மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 31 ஜன 2018

சிறப்புப் பார்வை: 1500 குழந்தைகளுக்கு உயிர் தந்தவர்!

சிறப்புப் பார்வை: 1500 குழந்தைகளுக்கு உயிர் தந்தவர்!

1940ஆம் ஆண்டு. வீட்டிலேயே பிரசவம் நடைபெற்ற காலம் அது. மிகுந்த பதற்றத்துடனும், படபடப்புடனும் ஒரு பெண் இங்கும் அங்கும் அலைந்துகொண்டிருந்தார். அவர் பெயர் நரசம்மா. தன் அத்தையின் பிரசவத்திற்காக தன்னை மருத்துவச்சியாக தயார் செய்து கொண்டிருந்தார். அப்போது நரசம்மாவுக்கு வயது 20 மட்டுமே. சில மணி நேர போராட்டங்களுக்குப் பிறகு அலறல் சத்தத்துடன் அந்தக் குழந்தை, பூமியில் காலடி பதிக்கிறது. அன்று தனது முதல் பிரசவ சேவையை வெற்றிகரமாக முடித்தார் நரசம்மா. 70 ஆண்டுகள் கழித்து இவரது இந்தச் சேவைக்கு நாட்டின் உயரிய விருதான பத்ம விருது கிடைக்கும் என்பதை அப்போது அவர் உணர்ந்திருக்கமாட்டார்.

கர்நாடகா மாநிலம் தும்கூரைச் சேர்ந்தவர் நரசம்மா. இவருக்கு 12 வயதிலேயே அன்ஜினப்பா என்பவருடன் திருமணம் முடிந்தது. இவரது பாட்டி மார்கம்மா, பிரசவம் பார்ப்பதில் தேர்ச்சி பெற்றவர். அந்தக் காலகட்டத்தில் தும்கூர் பகுதியில் மார்கம்மா ஒரு பிரபலமான குழந்தைப் பேறு மருத்துவச்சி. மருத்துவத் துறையில் சுமார் 70 ஆண்டுகளாக மக்களுக்குச்சேவை செய்து இறந்துள்ளார். அவரிடம், சிறு வயது முதலே நரசம்மாள் குழந்தைப் பேறு பார்ப்பது எப்படி என்னும் பயிற்சியைப் பெற்றுள்ளார். மார்கம்மாவின் காலத்திற்குப் பிறகு அப்பகுதி மக்களின் குழந்தைப் பேறுகளை நரசம்மாவே கவனித்து வந்தார்.

நரசம்மாவின் முதல் குழந்தைப் பேறு வெற்றியடைந்த உடன் அவரது அத்தை, "நரசு, இதுதான் உன் தொடக்கம். உன் கை ரொம்ப ராசியானது" என்று ஊக்கம் அளித்துள்ளார்.

தன் அத்தையிடம் கிடைத்த பாராட்டைத் தொடர்ந்து, நரசம்மா இந்த சேவைக்காகத் தன்னை முழு மனதுடன் அர்ப்பணித்துக் கொண்டார். விரைவில் பவாகடா கிராமம் முழுவதும் நரசம்மாவின் புகழ் பரவத் தொடங்கியது. முறையான சாலை வசதி, பேருந்து வசதி ஆகியவை இல்லாத பவாகடா கிராமத்தில் ஒற்றைப் பெண்மணியாகத் தனது மருத்துவப் பணியைத் தொடர்ந்தார். இவரது சேவையைப் பாராட்டி அந்த கிராமம், இவருக்கு `சுலகாட்டி' என்ற பட்டதை வழங்கியது. கன்னடத்தில் `சுலகாட்டி' என்றால் பிரசவம் பார்ப்பது என்று பொருள்.

மாறாத கைராசி

நாளடைவில் அந்தக் கிராமம் வளர்ச்சியடைந்து அரசால் மருத்துவமனைகள் கட்டப்பட்டாலும், நரசம்மாவின் கைராசிக்கு மக்கள் கூட்டம் இவரை நோக்கியே படையெடுத்தது. இவரது 70 ஆண்டுகால பிரசவ சேவையில் இதுவரை 1500க்கும்மேற்பட்ட பிரசவங்களைப் பார்த்துள்ளார். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் அன்று முதல் இன்று வரை தன்னிடம் பிரசவத்திற்கு வருபவர்களிடம், சிகிச்சைக்காக ஒரு நயா பைசாகூட வாங்கியதில்லை. மேலும் குழந்தை பிறந்து ஒரு வாரம் வரையில் இவரது கட்டுப்பாட்டில்தான் அந்தக் குழந்தைகள் வளர்க்கப்படுகின்றனர். நரசம்மாவின் மகள் ஜெயம்மா உட்பட 180க்கும் மேற்பட்ட பெண்களுக்கு குழந்தைப் பேறு பார்ப்பதற்கு இலவசப் பயிற்சி அளித்துள்ளார்.

வாழ்நாள் சாதனைக்கான அங்கீகாரம்

பிரசவத்திற்கு எனப் புதிய பல தொழில்நுட்பங்கள் வர வர அப்பகுதியில் மருத்துவச்சிகளின் தேவை குறைந்தது. இருப்பினும் தன்னிடம் பிரசவத்திற்கென வருபவர்களை ஒருபோதும் நரசம்மா ஏமாற்றியதில்லை. நரசம்மாவின் சாதனைகளை மெச்சும் விதமாக, அவரது வாழ்க்கை பற்றி ஒன்பதாம் வகுப்புப் பாடப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. 70 ஆண்டுகளாக எதையும் எதிர்பாராமல், நூற்றுக்கணக்கான பிரசவங்களை பார்த்த இந்த பெண்மணியைப் பாராட்டி, குடியரசு தினத்தன்று (ஜனவரி 26) இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கிக் கவுரவித்தது.

தற்போது 97 வயதான நரசம்மாவுக்கு, கடந்த 29ஆம் தேதியன்று திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து கன்னிங்காம் சாலையிலுள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவரைப் பரிசோதித்த டாக்டர்.கே.எஸ்.சதீஷ், "97 வயதானதால் இவரது நுரையீரல் பாதிப்படைந்து, சுவாசக் கோளாறு ஏற்பட்டுள்ளது. மூச்சுத் திணறலைச் சமாளிக்க ஆக்ஸிஜன் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இவரது நிலையில் முன்னேற்றம் அடைந்து வருகிறது" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தன் வாழ்நாளின் பெரும் பகுதியை மருத்துவப் பணிக்காக அர்ப்பணித்து, தற்போது இறுதி மூச்சை சுவாசித்துவரும் இந்தப் பெண்மணி பெற்றுள்ள பத்மஸ்ரீ விருது அவரது மகத்தான பணிகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது. இவரது குழந்தைகள் இவரது சாதனைகளை முன்னெடுத்துச் செல்வதில் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

நன்றி: https://www.thenewsminute.com/article/meet-padma-shri-awardee-k-taka-who-delivered-babies-70-yrs-free-cost-75435

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 31 ஜன 2018