மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 31 ஜன 2018

சிறையில் சசிகலாவுக்குச் சலுகை?

சிறையில் சசிகலாவுக்குச் சலுகை?

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்குச் சலுகைகள் வழங்கப்படுவது ஆர்டிஐ தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குச் சிறையில் சலுகைகள் வழங்கப்படுவதாக அப்போதைய சிறைத் துறை டிஐஜி ரூபா பரபரப்பு புகார் ஒன்றை வெளியிட்டார். சசிகலா சிறையிலிருந்து சாதாரண உடையில் வெளியில் செல்வது போன்ற வீடியோக்களும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின. இந்த நிலையில், சசிகலாவுக்குப் பார்வையாளர்கள் சந்திப்பில் விதிகளை மீறி சலுகைகள் வழங்கப்பட்டதாகப் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றின் சார்பாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கர்நாடகச் சிறைத் துறை அலுவலகத்தில் இருந்து சில தகவல்கள் பெறப்பட்டுள்ளன. அதில், முதலாவதாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு அவர்களது உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பார்வையாளர்களைச் சந்திக்கும் விதிமுறைகளைப் பற்றி முதல் மனுவில் கேட்கப்பட்ட கேள்விக்கு, கைதிகள் பார்வையாளர்களை 15 நாள்களுக்கு ஒருமுறைதான் சந்திக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

பின்னர் சசிகலா கடந்த ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி அன்று சிறையில் அடைக்கப்பட்டதிலிருந்து அவரைச் சந்தித்தவர்களின் விவரங்கள் இரண்டாவது மனுவில் கேட்கப்பட்டிருந்தன. அவற்றில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சசிகலாவுக்குப் பார்வையாளர்கள் சந்திப்பில் விதிகளை மீறி சலுகைகள் வழங்கப்பட்டதாகப் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

இதேபோல், பார்வையாளர் ஒருவரைக் கைதிகள் சந்திக்கும் அதிகபட்ச நேரமாக 30 முதல் 45 நிமிடங்கள் இருக்கின்றன. ஆனால், கடந்த 28.12.17 அன்று ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு சசிகலாவைச் சந்தித்த டி.டி.வி.தினகரன் அவருடன் மூன்று மணி நேரத்துக்கும் மேலாகப் பேசிக்கொண்டிருந்ததாக ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.

இவ்வாறு பார்வையாளர்கள் சந்திப்பு மற்றும் சந்திப்பு நேரம் ஆகியவற்றில் சசிகலாவுக்குச் சிறை விதிகளை மீறிக் கூடுதல் சலுகைகள் வழங்கப்பட்டதா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

இதற்கிடையே, டி.டி.வி.தினகரன் சசிகலாவை நேற்று (ஜனவரி 30) சிறைக்குச் சென்று சந்தித்துப் பேசினார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “நான் சசிகலாவுடன் அதிகபட்சமாக 40 நிமிடங்கள் மட்டுமே சந்தித்து பேசியுள்ளேன். 15 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே அவரைச் சந்தித்து வருகிறேன். இன்றைய சந்திப்பின்போது சுதாகரன் மற்றும் இளவரசியை நான் சந்திக்கவில்லை. நான் வராதபோது நடைபெற்ற சந்திப்புகள் குறித்து எப்படி பதில் கூற முடியும்?” என்று எதிர்க்கேள்வி எழுப்பினார்.

“சசிகலாவுக்கு மட்டுமே எங்களின் ஆதரவு இருந்தது, டி.டி.வி.தினகரனை நாங்கள் ஆதரிக்க மாட்டோம்” என மதுசூதனன் கூறியது தொடர்பான கேள்விக்கு, “மதுசூதனன் சொந்த தொகுதியிலேயே டெபாசிட்டை இழந்திருப்பார். அவரைப் பற்றி பேசுவது வீண்” என்று தினகரன் பதிலளித்தார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 31 ஜன 2018