800 நாட்கள் போராட்டத்தை வாபஸ் பெற்ற வாலிபர்!

கேரளாவில் தனது சகோதரன் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக சி.பி.ஐ.விசாரணை நடத்தக் கோரி திருவனந்தபுரம் தலைமைச் செயலகம் முன்பு 800 நாட்களாக போராட்டம் நடத்திவந்த ஸ்ரீஜித், இன்று தன்னுடைய போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளார்.
கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீஜிவ். 2014ஆம் ஆண்டு இவரை ஒரு வழக்கு விசாரணைக்காக பாரசாலை போலீசார் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் மர்மமான முறையில் இறந்துள்ளார். ஆனால், போலீசார் ஸ்ரீஜிவ் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிவித்தனர்.
இதனை ஸ்ரீஜிவ்வின் குடும்பத்தினர் ஏற்க மறுத்தனர்; ”சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்; ஸ்ரீஜிவ்வின் மரணத்திற்குக் காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவரது சகோதரர் ஸ்ரீஜித் மாநில அரசிடம் மனு கொடுத்தார்.
தனது சகோதரனின் மரணத்துக்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி ஸ்ரீஜித் திருவனந்தபுரம் தலைமைச் செயலகம் முன்பு கடந்த 800 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டார். அவரது போராட்டத்துக்கு இளைஞர் அமைப்புகள், பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர்.
கேரள முதல்வர் பினராய் விஜயன் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்ரீஜித்தை அழைத்து, கோரிக்கையை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க முயற்சிக்கும்; அதனால் போராட்டத்தைக் கைவிடும்படிக் கூறினார். கேரள அரசாங்கம் ஸ்ரீஜிவ்விற்கும் அவரது குடும்பத்திற்கும் 10 லட்சம் இழப்பீடு வழங்கியது. அந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கும் என்ற உத்தரவு வெளியாகும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என ஸ்ரீஜித் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அவரது சகோதரர் மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து கடந்த 800 நாட்களாக நடத்திவந்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக ஸ்ரீஜித் அறிவித்துள்ளார்.