சொட்டு மருந்து போட மறுத்த தந்தை மீது புகார்!


தூத்துக்குடி அருகே தனது 8 மாத குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதை ஏற்க மறுத்த குழந்தையின் தந்தை மீது காவல்நிலையத்தில், மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரி புகார் அளித்துள்ளார்.
'போலியோ வைரஸ்’ ஏற்படுத்துகின்ற தொற்றுநோய் தான் இளம்பிள்ளைவாதம். இந்நோய் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அதிகமாகப் பாதிக்கிறது. எனவே ஆண்டுதோறும் இரு சுழற்சி முறையில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. தமிழகத்தில் நடப்பு ஆண்டில் ஜனவரி 28 மற்றும் வரும் மார்ச் 11 ஆம் தேதிகளில் சொட்டு மருந்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் முதல் கட்டமாக கடந்த 28ஆம் (ஞாயிற்றுக்கிழமை) தேதி தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. இதைதொடர்ந்து, போலியோ சொட்டு மருந்து பெறாமல் விடுபட்ட குழந்தைகளுக்கு வீடு வீடாகச் சென்று செவிலியர்கள் சொட்டு மருந்து வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடி அருகேயுள்ள மறவன்மடத்தைச் சேர்ந்த குழந்தையின் தந்தை சண்முகவேல், ' எனது 8 மாதக் குழந்தைக்கு இயற்கை மருத்துவம் அளித்து வருவகிறேன். அதனால் போலியோ சொட்டு மருந்து போட அனுமதிக்க முடியாது' என்று கூறியுள்ளார்.
இந்த தகவலறிந்து வந்த மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர், போலியோ சொட்டு மருந்தின் முக்கியத்துவத்தைப் பற்றி சண்முகவேலிடம் கூறினார். ஆனால் அந்த அறிவுரை சண்முகவேலிடம் எடுபடாத நிலையில் புதுக்கோட்டை காவல்நிலையத்தில் இவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து சண்முகவேலிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
"சிலர் சமூக வலைத்தளங்களில் தடுப்பூசிகள் பற்றிய தவறான தகவல்களை பரப்பி வருகின்றார்கள். அவற்றை நம்பாமல் அனைவரும் தங்களது குழந்தைக்குப் போலியோ சொட்டு மருந்து வழங்க வேண்டும். மேலும் போலியோ இல்லாத இந்தியாவை உருவாக்க அனைவரும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஒத்துழைக்க வேண்டும்" என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.