மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 பிப் 2018

சிறப்புக் கட்டுரை: வாழ்வாதாரத்துக்குப் போராடும் பனிப்பிரதேச மக்கள்!

சிறப்புக் கட்டுரை: வாழ்வாதாரத்துக்குப் போராடும் பனிப்பிரதேச மக்கள்!

சாரதா பாலசுப்ரமணியன்

ஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதி, இந்தியாவின் மிக முக்கியமான குளிர் பிரதேசமாக விளங்குகிறது. இந்தப் பகுதியின் 80,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான நிலப்பகுதி வருடத்தின் எட்டு மாதங்களுக்குக் குளிர் பாலைவனமாகவே காட்சியளிக்கிறது. இங்கு வாழும் மக்களில் 89 சதவிகிதப் பேர் கிராமப்புறங்களிலேயே உள்ளனர்.

லடாக்கின் தொலைதூர கிராமங்கள் நகரத்துடன் இணைப்பில் இல்லாமலும், அணுக முடியாதவையாகவும் உள்ளன. இந்தியாவின் மற்ற கிராமப்புறங்களில் உள்ள விவசாயத்துக்கும் லடாக்கின் கிராமப்புற விவசாயத்துக்கும் மிகுந்த வேறுபாடு உள்ளது. வருடத்தின் நான்கு மாதங்களுக்கு மட்டுமே இவர்களால் விவசாயம் மேற்கொள்ள இயலும். மற்ற காலங்களில் பனிப்பொழிவினால் வேளாண் நிலங்கள் மிகுந்த ஈரப்பதத்துடன் காணப்படும். இது வேளாண்மைக்கு உகந்ததாக இருக்காது. இதனால் சமூகப் பொருளாதார நிலைகளில் இங்கு வாழும் மக்கள் மிகவும் பின்தங்கியுள்ளனர். குறைவான நிலம், குறைவான உற்பத்தி, ஊழியர்கள் பற்றாக்குறை, அறுவடைக்குப் பிந்தைய பணிகளில் நிலவும் தொய்வு மற்றும் உற்பத்தி செய்த பொருள்களைச் சந்தைப்படுத்துதல் ஆகிய சிக்கல்கள் அதிகளவில் நிலவுகின்றன.

குளிர்காலங்களில் நாட்டின் இதர பகுதிகளிலிருந்து கொண்டுவரப்படும் காய்கறிகள் லடாக்கில் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால், குளிர் காலங்களில் இம்மக்கள் பச்சைக் காய்கறிகளை உண்ணுவதைப் பெரும்பாலும் தவிர்க்கின்றனர். இதனால் இவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. இப்பகுதியில் வாழும் விவசாயிகளைப் பொறுத்தவரையில் குளிர்காலங்களில் கடைகளில் கிடைக்கும் உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் காய்கறிகளை வாங்கி உணவுக்குப் பயன்படுத்துகின்றனர். சிலர் கேரட் போன்ற காய்கறிகளைப் பறித்து உணவுக்குப் பயன்படுத்திக் கொள்கின்றனர். பெரும்பாலான உள்ளூர் மக்கள் இறைச்சி, பருப்பு வகைகள் மற்றும் பால் பொருள்களையே குளிர் காலங்களில் உணவுக்கு எடுத்துக் கொள்கின்றனர்.

“நாட்டின் மற்ற பகுதிகளில் தொடர்ச்சியாக வருடம் முழுவதும் சுழற்சி முறையில் விவசாயம் நடந்துகொண்டே இருக்கும். ஆனால், இங்கோ நான்கு மாதங்கள் மட்டுமே விவசாயம் செய்ய இயலும். மோனோ அறுவடை மட்டும்தான் இம்மண்ணில் சாத்தியமாக உள்ளது” என்கிறார் தலைமை வேளாண் அதிகாரி தஷி சேதன். குளிர்காலங்களில் இப்பகுதியில் காய்கறிகளை உற்பத்தி செய்ய முடிந்தால் இவர்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவு கிடைப்பது மட்டுமின்றி, அங்குள்ள பாதுகாப்புப் படையினருக்கும் இவர்களால் சத்தான காய்கறிகளை வழங்க இயலும்.

“மிகக் குறைவான மக்கள் நெருக்கடி கொண்ட இப்பகுதிகளில் வேளாண்மைக்கான தொழில்நுட்ப வசதிகள் குறைவாக இருப்பதோடு ஊழியர்களுக்கான செலவும் அதிகமாக உள்ளது” என்று கூறுகிறார் அனுப் ராஜ். இவர் காஷ்மீர் வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (எஸ்.கே.யூ.ஏ.எஸ்.டி) அறிவியலாளராக உள்ளார்.

திபெத்தியப் பகுதிகளிலும் இதேபோன்ற சூழ்நிலைதான் நிலவுகிறது. ஆனால், அப்பகுதியில் பசுமை வீடுகளை அமைத்து விவசாயம் மேற்கொள்கின்றனர். அதேமுறையை லடாக்கிலும் வேளாண் துறை கொண்டுவர முயற்சித்தது. சாபு கிராமத்தில் உள்ள சேரிங் ஆங்சோக் என்பவர் எட்டு வருடத்துக்கு முன்பு பசுமை இல்ல விவசாயத்தைக் கையிலெடுத்தார். தொடக்கத்தில் பிளாஸ்டிக் கூரைகள், போர்வைகள் மற்றும் மரத் துண்டுகளைப் பயன்படுத்தி இவ்வகையில் விவசாயம் மேற்கொண்டனர். “பசுமை இல்லம் அமைக்க அரசாங்கம் 50 சதவிகித மானிய உதவி வழங்கியது. நான் இந்தப் பசுமை இல்லத்தை அமைக்க 1.5 செலவிட்டேன். இதில் அரசாங்கம் எனக்கு 80,000 ரூபாயை மானியமாக அளித்தது. இதனைக்கொண்டு நான் கூடுதலாகக் காய்கறிகளை உற்பத்தி செய்து விற்பனை செய்தேன்” என்கிறார் ஆங்சோக்.

இருப்பினும் பசுமை இல்லங்கள் அமைக்கச் செலவு அதிகமாக இருப்பதால் எல்லா விவசாயிகளாலும் இதைச் செய்ய இயலவில்லை. மற்ற விவசாயிகள் அகழி பண்ணைகள் (low tunnel) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி காய்கறிகள் உற்பத்தியில் ஈடுபடுகின்றனர். இந்த வகையில் காய்கறி உற்பத்தியில் ஈடுபட விவசாயிகளுக்கு 2,000 ரூபாய் மட்டுமே போதுமானது. இந்தத் தொழில்நுட்பமானது குறைந்த செலவில் மட்டுமல்ல, சிறியதாகவும் இருக்கிறது. மேலும், எங்கு வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ள இயலும். கிரிஷி விக்யான் கேந்த்ரா (கே.வி.கே) இந்தத் தொழில்நுட்பத்தை அப்பகுதி கிராம விவசாயிகளிடம் பரப்பி வருகிறது.

ஏழை மனிதனின் பசுமை இல்லமாக அறியப்படும் அகழி பண்ணைகள், சாங்தாங்க் போன்ற உயர் மலைப் பகுதிகளில் மூலிகைகள் மற்றும் காய்கறிகளை வளர்க்கவும் பயன்படுத்தப்படுகின்றன. பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி பொருள்களைப் பயன்படுத்தி பசுமை இல்லம் அமைக்கப்படுகிறது. இதன்மூலம் இதற்குள்ளேயே வளர்க்கப்படும் தாவரங்களின் வேர்ப்பகுதி பாதுகாக்கப்படுகிறது. இவற்றில் தர்பூசணி மற்றும் முலாம்பழம் ஆகியவை வளர்க்க முடிகிறது என்று எஸ்.கே.யூ.ஏ.எஸ்.டி சோதனையின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது. இது செப்டம்பரில் அறுவடை செய்யப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இத்தகைய பழங்களின் இனிப்புத்தன்மை கூடுதலாக உள்ளது. இங்கு விளையும் பழங்களின் கரையக்கூடிய சர்க்கரையின் மொத்த அளவு 17-18 சதவிகிதமாக உள்ளது. மூன்று வருட பயிற்சிக்குப் பிறகு தற்போது விவசாயிகள் சாகுபடி செய்யத் தொடங்கியுள்ளனர் என்று அறிவியலாளர்கள் நிரூபிக்கின்றனர். தற்போது கார்கில் மற்றும் ஜங்ஸ்கர் ஆகிய பகுதிகளில் இதன் சாகுபடி சிறப்பாகவே நடைபெறுகிறது.

தர்பூசணி மற்றும் முலாம்பழம் மட்டுமின்றி ஆப்ரிகாட் (வாதுமைப் பழம்) பழங்களும் இங்கு வணிகப் பயன்பாட்டுக்காகப் பயிரிடப்படும் முக்கிய விளைபொருளாக உள்ளது. இதுமட்டுமின்றி வைட்டமின் சத்து நிறைந்த ‘சீ பக்தோர்ன்’ வகை பழங்களும் இப்பகுதிகளில் அதிகம் விளைகின்றன. ஆப்ரிகாட் பழங்களை உலர்த்தவும், பதப்படுத்தி பேக்கிங் செய்யவும் விவசாயிகளுக்கு நிறைய உதவிகள் தேவைப்படுகின்றன. “ஆப்ரிகாட் பழங்களைப் பேக்கிங் செய்ய உதவி கிடைத்தால் எங்களால் 100 சதவிகிதம் தரமான, இயற்கையான ஆப்ரிகாட் பழங்களைத் தயார் செய்து கொடுக்க இயலும். இவற்றுக்கான சந்தை மதிப்பு மிக அதிகமாக உள்ளது” என்கிறார் ராஜ்.

இங்கு ஆப்பிள்களும் நன்கு விளைகிறது. ஆனால், பூச்சித் தாக்குதல்கள் காரணமாக இந்த ஆப்பிள்கள் விற்பனைக்கு வெளியில் வருவதில்லை. ஆப்பிள் தோட்டங்களில் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தினால் இந்தப் பிரச்னைக்கு உடனடியாகத் தீர்வு கண்டுவிடலாம். “நாங்கள் புத்த மார்க்கத்தைப் பின்பற்றுபவர்கள். அதனால் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தக் கூடாது என்று முடிவெடுத்துள்ளோம்” என்றார் சேதன். செப்டம்பர் மாதங்களில் தக்காளி வரத்து அதிகரிக்கும். ஆனால், மக்கள் இவற்றின் மீது பெரிதாக ஆர்வம்கொள்வதில்லை. ஆப்பிள் பழச்சாறு பாட்டில்களில் அடைத்து உள்ளூரில் விற்பனை செய்யப்படுகிறது.

“நாங்கள் மயக்க மருந்துகளைத் தெளிக்க திட்டமிட்டோம். ஆனால், பூச்சிகள் இறக்கும் என்று மக்கள் நினைக்கிறார்கள். அதனால் அவர்கள் பயன்படுத்த முன்வரவில்லை” என்று சேதன் கூறுகிறார். மேலும், குளிர்காலத்தில் மண் இறுக்கமாக இருப்பதால் மண்புழுக்கள் தேவைப்படுகின்றன. பழங்கள் மற்றும் காய்கறிகள் மட்டுமின்றி கிலேடியோலஸ் போன்ற சிறப்புமிக்க மலர்களும் இங்கு விளைகின்றன. இங்கு விளையும் கிலோடியோலஸ் மலர் உலகத் தரத்திலானது. ஹாலந்து மற்றும் பிரான்சில் மட்டும்தான் இந்தத் தரத்தில் மலர்கள் கிடைக்கின்றன. பசுமை இல்ல வசதிகள் கிடைத்தால் அதிகளவில் இந்த மலர்களை உற்பத்தி செய்யலாம். ஆனால், இவற்றை வெளியில் எடுத்துச் சென்று சந்தைப்படுத்துவதுதான் சிக்கலாக உள்ளது. “இங்கு பால் மட்டும்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. பாலைக்கொண்டு தயிர், வெண்ணெய் உள்ளிட்ட பொருள்கள் தயாரிக்கப்படுவதில்லை. பால் பொருள்களை உற்பத்தி செய்தால் வருவாய் இருமடங்கு அதிகரிக்கும். பட்டாணியைப் பேக்கிங் செய்தால் அவற்றையும் விற்பனை செய்யலாம்” என்கிறார் வேளாண் துறை அதிகாரி ஆங்சோக்.

“இங்கு உற்பத்தியாகும் விதைகள் மிகவும் தரமானவை. ஆனால், இந்த விதைகளை விற்பனை செய்வது குறித்து எங்களுக்குத் தெரியவில்லை. விதைகளை விற்பனை செய்ய அரசின் சான்றிதழ் தேவைப்படுகிறது. மேலும், இவற்றை விற்பனை செய்யவும், பேக்கிங் செய்யவும் முதலீடுகள் தேவைப்படுகின்றன” என்கிறார் சேதன். விவசாயப் பணி இந்தப் பகுதியில் கடினமான பணியாகவே இருக்கிறது. இதனால், சிலர் விவசாயத்தைக் கைவிடுத்து சுற்றுலாத் துறையில் நுழைகின்றனர். முன்பெல்லாம் இப்பகுதி விவசாயிகள் பார்லி மற்றும் கோதுமை போன்றவற்றையும் பயிரிட்டு வந்தனர். தற்போதும் சில விவசாயிகள் பார்லி பயிரிட்டு வருகின்றனர். கோதுமை பயிரிடுவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டனர்.

பொது விநியோகத் திட்டத்தில் (பி.டி.எஸ்) லடாக் மக்களுக்குக் கோதுமை மற்றும் பார்லி கிடைப்பதே இவர்கள் உற்பத்தியை நிறுத்தியதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. ஆனால், தற்போது பொது விநியோகத் திட்டத்தில் நபர் ஒருவருக்கான கோதுமையின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. “பொது விநியோகத் திட்டத்தில் உணவுப் பொருள் வழங்குவதை நிறுத்திவிட்டால் நாங்கள் மீண்டும் உற்பத்தி செய்யத் தொடங்குவோம். தொழில்நுட்ப வசதிகள் உயர்ந்து, உற்பத்திப் பொருள்கள் பிரீமியம் விலை அதிகரித்தால் நிச்சயமாக வறுமை கட்டுக்குள் வரும். சுற்றுலாத் துறையில் அதிக வருவாய் கிடைக்கிறது. ஆனால், லடாக் எல்லைப் பகுதியாக இருப்பதால் சுற்றுலாத் துறையின் வருமானம் நிலையாகக் கிடைப்பதில்லை. அதனோடு ஒப்பிடும்போது விவசாயம் நிலையானதாக இருக்கும். வேளாண் துறையை ஊக்குவித்தால் சுற்றுலாத் துறையின் வருவாயை மிஞ்சிவிடும். இதன்மூலம் உள்ளூர் மக்களின் வருவாயும் அதிகரிக்கும்” என்கிறார் சேதன்.

நன்றி: வில்லேஜ் ஸ்கொயர்

தமிழில்: பிரகாசு

மின்னஞ்சல் முகவரி: [email protected]

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வியாழன் 1 பிப் 2018