விஜய் சேதுபதியின் வயதான வீடியோ!

தமிழ் சினிமாவுலகில் படு பிஸியாகத் தொடர்ச்சியாகப் பல படங்களில் நடித்துவரும் விஜய் சேதுபதியின் வயதான தோற்றத்தின் வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவுலகில் புதுமையை விரும்பும் நடிகர்களுள் ஒருவராக விஜய் சேதுபதி இருக்கிறார். தனது ஒவ்வொரு படத்துக்கும் அவர் தனது தோற்றங்களை மாற்றிக்கொண்டே வருகிறார். அதேசமயம் கதைத் தேர்விலும் மிகுந்த கவனம் செலுத்தி நடித்துவரும் அவர், தற்போது ‘சீதக்காதி’ படத்தில் நடித்து வருகிறார்.
சூது கவ்வும், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், ஜுங்கா இவை போன்று பல படங்களில் மாறுபட்ட தோற்றங்களில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி, ஆரஞ்சு மிட்டாய் படத்துக்குப் பிறகு சீதக்காதி படத்தில் வயதான தோற்றத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பெரும் வரவேற்பைப் பெற்றது. விஜய் சேதுபதியின் தோற்றம் எழுத்தாளர் கி.ராஜநாராயணனை போன்று இருப்பதாகவும், ரகுவரனைப் போன்று இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் பேசப்பட்டது.
ஆனால், படப்பிடிப்பு சம்பந்தமான புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. தற்போது விஜய் சேதுபதியின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இதன் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவில் விஜய் சேதுபதி வயதான தோற்றத்தில் இருக்கும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.