மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 31 ஜன 2018

இந்தியாவுக்கே வழிகாட்டும் தமிழகம்!

இந்தியாவுக்கே வழிகாட்டும் தமிழகம்!

‘முதல்வரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம், இந்திய நாட்டுக்கே வழிகாட்டும் சிறப்புத் திட்டம்’ என அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

டெல்லியின் விஞ்யான் பவனில் மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத் ராஜ் அமைச்சகம் சார்பில் மாநில பஞ்சாயத் ராஜ் அமைச்சர்களுடனான ஒருநாள் மாநாடு நேற்று (ஜனவரி 30) நடைபெற்றது. இந்த மாநாட்டில் மத்திய ஊரக வளர்ச்சித் துறை, பஞ்சாயத் ராஜ் மற்றும் கனிமவளத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமை வகித்தார். தமிழக அரசின் சார்பில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர், “தமிழகத்தின் கிராமப் பகுதிகளில் சீரான வளர்ச்சியை உருவாக்கிட தரமுள்ள கட்டமைப்புகளைப் போதிய அளவில் ஏற்படுத்தத் தமிழக அரசு உறுதி பூண்டுள்ளது. ஊரகப் பகுதிகள் அனைத்தும் சமமான வளர்ச்சி அடைய குக்கிராமங்களை அடிப்படை அலகாகக்கொண்ட, இந்தியாவிலேயே புதுமையான அணுகுமுறையைத் தமிழக அரசு பின்பற்றி வருகிறது. மொத்தமுள்ள 12,524 கிராம ஊராட்சிகளில் உள்ள 79,394 குக்கிராமங்களில், குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளை வழங்கும் நோக்கத்துடன், தமிழ்நாடு குக்கிராமங்கள் கட்டமைப்பு மேம்பாட்டு (தாய்) திட்டம் 2011-12 முதல் 2015-16ஆம் ஆண்டு வரை முழுமையாக மாநில அரசின் நிதியில் ரூ.3,680 கோடி மதிப்பீட்டில் சாலைகள், குடிநீர் வசதி, சுகாதாரம் போன்ற 2,31,795 உட்கட்டமைப்புப் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளன” என்று குறிப்பிட்டார்.

மேலும், “தாய் திட்டத்தின்கீழ் இரண்டாம் கட்டமாக 2016-17ஆம் ஆண்டில் சிறுபாசன ஏரிகளைப் புனரமைப்பு செய்திடவும், சாலைப் பணிகள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு பணிகளை மேம்படுத்த இத்திட்டம் விரிவாக்கப்பட்டு ரூ.750 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. மாநில அரசின் சொந்த நிதியில் செயல்படுத்தப்படும் ‘முதல்வரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம்’ இந்திய நாட்டுக்கே வழிகாட்டும் சிறப்புத் திட்டமாகும்” எனப் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

“மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களைத் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் 65,988 தூய்மை காவலர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்கள் வீடு வீடாகச் சென்று குப்பைகளைச் சேகரிக்கவும், பிரிக்கவும் அவற்றைக் குப்பை கிடங்குகளுக்குக் கொண்டு சேர்க்கவும் ஈடுபடுத்தப்படுகிறார்கள்” என கூறிய அவர், இத்திட்டத்தைப் பிற மாநில அலுவலர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து பார்வையிட்டுப் பாராட்டிச் சென்றுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டினார்.

“முழு சுகாதார தமிழகம் உருவாக்க அனைத்து பங்கேற்பாளர்களையும் ஒருங்கிணைத்துத் திறந்தவெளியில் மலம் கழித்தல் பழக்கம் 16 மாவட்டங்களில் முழுமையாக அகற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள 15 மாவட்டங்களில் 31.03.2018-க்குள் திட்டம் நூறு சதவிகிதம் அமல்படுத்தப்படும்” என்றும் உறுதியளித்தார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 31 ஜன 2018