சென்னையில் சுயாதீன திரைப்பட விழா!

மாற்று சினிமா குறித்துப் பல்வேறு நிகழ்வுகளைத் தொடர்ச்சியாக நடத்திவரும் தமிழ் ஸ்டுடியோ இயக்கம் சென்னையில் சுயாதீன திரைப்பட விழாவை நடத்த உள்ளது.
எவ்வித வணிக சமரசங்களுக்கும் இடம் கொடுக்காமல் தணிக்கைத் துறையின் கத்திரிகளுக்கு பயப்படாமல் தான் தேர்ந்துகொண்ட கதையைத் திரைப்படமாக மாற்ற முயலும் இயக்குநர்கள் படமெடுக்கும் முறைகளிலும் மாற்றங்கள் செய்து இயங்குகின்றனர். இவர்கள் உருவாக்கும் படங்கள் வெள்ளிக்கிழமைதோறும் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் அல்ல. மாறாக வெகுஜன சினிமா காண்பிக்க மறந்த, தயங்கிய கதைகளைத் துணிச்சலாக எடுக்கும் சுயாதீன திரைப்படங்கள். திரைப்பட விழாக்களையே தங்களது களமாக கொண்டு உருவாகும் இத்தகைய படங்களுக்காக பிரத்யேகமாக ஒரு திரைப்பட விழாவைத் தமிழ் ஸ்டுடியோ இயக்கம் வரும் ஞாயிற்று கிழமை (பிப்ரவரி 4) சென்னையில் நடத்தவுள்ளது.
வடபழனியில் உள்ள ஆர்.கே.வி ஸ்டுடியோ, சாலிக்கிராமம் பிரசாத் லேப் ஆகிய இரு இடங்களில் ஞாயிறு அன்று காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை லேடி ஆஃப் தி லேக், தி பெய்ண்ட்டடு ஹவுஸ், சிவ புராணம், இஸ் இட் டூ மச் டு ஆஸ்க்?, ஃப்ரங்கிபனி, ஹரி கதா பிரசங்கா, ஓராளப்பாக்கம், ரங்க பூமி என எட்டுத் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. எடிட்டர் பீ.லெனின், மிஷ்கின், வெற்றி மாறன் உள்ளிட்ட திரைத் துறையைச் சேர்ந்த பிரபலங்கள், மாற்று சினிமா களத்தில் தொடர்ந்து இயங்கிவரும் ‘நிழல்’ திருநாவுக்கரசு, அம்ஷன் குமார் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்கின்றனர். திரையிடலுக்கு நடுவே குழு விவாதமும் நடைபெறவுள்ளது.
“கறுப்பே எங்கள் அரசியல், கறுப்பே எங்கள் நிறம், கறுப்பே எங்கள் மதிப்பு என்று சென்னை சுயாதீனத் திரைப்பட விழா கறுப்பைக் கொண்டாடுகிறது. ஒரு நிறத்தின் மீது செலுத்தப்பட்ட அரசியலைக் கேள்விக்குட்படுத்துவோம். அபசகுனம் என்று கருதப்பட்ட கறுப்பு நிறமே IFFC யின் அதிகாரபூர்வ நிறம். அதுவே IFFC யின் அடையாளம்” என நிகழ்வை ஒருங்கிணைக்கும் அருண் கூறியுள்ளார். பல சுயாதீன திரைப்படங்களைப் போல இந்த திரைப்படவிழாவும் மக்களிடம் பணம் (People Fund) பெற்று நடத்தப்படுகிறது. நுழைவுக் கட்டணமாக ரூ 100 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள், உதவி இயக்குநர்கள், உதவி தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோரிடமிருந்து ரூ 50 மட்டும் பெறப்படுகிறது.