விசாரணைக்கு அழைத்தால் செல்வேன்: ஓபிஎஸ் பேச்சு!


‘தமிழகத்தில் தேசிய கட்சிகளால் எந்த காலத்திலும் எந்த நிலையிலும் காலூன்ற முடியாது’ என்று தெரிவித்துள்ளார் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
சென்னை வேப்பேரியில் உள்ள கல்லூரியில், நேற்று (ஜனவரி 30) நடந்த விழாவொன்றில் கலந்துகொண்டார் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். விழாவில் பங்கேற்று மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசித்தார். அதன்பின், கல்லூரி இதழை வெளியிட்டுப் பேசினார். கல்வி, கலை, விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவியர்களுக்குப் பரிசுகள் வழங்கினார்.
விழாவில் கலந்துகொண்ட பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ், தற்போதைய தமிழக அரசியல் நிலவரம் குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். “தமிழகத்தில் திராவிட கட்சிகள் காலூன்றி 50 ஆண்டுகள் ஆகிறது. இனி தேசிய கட்சிகளால் எந்த காலத்திலும், எந்த நிலையிலும் தமிழகத்தில் காலூன்ற முடியாது. இதுதான் தமிழக மக்களின் தீர்ப்பு” என்று கூறினார்.
அதன்பிறகு தமிழக அரசு செயல்படும் விதம் குறித்துப் பேசியவர், தன்னுடன் ஆலோசித்த பின்னரே, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவுகளை அறிவிப்பதாகத் தெரிவித்தார். அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணக் கட்டணம் உயர்த்தப்பட்ட பின்பு தமிழகமெங்கும் நடைபெறும் போராட்டங்கள் குறித்தும் கருத்து தெரிவித்தார். “பிற மாநிலங்களைவிட, தமிழகத்திலுள்ள பேருந்து கட்டணம் குறைவாகவே உள்ளது. அனுமதி பெறாமல், பொது சொத்துகளைச் சேதப்படுத்தும் வகையில் சிலர் போராட்டம் நடத்துகிறார்கள். அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் அழைத்தால், ஆணையத்துக்குச் சென்று பேசுவேன் என்று கூறினார். “இதுவரை நீதியரசர் ஆறுமுகசாமி விசாரணைக்கு ஆஜராகும்படி என்னை கோரவில்லை; அதனால், நான் ஆஜராகவில்லை” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார் ஓபிஎஸ்.