மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 31 ஜன 2018

உற்சவர் சிலை: ஸ்தபதிக்கு நீதிமன்றம் கெடு!

உற்சவர் சிலை: ஸ்தபதிக்கு நீதிமன்றம் கெடு!

தலைமை ஸ்தபதி முத்தையாவைக் கைது செய்யத் தடை விதித்த சென்னை உயர் நீதிமன்றம், அவர் 10 நாட்களுக்குள் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் புதிதாகச் செய்யப்பட்ட உற்சவர் சிலையில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதனடிப்படையில், கடந்த 2ஆம் தேதி ஏகாம்பரநாதர் கோயிலில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி ரகுபதி தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

புதிய சோமாஸ் கந்தர் சிலை மட்டுமின்றி அம்மன் உள்ளிட்ட பழைய சிலைகளிலும் பொட்டளவுக்குக்கூடத் தங்கம் இல்லை என்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கடந்த டிசம்பர் 26 முதல், அறநிலையத் துறை அதிகாரிகள், அறங்காவலர், ஸ்தபதி முத்தையா உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் விசாரணை நடத்திவருகிறார்.

இந்த வழக்கில் கடந்த ஒரு மாதமாகத் தலைமறைவாக இருக்கும் ஸ்தபதி முத்தையா ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அதில் “உற்சவர் சிலை, முழுக்க முழுக்கத் தங்கத்தில் அல்லாமல் பஞ்சலோக சிலையாகத்தான் வடிவமைக்கப்பட்டது. சிலைக்குத் தேவையான தங்கத்தை வசூலிக்கும் பொறுப்பில் நான் இல்லை. தங்கத்தை முறைகேடு செய்துவிட்டதாக என் மீது வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள் . எனவே என் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும். முன் ஜாமீன் அளிக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று (ஜனவரி 31 ) நீதிபதி மகாதேவன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. முத்தையாவைக் கைது செய்யத் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அப்போது ஆஜரான ஐஜி பொன்மாணிக்கவேல், “தங்கம் மோசடி செய்து கடத்தப்பட்டது உண்மை என்றும் 30 நாட்களாகத் தலைமறைவாக இருக்கும் முத்தையாவுக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது” என்றும் கோரினார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ”நாளை முதல் 10 நாட்களுக்குத் தொடர்ந்து திருச்சியில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் முன்பு முத்தையா ஆஜராக வேண்டும். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அந்த விசாரணையின் அடிப்படையில் முன் ஜாமீன் கொடுப்பது குறித்துப் பரிசீலிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

புதன் 31 ஜன 2018