மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 31 ஜன 2018

சினிமா அரசியல்: தமிழ்நாட்டைப் பின்பற்றுகிறதா கேரளம்?

சினிமா அரசியல்: தமிழ்நாட்டைப் பின்பற்றுகிறதா கேரளம்?

- சிவா

கலை எப்படி எல்லோருக்கும் பொதுவான ஒன்றோ, அதுபோலவே அது சமுதாயத்தின் அத்தனை செயல்பாடுகளுக்கும் பொதுவான ஒன்று. மக்களின் லாபத்துக்காகப் பயன்படுத்துவதும், சுய லாபத்துக்காகப் பயன்படுத்துவதும் அவரவர் சுயத்தைப் பொறுத்தது. சினிமா ஏற்படுத்திய மிகப்பெரிய தாக்கத்தைத் தமிழகத்தில் அதிகம் பார்க்கலாம். அதற்குச் சரிசமமாக மலையாள சினிமாவும் தன்னை மாற்றிக்கொண்டு வருகிறது. அது கடந்த வருடம் நடைபெற்ற நடிகை கடத்தல் வழக்கிலிருந்து மிகப்பெரிய அளவில் நடைபெற்றுவருவது மறுக்க முடியாத உண்மை.

நடிகை கடத்தல் வழக்கில், திலீப் கைது செய்யப்பட்டபோது அவருக்கு உதவக்கூட யாரும் முன்வரவில்லை. ஆனால், முதல் நபராகக் களமிறங்கியவர் இன்னசண்ட். அரசியல்வாதி, நடிகர் என இருமுகம் கொண்ட இன்னசண்ட் அம்மா (Association of Malayalam Movie Artists -AMMA) அமைப்பின் தலைவராகவும் இருந்துவருகிறார். அதே அமைப்பின் பொருளாளராகப் பதவி வகித்த நடிகர் திலீப்பை எப்படியும் காப்பாற்றிவிட வேண்டும் என்று பலவிதங்களில் முயற்சித்தார். ஆனால், அவ்வமைப்பின் பொதுச் செயலாளரான மம்மூட்டியின் தலைமையில் ஒன்றிணைந்த செயற்குழு உறுப்பினர்கள் பிருத்திவிராஜ், நிவின் பாலி, ரம்யா நம்பீசன் ஆகியோரின் கடும் எதிர்ப்பினாலும், ஒன்றிணைந்த மலையாளத் திரையுலக நடிகைகளின் காத்திரமான செயல்பாட்டினாலும் திலீப்பை அம்மா அமைப்பின் பொருளாளர் பதவியிலிருந்து விடுவித்ததோடு, உறுப்பினர் சேர்க்கையையும் நீக்கினார்கள். அத்துடன் திலீப் விவகாரத்தில் தலையிடாமல் இருந்திருந்தால் அம்மா அமைப்பின் தலைமை காப்பாற்றப்பட்டிருக்கும். ஆனால், வாழவிட்டார்களா கல்யாண ராமனை?

திலீப்புக்கு சிறைவாசம் தொடங்கியதிலிருந்து, அரசியல் ரீதியாக அம்மா அமைப்பின் நிர்வாகத்தினருக்கும், அவ்வழக்கை விசாரித்த காவல் துறையினருக்கும் கொடுக்கப்பட்ட நெருக்கடி, இவர்களை ஆளும்கட்சியிடம் முறையிட வைத்தது. அதன் காரணமாக திலீப் வழக்கில் எவ்வித அழுத்தங்களும் ஏற்படாமல் கேரளாவை ஆளும் முதல்வர் பினராயி விஜயனின் அரசாங்கம் பார்த்துக் கொண்டது. திலீப் கைது செய்யப்பட்டு, பல முறையீடுகளும் தோல்வியில் முடிந்து, ஒருவழியாக திலீப் ஜாமீனில் வெளிவந்தபோது, அம்மா அமைப்பில் அவர் வகித்த பதவியை திரும்பக் கொடுப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டது. இதை, அம்மா அமைப்பின் தலைவர் இன்னசண்டும், துணைத் தலைவர் பதவி வகிக்கும் கணேஷ் குமாரும் சிரமேற்கொண்டு செய்தனர். ஆனால், மம்முட்டியின் அறிவுறுத்தலோடு செயல்படும் பிருத்திவிராஜ் அணி கடுமையாக எதிர்த்தனர். தலைவர் பதவியிலிருந்தும் நினைத்ததை செய்ய முடியாததும், அடுத்தடுத்த அம்மா அமைப்பின் செயல்பாடுகளுடன் தன்னால் ஒத்துப்போக முடியாது என்பது தெரிந்ததும், ‘இந்த பதவிக்காலம் முடிவடைந்ததும் தலைவர் பதவிக்குப் போட்டியிட மாட்டேன்’ என இன்னசண்டை அறிவிக்க வைத்தது.

இந்த உள்போராட்டத்தில் வெற்றிபெற்ற மம்மூட்டி அணியினர் மகிழ்ச்சி அடைந்தாலும், இன்னசண்டின் பின்னால் இருந்துகொண்டு அனைத்தையும் இயக்கிவந்த துணைத்தலைவர் கணேஷ் குமாருக்கு இது மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. எனவே, அடுத்து தலைவர் பதவியைப் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபடத் தொடங்கினார் கணேஷ் குமார். இவர், காங்கிரஸ் தலைமையிலான கேரள அரசாங்கம் பலவற்றில் அமைச்சர் பதவி வகித்த பாலகிருஷ்ண பிள்ளையின் மகன். இவரது அரசியல் பாதைகளை ஒட்டியே கணேஷ் குமாரும் கேரள அரசியலில் பல பதவிகளை வகித்தார். அப்படிப்பட்ட அரசியல் காலங்களில்தான் தங்களது இமேஜை மக்கள் முன் வளர்த்துக்கொள்ள திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். அதனடிப்படையிலேயே அம்மா அமைப்பிலும் துணைத்தலைவர் பதவிக்கும் வந்தார். அடுத்து தலைவர் பதவிக்கு நிற்க கணேஷ் எடுத்த முயற்சிகள் அனைத்துக்கும் மம்மூட்டி குறுக்கே நின்று வருகிறார். மம்மூட்டி மற்றும் அவரது ஆதரவாளர்கள் பெரும்பான்மையாக இருப்பதுடன், அவர்கள் திரையுலகின் வளர்ச்சிக்குப் பாடுபடுவது கண்கூடாகத் தெரிகிறது. இவர்கள் தலைமையில் உருவாக்கப்பட்டிருக்கும் WCC எனப்படும் பெண்கள் பாதுகாப்புக் குழு, திரையுலகில் இருக்கும் பெண்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது. ஹாலிவுட்டில் உருவாக்கப்பட்ட பெண்கள் பாதுகாப்பு அமைப்புக்கு முன்பே இவர்கள் களமிறங்கியது, கூடுதல் மதிப்பு. இதற்கான அனைத்து தேவைகளையும் பினராயி விஜயனின் தலைமையிலான அரசு உடனடியாகவே செய்து தருகிறது. கணேஷ் குமாரும், அவரது தந்தை பாலகிருஷ்ண பிள்ளையும் பினராயி விஜயனின் சி.பி.ஐ.எம் கட்சியில் இணைய நினைத்ததும் கனவாகவே போய்விட்டதால் அரசியல் பக்கமும், திரையுலகப் பக்கமும் கணேஷ் குமாருக்கு எதிராக அமைந்திருப்பதுடன் மம்மூட்டி அணிக்குப் பலத்தையும் சேர்த்திருக்கிறது.

வருகிற ஜூலை மாதத்துடன், தற்போதைய அம்மா அமைப்பின் தலைவர் இன்னசண்டின் பதவிக்காலம் முடிவடைந்து அடுத்த தேர்தல் நடத்தப்படும். அந்தச் சமயத்தில் WCC அமைப்பை நடைமுறைக்கு கொண்டுவந்து, திரைக்கலைஞர்களின் பேராதரவைப் பெற்று தேர்தலிலும் பெரும்பான்மை வெற்றியைப் பதிவு செய்துவிடலாம் எனக் காத்திருக்கிறது மம்மூட்டி அணி.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

புதன் 31 ஜன 2018