மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 31 ஜன 2018

சிறப்புச் செய்தி: மன்னிப்பு கேட்கமுடியாது - சொல்லாமல் சொன்ன வைரமுத்து

சிறப்புச் செய்தி: மன்னிப்பு கேட்கமுடியாது - சொல்லாமல் சொன்ன வைரமுத்து

மணிக்கொடி

ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு வைரமுத்து நிதி வழங்கும் நிகழ்வு நேற்று (30.01.2018) சென்னையிலுள்ள லீ மெரீடியன் ஹோட்டலில் நடைபெற்றது. சமீபத்தில் நிறைவடைந்த சென்னை புத்தகத் திருவிழாவில் விற்பனையான வைரமுத்துவின் புத்தகங்களுக்கான ரூ.5 லட்சத்துக்கான காசோலையை ஹார்வார்டு தமிழ் இருக்கையின் அமைப்பாளர்களிடம் வழங்கினார் கவிஞர் வைரமுத்து.

வழக்கமாக வைரமுத்துவின் நிகழ்ச்சிகள் லீ மெரீடியனில்தான் நடைபெறும் என்றாலும், இம்முறை நிகழ்வின் சூழல் மேலும் பொலிவுடன் காணப்பட்டது. லீ மெரீடியன் ஹோட்டலின் உரிமையாளர் பழனி ஜி.பெரியசாமியும் இந்நிகழ்வில் கல்ந்துகொண்டிருந்தார். நிகழ்வு தொடங்குவதற்கு முன்பு, அவருடன் மிகவும் நெகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டிருந்ததை அங்கு கூடியிருந்த பலரும் பார்த்துக்கொண்டிருந்தனர். இவர்கள் இருவரின் நெருக்கம், ‘இவ்வளவு பெரிய ஹோட்டலின் பார்ட்டி ஹாலில் நிகழ்வை ஏற்பாடு செய்த செலவையும் சேர்த்து தமிழ் இருக்கைக்கு வழங்கியிருக்கலாமே’ என்ற விவாதத்தை நடத்திக்கொண்டிருந்தவர்களிடையே அமைதியை உண்டு பண்ணியது. இதை நிரூபிப்பதுபோலவே, நிகழ்வில் பேசியபோது பெரியசாமியை வைரமுத்து குறிப்பிட்டுப் பேசினார். அவரை மட்டுமா குறிப்பிட்டார்; நிகழ்வுக்கு வந்திருந்த ஒவ்வொருவரையும் குறிப்பிட்டார். காரணம், அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக வைரமுத்துவின் கைபேசி அழைப்பினால் அங்கு வந்தவர்கள். வைரமுத்துவின் உரையே பெரியதாக இருக்குமென்பதால், முக்கியமானவர்களைக் குறிப்பிட்டுட்டு நிகழ்வின் மையக் கருவுக்குள் சென்றுவிடுவார்; ஆனால், இங்கு புதிய வைரமுத்துவைப் பார்க்க நேர்ந்தது.

“ஆறுமுகம் முருகையா இங்கு பேசும்போது அடிக்கோடிட்டுச் சொல்லத்தக்க வாசகத்தை, இங்கு விட்டுவிட்டுப் போயிருக்கிறார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் மொழிகள் மொத்தம் ஏழு. இப்போதுதான் தமிழ் அதில் சேர்கிறது என்று சொன்னார். நீங்கள் இன்னொரு பெருமையை ஹார்வர்டு யுனிவர்சிட்டிக்குச் சொல்லியாக வேண்டும் ஆறுமுகம் அவர்களே! இதுவரைக்கும் இருக்கையில் இருக்கிற மொழிகள் எல்லாம் வாழும் மொழிகள் என்று சொல்லிவிட முடியாது. சீனம் ஒன்றுதான் இன்னும் பேச்சு வழக்கில் இருக்கிற மொழி, இலக்கிய தொடர்ச்சி மிக்க மொழி. அதற்கு இணையாக இருக்கிற அடுத்த மொழி அந்த பல்கலைக்கழகத்தில் தமிழ் மட்டும்தான். இதுதான் இன்னும் செய்யுள் வழக்கும், உளவியல் வழக்கும் உடையதாக, இன்னும் தொடர்ச்சியாக வருகிற மொழியாக, 8 கோடி தமிழர்களால் பேசப்படும் மொழியாக, இன்னும் பல நாடுகளில் அலுவல் மொழியாக, இன்னும் மொத்த உலகத்தில் பேசப்படுகின்ற பெரிய மொழிகளின் பட்டியலில் இருபது எண்ணிக்கைக்குள் (17ஆவது இடத்தில்) வருகிற மொழியாக இருப்பது, தமிழ் என்ற உண்மையைத் தமிழர்களாக நாம் மட்டுமல்ல, இந்த உலகிற்கே பரந்து எடுத்து ஓத வேண்டும். இதற்காகத் தான் இந்த இருக்கை உதவுகிறது என்பதை நம்புகிறேன்” என்று சொன்னபடி நிறுத்தி, தனக்காகவும் தமிழுக்காகவும் வந்திருந்த கூட்டத்தை ஒருமுறை பார்த்தார்.

தமிழின் செம்மொழிப் பெருமையைக் குறித்து தொடர்ந்து பேசிய வைரமுத்து, கலைஞரை நினைவுகூர மறக்கவில்லை. “தமிழ் செம்மொழி என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்தத் ‘தமிழ் செம்மொழி’ என்ற அறிவிப்புக்குக் காரணமான கலைஞர் அவர்களை நான் நன்றியோடு நினைவுகூர விரும்புகிறேன். அதற்கு அனுமதி பெற்றுத்தந்த மன்மோகன் சிங் அரசுக்கும் இன்றுவரை கூட தமிழர்கள் நன்றி மறக்காதவர்கள். நாங்கள் நன்றி சொல்லுகிறோம். தமிழ் ஒரு செம்மொழி ஆவதற்கு அறிவுலகம் என்னென்ன தகுதிகளை வகுத்திருக்கிறதோ, அந்தத் தகுதிகளுக்கு மேலே சில தகுதிகளைக் கொண்டது தமிழ். நீண்ட நெடுங்கணக்கில் இலக்கணங்களையும், இலக்கியங்களையும் படைத்திருக்க ,ஒரு மொழி பாரம்பரியமிக்கதாக இருக்க வேண்டும்; பழமைமிக்கதாக இருக்க வேண்டும்; சில மொழிகளை ஈன்று கொடுக்க தனித் தகுதி அதற்கு இருக்க வேண்டும்; உலக நாகரிகத்திற்குப் பங்களிப்பு செய்வதாக இருக்க வேண்டும்; இப்படி எல்லாம் இருந்தால்தான் ஒரு மொழி செம்மொழி என்று அறிவுலகம் கருதுகிறது. இதற்கெல்லாம் மேலே உள்ள தமிழ் மொழியை ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தாமதமாக நாம் கொண்டுசேர்த்திருக்கிறோமே என்பதுதான் என்னுடைய ஆதங்கம் என்று நான் கருதுகிறேன். இந்த மொழியை இன்னும் முன்னெடுத்துச் செல்வதற்கும், இன்னும் இழுத்துச் செல்வதற்கும் நாம் இன்னும் பல முயற்சிகளைத் தொடர்ந்து ஆற்ற வேண்டியிருக்கிறது” என்று கூறியதும் தன்னைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு, தமிழை மட்டுமல்லாமல் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் சிறப்புகளையும் பேசத் தவறவில்லை.

“ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் வயது 382 ஆண்டுகள். 382 ஆண்டுகள் மூப்பு முதிர்ந்திருக்கும் ஒரு பல்கலைக்கழகம். இதில் வெளியிடப்படும் ஆய்வுகள் உலகின் கவனத்தை மறு நொடியே கவ்வுகின்றன. எல்லா பல்கலைக்கழகத்தின் ஆய்வுகளையும் எல்லோரும் ஏற்றுக்கொண்டதில்லை. எல்லாரும் கவனிப்பதில்லை. அதற்குரிய அங்கீகாரத்தை வழங்குவதில்லை. தமிழ்நாட்டில் பல பல்கலைக்கழகங்களின் ஆய்வுகள் அந்த ஆய்வாளருக்கும், நெறியாளருக்கும் மட்டும் தெரியுமே தவிர, மற்ற மூன்றாவது ஆளுக்குத் தெரியவே வாய்ப்பில்லாமல், அச்சடிப்பதிற்கும் வாய்ப்பில்லாமல், அச்சடித்து 3ஆவது ஆளுக்கும் வழங்கமுடியாமல் பல ஆய்வுகள் கிடக்கின்றன என்பதைப் பல அறிவுஜீவிகள் நகைத்துக்கொண்டே ஆமோதிக்கிறார்கள். அப்படி இருக்கின்றன. ஆனால், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஒரு ஆய்வு அறிக்கை வெளிவந்தால் உலகம் கவனிக்கிறது. உலகம் திரும்பிப்பார்க்கிறது. உலகின் பல தலைவர்களையும், நோபல் பரிசு பெற்ற அதிக அறிஞர்களையும் உண்டாக்கிய பல்கலைக்கழகம், ஹார்வர்டு பல்கலைக்கழகம். இந்தப் பல்கலைக்கழகத்தில் எங்கள் தமிழ் சென்று அமர்கிறது. எங்கள் தமிழுக்கு இது பெருமைதானே என்று பல பேர் கருதலாம். அதை மறுப்பதில்லை. உண்மைதான். ஆனால், இன்னொன்றையும் நீங்கள் கருத வேண்டும்” எனப் புதிருடன் நிறுத்தி, பிறகு ஆரம்பித்தார்.

“ ‘தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் – இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்’ என்று மகாகவி பாரதி சொன்னது. ‘இனிமைத் தமிழ் மொழி எமது, எமக்கு இன்பம் தரும்படி வாய்த்த நல் அமுது. கவிதை பிழிந்திட்ட சாறு; எங்கள் கதியில் உயர்ந்திட்ட நாம் பெற்ற பேறு’” என்று செய்யுள் பேச்சு வழக்கிலிருந்தவர், திடீரென மாறினார். “என்னுடைய கதியை உயர்த்தியது தாய்மொழிதான்டா. இல்லையென்றால் நான் வேட்டைக் கலாச்சாரத்தில் இருந்திருப்பேன். குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்திருப்பேன். மருதத்தில் இருந்திருப்பேன். விவசாயக் கலாச்சாரத்தை விட்டே வெளியேறாமல் இருந்திருப்பேன். எங்கள் கதியிலிருந்து எம்மை உயர்த்தியது தமிழ்” என்று அதீத டெசிபலில் பேசி, இப்படியாக பாவேந்தர் சொல்கிறார் என்று நிறுத்தினார்.

“நான் கேட்கிறேன் 382 ஆண்டுகள் இருக்கும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இருப்பது தமிழுக்கு பெருமையா, இல்லை 3000 ஆண்டுகள் மூத்த தமிழ் மொழியால் ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கு பெருமையா? இப்போது சொல்லுங்கள் ஆறுமுகம் அவர்களே, ஒரு ஏழை தமிழ்க் கவிஞன் இப்படிச் சொன்னான் என்று சொல்லுங்கள். அதனால்தான், ஏழைக் கவிஞன் என்பதால்தான் ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு ரூ.5 லட்சம் கொடுத்துள்ளேன்” என்று கூறி சிரிக்க, அரங்கமே நகைத்தது. பின் மீண்டும் தொடர்ந்த அவர், “தமிழ் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இருப்பது நமக்குப் பெருமைதான். ஆனால், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் சென்று அமர்வது அந்தப் பல்கலைக்கழகத்திற்கும் பெருமை என்பதை அவர்களும் நுகரட்டும். தமிழின் பெருமையை உரக்க இந்த உலகத்திற்குப் பரப்பட்டும்” என்று கூறி ஹார்வர்டு பல்கலைக் கழகத்தைப் பற்றிய பேச்சுக்களை முடித்துவிட்டு, இந்தியா பக்கம் திரும்பினார்.

“இந்தியப் பண்பாடு என்று எடுத்துக்கொண்டால், இதை நீங்கள் உலகமெல்லாம் நான் சொன்னேன் என்று சொல்லலாம். இந்தியப் பண்பாடு என்று எடுத்துக்கொண்டால் அதில் சரிபாதி பண்பாடு தமிழர் கொடுத்த பண்பாடு. வெர்ட்டிக்கலா பாத்துக்கங்க நீங்க. வடக்கே ஒரு பண்பாடு, தெற்கே ஒரு பண்பாடு. பாதி பண்பாட்டை உருவாக்கியது இந்தியப் பண்பாடு என்றால் தமிழர் பண்பாட்டைக் கழித்துவிட்டால் 50 விழுக்காடுதான் மிஞ்சும். தமிழும் சேர்ந்தால்தான் அது 100 விழுக்காடு, தெரிந்துகொள்வோம். இந்தப் பண்பாட்டை உலகம் முழுவதும் எடுத்துச்செல்லும் வாய்ப்பை நாம் இழந்துவிட்டோம். அதனுடைய அரசியல் காரணங்களை நீங்கள் அறிவீர்கள். சில சமூகக் காரணங்களையும் அறிவீர்கள். தமிழை நுகராமலே, தொட்டுப் பார்க்காமலே வடக்கே மட்டும் தொட்டுப் பார்த்துவிட்டு பல ஐரோப்பியர்கள் போய்விட்டார்கள். அவர்களை எல்லாம் தென்னகம் நோக்கி இழுக்க இந்த இருக்கை உதவும் என்று நம்புகிறேன்” என்று நம்பிக்கை தெரிவித்தார்,

மேலும் “அந்த இருக்கையை ஆய்வு செய்கிறவர்கள், அந்த இருக்கையைப் பார்வையிட வருகிறவர்கள் சொல்ல வேண்டும். இந்தியாவுக்குச் சென்றால் வடக்கே சென்று மட்டும் உங்கள் ஆய்வை நிறுத்துக்கொண்டு வந்துவிடாதீர்கள். தெற்கே நகருங்கள். சிந்து சமவெளி நாகரிகத்தைப் பரப்பிய மூலம் அங்கே இருக்கிறது. தென்னகத்தில் ஒரு பண்பாட்டை உருவாக்கிய திராவிடப் பண்பாடு இன்னும் அங்கே கனவோடு கலந்துகொண்டிருக்கிறது என்ற உண்மையை ஐரோப்பியர்களுக்கும், அமெரிக்கர்களுக்கும் ஐந்து கண்டத்தினருக்கும் அறிவிக்கவேண்டிய சூழ்நிலையில் நாம் இருக்கிறோம் நண்பர்களே. நடந்த ஒரு செய்தியைச் சொல்கிறேன். மேக்ஸ்முல்லர் என்றொருத்தர் வந்தார் இந்தியாவுக்கு. வடமொழி இலக்கியங்களை எல்லாம் மொத்தத்தையும் கொண்டுபோய் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தினார். நான் அவர்களைக் குறை சொல்லவில்லை. இந்தியாவுடைய நாகரிகத்தையும், இலக்கியத்தையும் கொண்டுபோய் சேர்த்தவர்களில் ஒருவர் மேக்ஸ்முல்லர் என்று கொண்டாடுகிறோம். தமிழைப் பரப்புவதற்கு யார், அப்படி எந்த முல்லர் வந்தார். தமிழ்ப் பண்பாட்டை, தமிழ் இலக்கியத்தை கொண்டுபோய் சேர்க்க யாரு இருந்தா?” என்று கேள்வி எழுப்பி தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார். அடுத்த நொடி மிகுந்த நம்பிக்கையுடன் “இந்தத் தமிழ் இருக்கை ஆய்வுகள் தமிழின் அதிகாரப்பூர்வமான உண்மைகளை அறிவிக்கும் என்பதை நம்புகிறேன். இன்னொன்றும் சொல்லுகிறேன். இந்தத் தமிழ் இருக்கை மாக்ஸ்முல்லரைப் போல, வட மொழியை ஐரோப்பாவிற்கு அறிமுகப்படுத்திய மாக்ஸ் முல்லரைப் போன்ற அறிஞர் பெருமக்களை, தமிழை உலகம் முழுவதும் பரப்புகிற சிந்தனையாளர்களை, அறிவுஜீவிகளை, படைப்பாளிகளை, மொழிபெயர்ப்பாளர்களை உருவாக்கித் தர முடியும் என்ற நம்பிக்கையில் இந்த சிறு தொகையை நான் அளிக்கிறேன். சென்னை புத்தகக் காட்சியில் விற்பனையான என் நூலின் மொத்த விற்பனைத் தொகையை இருக்கைக்கு அளிக்கிறேன் என்று சொன்னேன். 4,61,370 ரூபாய்க்கு விற்றது. அதை முழுமை செய்து 5,00,000 ரூபாயாக வழங்குகிறேன். மிகச் சின்னத் தொகை இது. ஒரு நதியில் பெய்த ஐந்து துளி மழை இது. ஆனால், உங்கள் நதி கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. விரைவில் எல்லையைத் தொட்டுவிடும் என்று நம்புகிறேன். இந்த 5 சொட்டு மழைத்துளியையும் ஏற்றுக்கொண்ட நதியே உனக்கு என் நன்றிகள்” என்று தன் நன்றியைத் தெரிவித்து, தமிழ் இருக்கைக்குப் பங்களிக்கும் வாய்ப்பு அமைய, தமிழ் இருக்கையை முன்னெடுத்துச் சென்றவர்களை நினைவுகூர்ந்தார் வைரமுத்து.

“இந்தத் தமிழ் இருக்கையை முன்னெடுத்துச்சென்ற 2 பேர், அதை மறக்கவே முடியாது. மருத்துவர் ஜானகிராமன், திருஞானசம்பந்தம் இந்த இரண்டு பேருக்கும் தமிழ் உலகம் கடமைப்பட்டிருக்கிறது. அவர்களை நான் நன்றியோடு வணங்குகிறேன். இந்த இருக்கைக்காக கொடை செய்த தமிழ் உள்ளங்களையெல்லாம் நான் வணங்குகிறேன்” என்றார்.

“நண்பர் பெரியசாமி அவர்கள், சகோதரர் என்பதா, நண்பர் என்பதா, உறவினர் என்பதா என்ன சொல்வது. அவரும் நானும் ஒரு பின்னிரவில் சாப்பிட ஆரம்பிக்கும்போது...” என்று தொடங்கிவிட்டு, சாப்பிட ஆரம்பித்ததன் கதையைச் சொன்னார்.

என்ன பண்ணுறிங்க?

ஒரு பாட்டு எழுதிட்டு இருக்கேன்.

எப்போ பாரு பாட்டுக்கே உக்காருறீங்க. சாப்பாட்டுக்கு உக்காருங்க என்பார். வந்து பேசினால் ஒரு ஒன்பது மணிக்கு எங்கள் உரையாடல் ஆரம்பித்தால், ஒரு 12 மணி வரைக்கும் நீளும். நண்பர்களே தமிழ் அறிஞர்கள் கற்றுக்கொடுத்ததோடு நின்றுவிடுவதில்லை அறிவு. அரசியல்வாதிகள் சொல்லிக் கொடுத்தது மட்டுமல்ல அறிவு. உலகத் தமிழர் அவர்தாம். அவரிடம் உலகம் பற்றி பேசலாம். அரசியல் பற்றிப் பேசலாம். உலகப் பொருளாதாரம் பற்றி பேசலாம். தமிழ்நாட்டு அரசியலை இடப்பையிலும், மனப்பையிலும் வைத்திருக்கிறார் எப்போதுமே. எனக்கு அவரை ரொம்பப் பிடிக்கும். ஐயா உங்களுக்கு ரொம்ப நன்றி. இதை எளிமையாக அதை அவரிடம் வீட்டில் அழைத்து ஒப்படைத்துவிடலாம் என்றுதான் நினைத்தேன். இல்லை இல்லை இது ரகசியமாகச் செய்ய வேண்டிய விஷயம் அல்ல. உலகத்திடம் சொல்லிக்கொடுங்கள் என்று அவர் தான் கூறினார்” என்று முடித்து தன் மகிழ்ச்சி குறித்துத் தொடங்கினார்.

“எனக்கு மிக மகிழ்ச்சி தெரியுமா? இந்த விழாவில், நான் நேசிக்கும் பெருமக்களை எல்லாம் இங்கு ஒரு குடைக்கீழ் பார்க்கிறேன். அதுதான் மகிழ்ச்சி. மிகப் பெரிய சிந்தனையாளர் மனுஷ்யபுத்திரன் அவர்கள். அவர் பேசும்போது இதை ஏற்கனவே சிந்திக்கிறாரா அல்லது எதிராளியின் கடைசி வார்த்தையில் இருந்து சிந்திக்கிறாரா என்று ஆச்சரியப்படுகிறேன். ஒவ்வொரு முறையும் ஒரே ஷணத்தில் நிகழ்கின்றன. கொடி அசைந்ததும் காற்று வந்ததா, காற்று வந்ததும் கொடி அசைந்ததா என்று கேட்கும் அளவிற்கு அவை ஒரு ஷணத்தில் நிகழ்கின்றன. இதுபோல் இறையனார் அகப்பொருள் கலவியலில் ஒன்று வரும். இரவு வந்ததும் ஒளி பிறந்ததா, ஒளி பிறந்ததால் இருள் விளகியதா என்பது அது. அதற்கு உரையாசிரியர் விளக்கம் சொல்கிறான். எவ்வித இடைவெளியுமின்றி இரண்டு செயலும் ஒரு ஷணத்தில் நடைபெறக்கூடியவை என்று. அங்கு தெரிந்தது எனக்கு விடை. எதிராளியின் கேள்விக்கும், மனுஷ்யபுத்திரனின் பதில்களுக்கும் இடைவெளியே கிடையாது. அதே போல் மாலன் வந்திருக்கிறார். நான் ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்ல கட்மைப்பட்டிருக்கிறேன். நான் எங்கே இருந்தாலும், நான் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் நடுநிலைமையிலிருந்து பிறழ மாட்டேன் என்று சொல்லக்கூடியவர் மாலன். சுபவீ வந்திருக்கார். சுபவீ வந்து, கறுப்பு சட்டை அணிந்த ஒரு தமிழ் நூலகம். எனக்கு ஏதாவது சந்தேகம் வந்தால், நூலைப் புரட்ட நேரம் இல்லை என்றால் சுபவீ எண் கிடைத்தால் போதும். எல்லாம் பேசுவாரு. எங்க இருந்து எப்படி இதெல்லாம் வந்ததுன்னு நான் அப்படியே ஆடிப்போய்ட்டேன். அப்படியே புத்தகம் பார்த்து வாசிப்பது போல ஒப்பிக்கிறார் எப்படி? ஒரு கவர்னர் விழா. அவரைப் பார்த்துக் கேட்டார்கள். நீங்கள் எல்லா விழாக்களுக்கும் போறீங்களே! ஜவுளிக்கடை விழாவுக்குப் போறீங்க, இலக்கிய விழாவுக்குப் போறீங்க, ரோடரி லயன்ஸ், இப்படி எதையும் விடுறதில்லை. நீங்க, எங்க, எப்படி தயாரிக்கிறீங்கன்னு கேட்டாங்க. அவர் சொன்னார், நான் பொது வாழ்வுக்குத் தாயரித்து 45 ஆண்டுகள் ஆயிற்று என்றார். 45 ஆண்டுகளா தயாரிச்சேன். இப்பதான் பயன்படுத்துறாங்க என்னை என்றார். ”சுப.வீ 50 வருடங்களாக தயாரானவர். இப்பத்தான் அவரை ஊடகம் கூப்பிடுது. செம்பா வந்திருக்கிறார், இமயம் வந்திருக்கிறார், மதிப்பிற்குரிய தம்பி அறிவுமதி வந்திருக்கிறார்” என்று சொன்னதும் ‘அண்ணன்’ என்று ஒரு குரல் எழுந்தது. “அண்ணனா? தம்பியா? நீங்களா? நானா? ஓ நான் அண்ணனா? மரியாதையை எப்படியெல்லாம் கேட்டு வாங்க வேண்டியிருக்கு” என்று ஒரு சிரிப்பலையைப் பரவச் செய்துவிட்டுத் தொடர்ந்தார். ”வேடியப்பன், ஹாஜா கனி வந்திருக்கார். முத்துலிங்கம் வந்திருக்கார். எத்தனை பேரு? இவர்கள் எல்லாம் நான் தொட்டுத் தொட்டுப் பேசிய ஆட்கள். உள்ளங்கையை வைத்து அழுத்தி அந்த உஷ்ணத்தை என் கையில் ஏற்றிவைத்த ஆட்கள். உஷ்ணத்தை எனக்கு பரிமாறியவர்கள் வந்திருக்கிறார்கள். யாரை விடுவது யாரைச் சொல்வது. தயவுசெய்து யாரையாவது விட்டிருந்தால் மன்னிக்கவும். ஏனென்றால், எல்லோருமே எனக்கு வேண்டிய ஆட்கள்” என்று மிகவும் உணர்வுப்பூர்வமான நிலைக்குச் சென்றார். விழாவில் நிறைந்திருந்த பலரையும் ஒரு தொகுப்பாகப் பார்க்கும்போது, சமீபத்தில் நண்டந்தேறிய ஆண்டாள் சர்ச்சையில் வைரமுத்துவுக்கு ஆதரவாகப் பேசியவர்களே அதிகமாகக் காணப்பட்டனர். எதிர்ப்பு தாக்கியபோது தோளோடு தோள் நின்ற நட்பின் வல்லமைக்கு நன்றி சொல்லும் மனநிலையிலேயே வைரமுத்து பேசினார்.

“புயல் விண்ணில் வந்தால், மழை மண்ணில் உண்டு. எந்தத் தீமைக்குள்ளும் ஒரு நன்மை உண்டு! ஒரு தீமை வந்தது. அதனால் கிடைத்த நன்மை என்ன தெரியுமா? எங்கெங்கோ இருந்த தமிழ் சிங்கங்கள் ஒரே அணியில் திரண்டிருக்கின்றன. இதுதான், அந்தத் தீமையினால் வந்த நன்மை. இந்த நன்மையை இப்படியே கொண்டாடுவோம்! ஒற்றுமைப்படுவோம். ஊடகத்துறை நண்பர்களே, உங்களுக்கெல்லாம் என் வணக்கம். நன்றி. ஆனால் இந்த விழாவினுடைய குவிமையம் தமிழ் இருக்கையாக மட்டுமே இருக்கட்டும்!” என்று வைரமுத்து சொன்னதும் எழுந்த சிரிப்பொலிகளைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். ”அந்தப் பெருமை எல்லாம் அந்த அறிஞர்களுக்கே சென்று சேரட்டும். ஒட்டு மொத்த தமிழ்நாடும், உலகமும் தமிழ் இருக்கை பேறு பெற்றதற்காக பெருமிதம் கொண்டாடட்டும். தமிழ் இருக்கை நிறுவப்படுகிற நாள், உலக தமிழர்களுக்குத் திருநாள் என்று ஒவ்வொரு வீடும் கொண்டாடட்டும்” என்று கூறி தன் உரையை நிறைவு செய்தார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

புதன் 31 ஜன 2018