மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 31 ஜன 2018

சித்தராமையாவிடம் கெஞ்சிப் பயனில்லை!

சித்தராமையாவிடம் கெஞ்சிப் பயனில்லை!

தமிழகத்தில் வாடும் சம்பா பயிரைக் காப்பாற்ற காவிரியில் தண்ணீர் திறந்து விடும்படி வலியுறுத்த கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யாவை நேரில் சந்தித்துப் பேசத் தமிழக முதலமைச்சர் பழனிசாமி முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சட்ட ரீதியான நியாயங்கள் நமக்குச் சாதமாக இருக்கும் நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பெங்களூரு செல்வது தவறான அணுகுமுறை என்று காட்டமாக விமர்சித்திருக்கிறார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

மேட்டூர் அணை மிகவும் தாமதமாக அக்டோபர் மாதத்தில் திறந்து விடப்பட்டதால், காவிரிப் பாசன மாவட்டங்களில் அம்மாத இறுதியிலும், நவம்பர் மாதத்திலும் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகிக்கொண்டிருக்கின்றன. நிலத்தடி நீரைப் பயன்படுத்தி முன்கூட்டியே பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் அறுவடையாகிக்கொண்டிருக்கும் நிலையில், ஆற்று நீரை நம்பியவர்களின் நிலைமை மிகவும் மோசமாகியிருக்கிறது. சில பகுதிகளில் அடுத்த ஒரு வாரத்திற்கும், வேறு சில இடங்களில் இரு வாரங்களுக்கும் காவிரி நீர் தேவைப்படுகிறது. தண்ணீர் எளிதில் சென்றடையாத நாகை மாவட்டத்தின் கடைமடைப் பகுதிகளில் இன்னும் கூடுதலான நாட்களுக்கு தண்ணீர் தேவைப்படுகிறது. அடுத்த இரு வாரங்களுக்கு காவிரியில் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டால்தான், சம்பா நெற்பயிர்களை முழுமையாகக் காப்பாற்ற முடியும்.

இந்நிலையில் எடப்பாடியின் பெங்களூரு பயணம் பற்றி இன்று (ஜனவரி 31) அறிக்கை வெளியிட்டிருக்கும் ராமதாஸ், “சம்பா பயிரைக் காப்பாற்றத் தேவையான தண்ணீரைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை முதல்வர் முன்கூட்டியே தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், பிரதமருக்கு ஒரு முறையும், கர்நாடக முதலமைச்சருக்கு ஒரு முறையும் கடிதம் எழுதி விட்டு, அத்துடன் கடமை முடிந்ததாக ஒதுங்கிவிட்டார். அது மட்டுமின்றி, கொஞ்சம்கூட இரக்கமே இல்லாமல் சம்பா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவைப் படிப்படியாகக் கட்டுப்படுத்தி, கடந்த 25ஆம் தேதி வினாடிக்கு 1250 கனஅடியாகக் குறைத்த தமிழக அரசு, 28ஆம் தேதி மாலை அணையை மூடிவிட்டது. உழவர்கள் நலனில் அக்கறை இல்லாமல் அணையை மூடிய ஆட்சியாளர்கள்தான் சம்பா பயிரைக் காப்பாற்ற கர்நாடக முதலமைச்சரைச் சந்தித்து தண்ணீர் கேட்கப் போவதுபோல நாடகத்தை அரங்கேற்றுகின்றனர்’’ என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு கர்நாடகம் ஆண்டுக்கு 192 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும். ஆனால், நடப்பாண்டில் இதுவரை 112 டி.எம்.சி மட்டுமே தண்ணீர் வந்துள்ளது. இதைக் குறிப்பிட்டிருக்கும் ராமதாஸ், “மீதமுள்ள 80 டி.எம்.சி. நீரை கர்நாடகத்திடமிருந்து பெற்றுத் தரும்படி காவிரி மேற்பார்வைக் குழுவிடம் தமிழகம் முறையிட்டிருக்க வேண்டும். காவிரியில் தண்ணீர் தர முடியாது என அப்போதே சித்தராமய்யா கூறி விட்ட நிலையில் பிரதமருக்கு அழுத்தம் கொடுத்து தமிழகத்திற்கு தண்ணீர் பெற நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டித் தீர்மானம் நிறைவேற்றுவது, அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்துவது உள்ளிட்ட எந்த நடவடிக்கையை அரசு மேற்கொண்டாலும் அதற்குப் பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் முழு ஆதரவை வழங்கியிருக்கும்.

பிரதமரை நேரில் சந்தித்து தமிழகத்தின் தண்ணீர் உரிமையை உறுதி செய்யும்படி வலியுறுத்துவதற்கு அஞ்சும் தமிழக முதலமைச்சர், கர்நாடக முதல்வரைச் சந்தித்து காவிரி நீருக்காகக் கெஞ்சப்போவதாகக் கூறியிருக்கிறார். இதனால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. அப்படியே சந்தித்தால்கூட அதைக் காரணம் காட்டி, நடுவர் மன்றத் தலையீடோ, நீதிமன்றத் தலையீடோ தேவையில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் கூறி, நாம் போராடிப் பெற்ற உரிமைகளை முடக்க சித்தராமய்யா முயல்வார். இது காவிரிப் பிரச்சினையில் 30 ஆண்டு பின்னடைவை ஏற்படுத்தும்” என்று கூறியிருக்கிறார் ராமதாஸ்.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

புதன் 31 ஜன 2018