகள் ஆளும் அதிமுக, திமுக ஆகியவற்றைவிட தினகரனுக்கே அதிகமாகக் கிடைத்திருப்பதை ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள் காட்டின.

இதையெடுத்தே திமுக தனது பாஜக எதிர்ப்புக் கொள்கையை மிக வேகமாக முன்னெடுக்கிறது. இனியும் தமிழகத்தில் பாஜக ஆதரவு அணுகுமுறையைப் பின்பற்றினால் மக்களின் தார்மிக ஆதரவை இழந்துவிடுவோம் என்ற உண்மையை இப்போது எடப்பாடி தலைமையிலான அரசும் உணரத் தொடங்கியிருப்பதன் அறிகுறியே மத்திய அரசின் மீதான இந்த விமர்சனங்கள். ஆக, ஒருவேளை பொதுத் தேர்தலைச் சந்திக்க நேர்ந்தால் ஆர்.கே.நகர் நிலைமை ஆகிவிடக் கூடாது என்பதால்தான் எடப்பாடி பழனிசாமி மிக சாதுர்ய அரசியலாக பாஜகவையும் எதிர்க்க இப்போதே தயாராகிவிட்டாரோ என்பதும் ஒரு கேள்வியாக நிற்கிறது.

மோடியின் கோபம்!

தமிழகத்தில் இருக்கும் ஆட்சியைப் பின்னால் இருந்து இயக்குவதால் தமிழக பாஜக மீது மக்களிடையே வெறுப்பு அதிகமாக இருப்பதாக மத்திய உளவுத்துறை அறிக்கைக்குப் பிறகு கோபம் அடைந்திருக்கிறார் பிரதமர் மோடி. அதனால்தான் கடந்த சில மாதங்களாகவே தமிழக முதல்வர் எடப்பாடிக்கோ, துணை முதல்வர் பன்னீருக்கோ தன்னை சந்திக்க நேரமே அவர் ஒதுக்கவில்லை. தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை ஒட்டி ஆளுநர் மூலம் தமிழக அரசியலைக் கையாள முடிவு செய்திருக்கும் மோடி, அதற்கான ஆயத்தங்களையும் தீட்டி வருகிறார்.

இந்த நிலையில், அடுத்து மக்களைச் சந்திக்க வேண்டுமென்றால் இந்த பாஜக எதிர்ப்புக் கொள்கையே முக்கியம் என்பதை அறிந்துதான் பாஜக ஆதரவில் மிதந்துகொண்டிருந்த தமிழக அமைச்சர்கள் இப்போது மெல்ல தரை தொட ஆரம்பித்திருக்கின்றனர்.

சுடுகாட்டை கடக்கும்போது பாடும் சிறுவர்கள்!

கிராமங்களில் இரவு நேரங்களில் சுடுகாட்டைக் கடக்கும்போது சிறுவர்களுக்குப் பயம் அதிகமாக இருக்கும். அப்போது தங்கள் பயத்தைப் போக்குவதற்காகவும், பயமில்லை என்ற உணர்வைத் தங்களுக்குள் ஏற்படுத்திக் கொள்வதற்காகவும் சத்தமாகப் பாடியபடியே சைக்கிளை வேகவேகமாக மிதிப்பார்கள். அது அந்தச் சிறுவர்கள் தங்களுக்குத் தாங்களே செய்துகொள்ளும் ஓர் உளவியல் தற்காப்பு ஏற்பாடு.

அந்தச் சிறுவர்களைப் போலத்தான் இப்போது தெரிகிறார்கள் நமது அமைச்சர்களும். தமிழக அரசு இப்போது தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு மற்றும் அதன் விளைவுகள் என்ற சுடுகாட்டைக் கடக்கும் சிறுவனைப் போல இருக்கிறது. அதனால்தான் சைக்கிளை திடீரென வேகவேகமாக மிதித்து, பாஜக எதிர்ப்புப் பாடலையும் வேகமாகப் பாட ஆரம்பித்திருக்கிறார்கள் அமைச்சர்கள். ‘நான் பயப்படவில்லை தெரியுமா?’ என்று சொல்லிக்கொண்டே கண்ணீர் வடிக்கும் காட்சிதான் நினைவுக்கு வருகிறது.

பாஜகவின் அக்மார்க் முத்திரை பெற்றவராக அறியப்பட்ட பன்னீர் செல்வமே இவ்வளவு உறுதியாக பேச ஆரம்பித்திருப்பதைப் பார்க்கையில் தமிழ்நாட்டு அரசியலின் வானிலை சட்டென மாறிக்கொண்டிருப்பது உறுதியாகிறது. மாறும் வானிலையால் யாருக்கு இடி, யாருக்கு மின்னல், யாருக்கு மழை என்பதை இந்த பிப்ரவரி மாதம் சொல்லிவிடும்!

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

வியாழன் 1 பிப் 2018