மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 31 ஜன 2018

உயர் நீதிமன்ற நீதிபதி சுக்லா பதவி விலகல்?

உயர் நீதிமன்ற நீதிபதி சுக்லா பதவி விலகல்?

‘அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சுக்லா பதவி விலக வேண்டும் அல்லது சுயவிருப்பத்தின் பேரில் ஓய்வுபெற வேண்டும்’ என்று உச்ச நீதிபதி தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உத்தரவிட்டுள்ளார். இதற்கு சுக்லா சம்மதிக்காததால், அவரை பதவி நீக்கம் செய்யுமாறு பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு தலைமை நீதிபதி கடிதம் எழுதுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் தடையை மீறி, மாணவர்களைச் சேர்த்துக்கொள்ள ஒரு மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கியதாகக் கடந்த செப்டம்பர் மாதம் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீநாராயண் சுக்லா மீது புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரிப்பதற்காக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, எஸ்.கே.அக்னிஹோத்ரி மற்றும் பி.கே.ஜெய்ஸ்வால் ஆகியோர் கொண்ட குழுவை நியமித்தார் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா.

சுக்லா மீதான புகார்களை விசாரித்த நீதிபதிகள் குழு, அவற்றை உறுதி செய்தது; அவரைப் பதவி நீக்கம் செய்யுமாறு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்குப் பரிந்துரை செய்தது. இதை ஏற்றுக்கொண்ட மிஸ்ரா, சுக்லா உடனடியாகப் பதவி விலக வேண்டும் அல்லது சுய விருப்பத்தின் பேரில் ஓய்வு பெறுவதாக அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

தன் மீதான புகார்களுக்கு மறுப்பு தெரிவித்த நீதிபதி சுக்லா, தான் பதவி விலக முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். இதையடுத்து, அவருக்கு நீதித்துறை சார்ந்த பணிகள் ஒதுக்கப்பட வேண்டாம் என்று அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு மிஸ்ரா பரிந்துரைத்துள்ளார். நேற்று வெளியிடப்பட்ட அலகாபாத் உயர் நீதிமன்ற அலுவல் அறிவிப்பில் அவர் பெயர் இடம்பெறவில்லை. இதன்மூலம், இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியால், உயர் நீதிமன்ற நீதிபதியை பதவி நீக்கம் செய்ய முடியாது. இதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற வேண்டும். இதனால், சுக்லாவைப் பதவி நீக்கம் செய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு மிஸ்ரா கடிதம் எழுதுவார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அவ்வாறு நிகழ்ந்தால், மாநிலங்களவையில் நீதிபதி சுக்லா மீதான புகார் குறித்து விசாரிக்க மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்படும். இதில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அல்லது நீதிபதி, உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி மற்றும் சிறப்புமிக்க வழக்கறிஞர் என மூன்று பேர் இடம்பெறுவர். இவர்களது விசாரணை அறிக்கையின் அடிப்படையில், மாநிலங்களவையில் சுக்லாவின் பதவி நீக்க தீர்மானம் நிறைவேற்றப்படும். மாநிலங்களவையில் பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற பிறகு, மக்களவையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்படும். இரு அவைகளின் ஏகோபித்த முடிவுக்குப் பிறகே, குடியரசுத் தலைவர் உயர் நீதிமன்ற நீதிபதியின் பதவி நீக்கத்துக்கு உத்தரவிடுவார் என்பது நடைமுறை.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

புதன் 31 ஜன 2018