மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 31 ஜன 2018

சிறப்புக் கட்டுரை: நெருக்கடிகளுக்குத் தீர்வாகுமா இறுதி பட்ஜெட்?

சிறப்புக் கட்டுரை: நெருக்கடிகளுக்குத் தீர்வாகுமா இறுதி பட்ஜெட்?

நிதின் சேதி

2017-18ஆம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை ஜனவரி 29 அன்று வெளியானது. இந்த ஆய்வறிக்கையைப் நாடாளுமன்றத்தில் வெளியிட்டுப் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மேற்கொண்டு சீர்திருத்தங்கள் தேவைப்படுவதாகக் கூறியுள்ளார். மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகரான அரவிந்த் சுப்ரமணியன் தலைமையில் இந்தப் பொருளாதார ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையில், ’ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு இந்தியப் பொருளாதார நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன்பிறகு மறைமுக வரி செலுத்துவோர் எண்ணிக்கை 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது. வருமான வரி நெட்வொர்க்கில் பதிவு செய்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்குப் பிறகு தனிநபர் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை 18 லட்சம் அதிகரித்துள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 6.5 சதவிகிதமாக இருக்கும் என்றும் இந்த ஆய்வறிக்கை கூறியுள்ளது. 2016-17ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.1 சதவிகிதமாகவும், 2015-16ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8 சதவிகிதமாகவும் இருந்தது. 2018-19ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 7 முதல் 7.5 சதவிகிதமாக இருக்கும் என்று இந்த ஆய்வறிக்கை மதிப்பிட்டுள்ளது. நிதி நெருக்கடியைப் பொறுத்தவரையில் 2017-18ஆம் நிதியாண்டில் 3.2 சதவிகிதமாக இருக்கும். 2016-17ஆம் நிதியாண்டில் நிதி நெருக்கடி 3.5 சதவிகிதமாகவும், 2015-16ஆம் நிதியாண்டில் 3.9 சதவிகிதமாகவும் இருந்தது.

இந்த ஆய்வறிக்கை கிராமப்புறப் பொருளாதாரத்துக்குப் போதிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதையே சுட்டுகிறது. 2018-19ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யப்படும் இறுதி பட்ஜெட் இதுவென்பதால் மத்திய அரசு பெரும்பான்மை மக்களின் கவனத்தை கிராமப்புற மற்றும் வேளாண் நலன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே நரேந்திர மோடி அரசில் விவசாய நெருக்கடி பலவிதங்களில் வெளிப்பட்டுள்ளது. வேளாண் பொருள்களுக்கான விலை வீழ்ச்சி தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாகவே விவசாயிகளுக்கு பெரும் இடர்பாடாக அமைந்துள்ளது. அண்மையில் இம்மாதத் தொடக்கத்தில்கூட உத்தரப்பிரதேசத்தில் உருளைக்கிழங்கு விலை சரிவைக் கண்டது. விலைச் சரிவு மற்றும் விவசாயிகளுக்கு ஏற்பட்ட நெருக்கடிகளால் குஜராத் தேர்தலில் விவசாயிகளின் வாக்குகள் பாஜகவுக்கு எதிராகவே விழுந்துள்ளன. குறிப்பாக பதிதார் இன மக்களின் வாக்குகளை காங்கிரஸ் அதிகளவில் கைப்பற்றியுள்ளது.

வழக்கமாகப் பொருளாதார ஆய்வுகள் கடந்த 12 மாதங்களில் நாட்டின் பொருளாதாரம் என்ன பலனைத் தந்தது என்பதை அடிப்படையாகக் கொண்டிருக்கும். ஆனால், இந்த நடைமுறையை 2014-15ஆம் நிதியாண்டில் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் மாற்றியமைத்துள்ளார். இவர் இரண்டு ஆவணங்களாகப் பொருளாதார ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தார். முதல் தொகுப்பில் பொருளாதார மேம்பாடுகள் குறித்த தகவல்களும், இரண்டாவது தொகுப்பில் மாநில பொருளாதாரத்தில் இதன் தாக்கம் என்னவென்பது குறித்தும் தாக்கல் செய்தார். பாஜக தனது ஆட்சியில் பல்வேறு சமூக நலத் திட்டங்களுக்கு நேரடியாகப் பயனாளிகளுக்குப் பணத்தை அளிக்கும் திட்டங்களை உருவாக்கியுள்ளது.

இதன் பயன்களைப் பெற ஏழை மக்களுக்கு ஜன் தன் கணக்குகள் தொடங்கப்பட்டு அந்த வங்கிக் கணக்குடன் பல்வேறு திட்டங்களும் இணைக்கப்பட்டன. ஆனால், தற்போது மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மோடி அரசு நேரடியாகப் பயனாளிகளுக்குப் பணம் செலுத்தும் திட்டத்திலிருந்து மெதுவாக விலகி வருகிறது. பொருளாதார ஆய்வறிக்கையில் வங்கிகள் வாராக் கடனால் அடைந்துள்ள இன்னல்கள் குறித்தும், முதலீடு செய்துள்ள பெரும்பாலான நிறுவனங்கள் சிரமத்துக்கு உள்ளாகியிருப்பது குறித்தும் கூறப்பட்டுள்ளது. உற்பத்தித் துறையின் வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் 'மேக் இன் இந்தியா' திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

தற்போது 2016-17ஆம் நிதியாண்டில் மீண்டும் உற்பத்தித் துறையில் முதலீடு மற்றும் வங்கிச் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டிய தேவையை ஏற்படுத்தியுள்ளது. உலகளாவிய பொதுவான ஊதியத்தை எல்லா குடிமக்களுக்கும் அளிக்கலாம் எனவும் பொருளாதார ஆய்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் மத்திய அரசு பணமதிப்பழிப்பு நடவடிக்கையை அமல்படுத்தியதால் இந்தத் திட்டம் குறித்த கருத்துகள் ஒதுக்கி வைக்கப்பட்டன.

இந்த ஆய்வறிக்கையில் கிராமப்புறப் பொருளாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் வேளாண் சார்ந்த திட்டங்கள் எதுவும் தெளிவாக இல்லை என்பது நமக்குப் புரிகிறது. ஆனால் 2017-18ஆம் வேளாண் பருவ ஆண்டில் கிராமப்புற வேலைவாய்ப்புகள் மற்றும் வேளாண் நெருக்கடி குறித்த பிரச்னைகள் அதிகமாக எழுந்துள்ளதால் வரும் நிதியாண்டில் இவற்றுக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. நிதியமைச்சர் அருண் ஜேட்லியும் விவசாயத்துக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

இதற்கு முந்தைய ஆண்டுகளில் பொருளாதார ஆய்வறிக்கையின் முதல் தொகுப்பில் கொள்கை ஆலோசனைகளும், ஆய்வறிக்கைகளும் இடம்பெற்றிருக்கும். நடப்பு பட்ஜெட்டில் வேளாண் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். மத்திய அரசு தற்போது விவசாயிகளின் விளைபொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை அளித்து வந்தாலும் விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற அளவுக்கு அரசு கொள்முதல் செய்வதில்லை. கொள்முதல் செய்யப்படாமல் தேங்கினால் விலை வீழ்ச்சி ஏற்படுகிறது. எனவே, அடுத்த பருவத்திலாவது கூடுதலாகக் கொள்முதல் செய்வதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

நன்றி: ஸ்க்ரோல்

தமிழில்: பிரகாசு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

புதன் 31 ஜன 2018