மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 31 ஜன 2018

சிறப்புக் கட்டுரை: பொய்ச் செய்திகளை ஏன் தடை செய்ய முடியவில்லை?

சிறப்புக் கட்டுரை: பொய்ச் செய்திகளை ஏன் தடை செய்ய முடியவில்லை?

ஜோங்தாங் நியு

பொய்ச் செய்தி என்பது தற்போது பெரிய பிரச்சினையாக மாறிவருகிறது. இந்தியாவில் பொய்ச் செய்தியை வெளியிடுவதும் பரப்புவதும் ஒரு கலையாகவே பயலப்பட்டு வருகிறது. இணையப் பயன்பாடு பெருகப் பெருகப் பொய்ச் செய்தியும் பெருகிவருகிறது. குறிப்பாகச் சமூக ஊடகங்கள் இதில் முன்னிலை வகிக்கின்றன. உலகின் பிற நாடுகள் இதை எப்படிக் கையாள்கின்றன என்பதைப் பார்க்கும்போது இந்தியாவுக்கான சில பாடங்கள் கிடைக்கக்கூடும்.

பொய்யான செய்திகள் வெளியிடப்படுவதைக் கட்டுப்படுத்துவதற்காகப் புதிய சட்டம் இயற்றப்படும் என பிரான்ஸ் நாட்டின் அதிபர், இம்மானுவேல் மாக்ரான் வெளியிட்ட அறிவிப்பு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பால், கருத்து வெளியிடும் சுதந்திரம் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

பொய்யான செய்திகள் என்பவை புதிதல்ல. செய்திகள் எப்போதுமே மிகவும் துல்லியமாக இருக்கும் என்றும் சொல்லிவிட முடியாது. ஆனால், இணையதள வசதி வருவதற்கு முன்பு, பொய்ச் செய்திகள் அரிதாகவே இருந்தன. ஊடகத்தைக் கட்டுப்படுத்தும் அமைப்புகள், அவதூறு சட்டம், செய்திப்பி ரிவின் கட்டுப்பாட்டு விதிகள் ஆகியவற்றால், பொய்ச் செய்திகள் கட்டுப்படுத்தப்பட்டிருந்தன.

பிரிட்டனைப் பொருத்தவரை இன்னும்கூட இந்த நிலவரம் ஓரளவுக்கு உண்மையாகத்தான் உள்ளது. உதாரணமாக, இன்டிபெண்டன்ட் பிரஸ் ஸ்டான்டர்ட்ஸ் ஆர்கனைசேஷன் (ஐ.பி.எஸ்.ஓ.) என்ற அமைப்பு நான்கு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து பொய்ச் செய்திகள் குறித்து 28,645 புகார்கள் வந்தன. இவற்றில்174 வழக்குகள் தொடர்பான செய்திகளில் உண்மைத் தன்மை இல்லை என அறிவிக்கப்பட்டது.

ட்விட்டர், ஃபேஸ்புக் மற்றும் பிற சமூக வலைதளங்கள் பெரும்பாலும் இந்த கட்டுப்பாட்டு விதிகளுக்கு அப்பாற்பட்டுள்ளன. அதே நேரத்தில், தனி நபரின் கருத்து சுதந்திரமும் இதில் சம்பந்தப்பட்டுள்ளது. வலைதளத்தில் மட்டுமே செய்திகளை வெளியிடுவோர் காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் பெரும்பாலான ஊடக ஒழுங்குமுறை விதிமுறைகளைத் தவிர்த்துவிடுகின்றனர். குறிப்பாக, சமூக ஊடகங்கள் அதிகவேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், பொய்யான செய்திகள் என்பவை கட்டுப்படுத்த முடியாதவையாகவும் மிகவும் பரபரப்பை ஏற்படுத்துவதாகவும் உள்ளன.

குறிப்பாக அரசியல் களத்தில், அதிலும் சமீபத்தில் நடைபெற்ற பிரெஞ்ச் மற்றும் அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்த நிலவரத்தைக் காண முடிந்தது. பொய்ச் செய்திகளின் தாக்கத்தைக் கண்டுணர்வது அவ்வளவு சுலபமல்ல. பொய்ச் செய்திகளைக் கட்டுப்படுத்துவது என்று வரும்போது, இணையதள ஊடகம், சமூக வலைதள ஊடகம் ஆகியவற்றை முறைப்படுத்துவதைத்தான் குறிக்கிறது. எந்த அளவுக்கு, எப்படி இது சாத்தியம் என்பதுதான் சவாலாக உள்ளது.

தற்போதைய நடைமுறை

பாரம்பரியமான ஊடக ஒழுங்குமுறை என்பது குழப்பமானதாகவும் சிக்கலானதாகவும் உள்ளது. பிரிட்டனில் பத்திரிகைத் துறை ஐ.பி.எஸ்.ஓ. அமைப்பு மூலம் தன்னிச்சையாகவும் சுயமாகவும் நிர்வகிக்கப்படுகிறது. ஆசிரியர்களின் பணி விதிமுறையின் கீழ் பாதிக்கப்பட்டவரின் புகார்கள் மீது முடிவெடுக்கப்படுகிறது.

பொய்ச் செய்திகளைப் பொருத்தவரை, விதிமுறையின் பிரிவு 1ன்படி ஊடகம் ‘உண்மையல்லாத, திசை திருப்பும் அல்லது அரைகுறையான தகவலையோ தலைப்புச் செய்திகள் உள்ளிட்ட செய்திகளுக்கான ஆதாரங்களற்ற படங்களையோ வெளியிடக் கூடாது.’ இந்த விதிமீறலுக்கான தீர்வுகள் வரம்புக்கு உட்பட்டவைதான். பொதுவாக, தவறு இழைத்தோர், சம்பந்தப்பட்ட செய்திகளுக்கு திருத்தம் வெளியிடும்படியும் அல்லது மன்னிப்பை வெளியிடும்படியும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த முடிவுகளைச் சட்டப்படி அமல்படுத்த முடியாது. இருந்தாலும் வெளியீட்டாளர்கள் ஏறக்குறைய எப்போதுமே இந்த விதியைப் பின்பற்றுகின்றனர்.

பிரிட்டனில் ஒலிபரப்புத் துறையைப் பொருத்தவரையில், ஒலிபரப்பு விதி, பிரிவு ஐந்தில் பொய்யான செய்திகள் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. இதன்படி ஒலிபரப்பு செய்வோர் செய்திகளை வெளியிடும்போது உரிய துல்லியத்தன்மையுடனும் பாரபட்சமற்றும் வெளியிட வேண்டும். இந்த விதியை மீறுவோர் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். மிக முக்கியமான புகார்களின் அடிப்படையில் ஒலிபரப்பு உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும் அல்லது விலக்கிக்கொள்ளப்படும்.

சமூக ஊடகங்களுக்கு இந்தக் கட்டுப்பாட்டிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இணையதள இதழை நடத்துவோர் ஐ.பி.எஸ்.ஓ. அமைப்பு மூலம் முறைப்படுத்தப்படுகின்றனர் என்றாலும், நடைமுறையில் இந்த அமைப்பில் ஒருசில இணையதள ஊடகங்கள் மட்டுமே உறுப்பினராக இடம்பெற்றுள்ளனர். இணையதளம் வழியாக வெளியிடப்படும் அனைத்து அறிக்கைகளும் அவதூறு சட்டத்திற்கு உட்பட்டவை. அது மட்டுமல்லாமல், இனம் அல்லது மத அடிப்படையில் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலோ, தரம் தாழ்ந்த விதத்திலோ உள்ளடக்கம் இருந்தால் கிரிமினல் சட்டத்தின்படியும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஐரோப்பிய ஒன்றியத்தைப் பொருத்தவரையில், ஆடியோ விஷுவல் மீடியா சர்வீசஸ் டைரக்டிவ் 2007 என்ற ஒழுங்குமுறை விதி பின்பற்றப்படுகிறது. குறிப்பாக, ஆடியோ விஷுவல் சேவைகளை வழங்குவோர், ஆசிரியர் குழுவுக்கான பொறுப்பை ஏற்க வேண்டும். இந்த விதி, சமூக ஊடகங்களுக்குப் பொருந்தாது. பத்திரிகைகள் அல்லது இணையதள வெளியீடுகள், தனியார் பிளாக்குகள் ஆகிய ஊடகங்கள், இந்த ஒழுங்குமுறை வழிகாட்டுதலுக்கு உட்பட்டவை அல்ல. ஆனால் ஆடியோ விஷுவல் தகவல்களுக்கு இந்த ஒழுங்குமுறை பொருந்தும்.

இணையதளத்தில் வெளியிடப்படும் தகவல்கள் மக்களிடையே பெருமளவில் தாக்குதலை ஏற்படுத்துவதால், ஐரோப்பிய ஆணையம் சமீபத்தில் இந்த ஒழுங்குமுறை விதியில் திருத்தம் கொண்டுவந்துள்ளது. இணையதள ஊடகங்கள் சுய கட்டுப்பாட்டைப் பின்பற்ற வேண்டும் என இதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. செய்திகளில் உண்மைத்தன்மையைப் பொருத்தவரை இணையவழி ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என இந்த விதியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இது, கொள்கை அடிப்படையிலான திருத்தமே தவிர, குறிப்பாக எந்த அறிவுறுத்தலும் இதில் கூறப்படவில்லை.

சுருக்கமாகச் சொல்வதென்றால் பொய்ச் செய்திகளைப் பொருத்தவரை, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒழுங்குமுறை விதிகள், சமூக ஊடகத்தையும் வலைதள வெளியீட்டையும் எந்த ஒழுங்குமுறைக்கும் உட்படுத்தவில்லை. அவதூறு சட்டம் அல்லது கிரிமினல் சட்டங்களின்படி நடவடிக்கை எடுப்பது மட்டுமே மிகச் சிறந்த தீர்வாக உள்ளது.

பிரான்ஸ் நாட்டின் அதிபர் மாக்ரான் வெளியிட்ட அறிவிப்பு பொய்யான செய்திகள் எங்கிருந்து வெளியிடப்பட்டாலும் அதைக் கட்டுப்படுத்தற்கான ஒரு இலக்கை நிர்ணயித்துள்ளது. எப்படி இதைச் செய்யப்போகிறார் என்பதைக் குறித்து எந்த விவரத்தையும் அவர் கூறவில்லை.

இணையதள ஊடகத்தில் வெளியாகும் செய்திகளின் உள்ளடக்கத்தில் ஓர் ஒழுங்குமுறையை அறிமுகப்படுத்துவது ஒரு வழிமுறையாக இருக்கலாம். ஆனால், சட்ட அடிப்படையிலான கண்ணோட்டத்தில் பொய்யான செய்தி எது என்பதை வரையறுப்பது சுலபமல்ல. பொய்யான செய்தி என்ற வார்த்தை அதன் தன்மையை வெளிப்படுத்துகிறது. ஆனால், தனது ஜனநாயகப் பணியை நிறைவேற்றுவதில் ஊடகங்கள் தவறிழைப்பது நீண்டகாலமாக அனுமதிக்கப்பட்டுவரும் நிலையில் - செய்திகள் தொடர்பான உண்மைகளை கண்டறிவதற்கு ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் முயன்று வரும்வரை - உண்மை என்பதிலிருந்து பொய் என்பதை எப்படி வேறுபடுத்துவது?

உயிரோட்டமான விவாதச் சூழல்

இரண்டாவதாக, கருத்து வெளியிடும் சுதந்திரம் என்பதை நிராகரிக்க முடியாது. சமூக வலைதள ஊடகத்தில் அதிக அளவுக்குப் பேச்சு சுதந்திரம் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், இந்த வலைதளங்கள்தான் கார்ப்பரேட் அதிகார ஆதிக்கத்திற்கு உட்படாத, செய்திகளுக்கான மிக முக்கியமான மாற்று வழிமுறையாக அமைந்துள்ளன. இந்தத் தளத்தைக் கட்டுப்படுத்தினால், உயிரோட்டமான இணையதள விவாதத்தை முடக்கும் ஆபத்து நேரிடும்.

மேலும், மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய உடன்பாட்டின் 10ஆவது பிரிவு கருத்து வெளியிடும் சுதந்திரத்தைப் பாதுகாக்கிறது. பொது நலன் அடிப்படையில் மட்டுமே இந்த சுதந்திரத்திற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அரசியல் அடிப்படையிலான பேச்சைக் கட்டுப்படுத்தும் எந்த முயற்சியும் மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் தலையிடுவதற்கு வழிகோலுவதாக அமையலாம்.

மரபார்ந்த ஊடகங்களைவிடக் குறைந்த அளவிலான தாக்கத்தைத்தான் சமூக ஊடகங்கள் ஏற்படுத்துகின்றன எனக் கருதப்பட்டாலும், சமூக ஊடகத்தில் காணப்படும் பேச்சு சுதந்திரத்தின் முக்கியத்துவம், இதற்குக் கட்டுப்பாட்டைக் கொண்டுவரும் நிலையை பிரிட்டனுக்கு ஏற்படுத்தியுள்ளதாகத் தோன்றுகிறது.

பேச்சு சுதந்திரத்தின் முக்கியத்துவம் குறித்து பெரும் சிந்தனையாளரான ஜான் ஸ்டூவர்ட் மில் 150 ஆண்டுகளுக்கு முன்னரே தெளிவாகக் வலியுறுத்தியுள்ளார். தங்கு தடையற்ற விவாதம்தான் உண்மையைக் கண்டறியத் துணை நிற்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதை நாம் ஒப்புக்கொள்ளும்போது, முந்தைய நிலைக்குத்தான் திரும்ப நேரிடுகிறது. போலியான செய்திகள் தனி நபர்களுக்கு எந்தத் தீங்கையும் ஏற்படுத்தாத வரையில், அரசியல் சூழல் விதிவிலக்காக இருந்தாலும், சமூக வலைதள ஊடகங்களுக்கு அவதூறுச் சட்டம் மற்றும் கிரிமினல் சட்டம் நீங்கலாக வேறு எந்தக் கட்டுப்பாடும் தேவையற்றதாக இருக்கலாம்.

நன்றி: https://qrius.com/cannot-ban-fake-news/

தமிழில்: ராஜலட்சுமி சிவலிங்கம்

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

புதன் 31 ஜன 2018