ஒரே தேர்தல் என்பது வெறும் கூச்சல்: ப.சிதம்பரம்

நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் ஜனவரி 29ஆம் தேதி உரையாற்றிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்று விருப்பம் தெரிவித்தார். இதற்குப் பதிலளிக்கும் விதமாக, டெல்லியில் நேற்று (ஜனவரி 30) நடந்த விழாவொன்றில் கலந்துகொண்ட முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமில்லை என்று கூறினார்.
கடந்த 29ஆம் தேதியன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. இதில் கலந்துகொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இந்தியாவில் தேர்தல் நடத்தப்படுவதில் மாற்றம் உண்டாக வேண்டும் என்று தெரிவித்தார். ஒவ்வொரு மாநிலத்திலும் தனித்தனியாகத் தேர்தல் நடத்துவதால் அரசுக்குச் செலவு அதிகமாகிறது என்றும், இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடத்தலாம் என்றும் தனது உரையில் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், நேற்று டெல்லியில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் எழுதிய ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ என்ற நூல் வெளியீட்டு விழா நடந்தது. முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இந்த நூலை வெளியிட்டார்.
இந்த விழாவில் பேசிய ப.சிதம்பரம், ஒரே நேரத்தில் மத்தியிலும் மாநிலத்திலும் தேர்தல் நடத்துவது சாத்தியமில்லை என்று கூறினார்.
“ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முடியாது. அதற்கான அதிகாரத்தை, நமது அரசியல் சாசன சட்டம் வழங்கவில்லை. ஒரே தேசம், ஒரே வரி என்பது வெற்று அறிவிப்பானது; அதுபோலவே, ஒரே தேசம் ஒரே தேர்தல் என்பதும் வெறும் கூச்சலாகப் போகிறது.
நாடாளுமன்ற ஜனநாயகரீதியாகப் பார்த்தாலும், இது சாத்தியமில்லாத விஷயம். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியை முறியடிக்கும் விதமாக, காங்கிரஸினால் வலுவான கூட்டணியை அமைக்க முடியும்” என்று பேசினார் ப.சிதம்பரம். குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தியதற்கு அடுத்த நாள் அவர் இந்தக் கருத்தை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டில் சில மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அதனுடன் சேர்த்து நாடாளுமன்றத் தேர்தலும் நடத்தப்படலாம் என்று சமீபத்தில் தகவல் வெளியானது. இந்த நிலையில், அதற்கு எதிரான நிலையில் சிதம்பரத்தின் பேச்சு அமைந்துள்ளது.