மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 31 ஜன 2018

சிறப்புத் தொடர்: உங்கள் மனசு!

சிறப்புத் தொடர்: உங்கள் மனசு!

டாக்டர் சுனில்குமார், டாக்டர் ஜெயசுதா காமராஜ்

மாய உலகின் நிஜ அடிமைகள்

ஃபேஸ்புக்கினால் இந்த விஷயத்தைத் தெரிந்துகொண்டேன்; ட்விட்டரின் மூலமாக எனக்கு வேலை கிடைத்தது; இன்ஸ்டாகிராமில் இட்ட கமெண்ட்டைப் படித்துவிட்டு, அந்தப் பிரபலம் அவரது நட்பு வட்டத்தில் என்னை இணைத்துக்கொண்டார். இப்படிப்பட்ட பேச்சுகள் நமக்கு சமூக வலைதளங்களின் பாசிட்டிவ் பக்கத்தைக் காட்டும். இதற்கு நேரெதிராக, இதற்கு சிலர் அடிமையாவதும் உண்டு. இது டிஜிட்டல் அடிக்ஷன் (Digital Addiction) என்று அழைக்கப்படுகிறது.

எடை கூடுவது அல்லது குறைவது, மணிக்கட்டு நரம்புகளில் அழுத்தத்தை உணர்வது, தலைவலி, கழுத்து அல்லது பின்பக்கத்தில் வலி ஏற்படுவது, வறண்ட மற்றும் சிவப்பான கண்கள் என்று இதன் அறிகுறிகளைப் பட்டியலிடுகிறது கூகுள். இதைப் படிக்கும் பலருக்கு, மேற்கண்ட அறிகுறிகளில் ஓரிரண்டு தங்களுக்கும் இருப்பதாகத் தோன்றலாம். ஆனால், இவை எல்லாமே ஒருவரிடம் தென்படும்போது, அந்த மனிதனின் வாழ்வே தலைகீழாக மாறிப்போகிறது.

சமூக வலைதளங்களுக்காகவே ஒருவர் வாழ முற்படும்போது, எப்படிப்பட்ட மாயையில் சம்பந்தப்பட்டவர் சிக்கியிருக்கிறார் என்பது புலப்படுகிறது. மனநல சிகிச்சை மையங்களால் மட்டுமே, இவர்களைக் குணப்படுத்த இயலும். அப்படியொரு பெண்தான் நடாஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

வீடு ஏற்படுத்திய தாக்கம்

சென்னையில் வாழும் ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பம். அப்பா பள்ளி ஆசிரியர். அம்மா வீட்டைக் கவனித்துக்கொள்பவர். ஓர் அண்ணன். இதுதான் நடாஷாவின் உலகம். எல்லா வீடுகளிலும் நடப்பது போலவே, ஆண் பிள்ளைக்கு முக்கியத்துவம் கொடுப்பது நடாஷாவின் வீட்டிலும் நிகழ்ந்தது. இது போதாதென்று, கறுப்பாக இருப்பதையும் கவரும் உடல்வாகு இல்லாததையும் நினைத்து வருத்தம் கொண்டிருந்தாள் நடாஷா. வீட்டில் இருப்பவர்கள் கவனிக்காததால், இது தாழ்வு மனப்பான்மையாக மாறியது. எந்தவித பாராட்டுகளும் அரவணைப்புகளும் இல்லாமல் இருந்ததாக உணர்ந்தாள் நடாஷா.

பதின்ம வயதில், எல்லாரும் தன்னை உற்று நோக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகும். நடாஷாவுக்கும் அது நேர்ந்தது. பதினொன்றாம் வகுப்பு படித்தபோது, அவளுக்கு ஃபேஸ்புக்கும் இன்ஸ்டாகிராமும் அறிமுகமாயின. “ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் உனக்கு அக்கவுன்ட் இல்லையா?” என்ற சக மாணவர்களின் கிண்டலே இதற்குக் காரணமாக இருந்தது. தன் வயதையொத்த நண்பர்களுக்கு இருப்பது போன்று அதிகமான நண்பர்களும் லைக்ஸும் தனக்குச் சமூக வலைதளங்களில் கிடைக்கவில்லையே என்று கவலையடைந்தாள் நடாஷா.

அந்த நேரத்தில், ஃபேஸ்புக் பக்கத்தில் புரொபைல் பிக்சராக பூனை, நாய் புகைப்படங்களையே பதிவிட்டுவந்தாள். நடுத்தரக் குடும்பத்தினருக்கே உரித்தான முன்னெச்சரிக்கை உணர்வு இது. ஆனால், தனது நண்பர்களின் புகைப்படங்களுக்குக் கிடைக்கும் பேராதரவைப் பார்த்த பின்பு, அவள் மனம் மாறினாள். சில நாள்கள் கழித்து, தனது புகைப்படத்தைப் பதிவேற்றினாள். அது பெரிய வரவேற்பைப் பெறவில்லை.

புகைப்படம் செய்த மாயம்

அப்போது, புகைப்படம் எடுக்கும் ஓர் இளைஞனை அறிமுகம் செய்து வைத்தாள் நடாஷாவின் பள்ளித் தோழி. நன்றாகப் புகைப்படம் எடுப்பான் என்ற ஒரே காரணத்துக்காக, அவனுடன் நெருங்கிப் பழகினாள் நடாஷா. அவன் எடுக்கும் புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்ய, அவளது ஃபேஸ்புக் பக்கத்தில் லைக்ஸ் அதிகமாகத் தொடங்கியது. அதன்பிறகு, அவனுடன் சேர்ந்து ஊர் சுற்றுவதும் அதிகமானது.

எது பொய், எது உண்மை என்று உணர்த்தாத மாயமான டிஜிட்டல் உலகம், அதன் பிறகு நடாஷாவை முழுதாக ஆக்கிரமித்தது. இன்ஸ்டாகிராமில் தரமான புகைப்படங்கள்தான் வரவேற்பைப் பெறும் என்று யாரோ சொன்னது, நடாஷாவின் கவனத்தை போட்டோ ஷூட் பக்கம் திருப்பியது. சமூக வலைதளங்களில் நடாஷாவின் புகைப்படங்களைப் பார்த்த சிலர், நீ குறும்படங்களில் நடிக்கலாமே என்றார்கள். நடிப்பு என்ற பாதையைத் தேர்ந்தெடுத்தபோது, பள்ளி அவளுக்கு வேண்டாவெறுப்பாக மாறியிருந்தது.

இதனால் விழி பிதுங்கியது அவளது பெற்றோர்தான். விதவிதமாக ஆடைகள் வேண்டும், ஸ்கூட்டி வேண்டும், செலவுக்குப் பணம் வேண்டும் என்று நச்சரித்தாள் நடாஷா. பெற்றோர் மறுப்பு தெரிவித்தபோது, வீட்டிலிருந்து திருடத் தொடங்கினாள்.

சமூக வலைதளங்களில் நட்பு வட்டத்தைப் பெரிதுபடுத்துவதற்காக, முன்பின் தெரியாதவர்களின் நட்பு அழைப்புகளை ஏற்றுக்கொண்டாள்; அவர்களோடு சாட்டிங் செய்தாள். ஸ்மார்ட்போனே கதி என்று கிடந்தாள் என்று சொல்வது மிகச் சரியானதாக இருக்கும். ஆனால், நடாஷாவின் பெற்றோர் அவளுக்கு ஸ்மார்ட்போன் வாங்கித் தரவே இல்லை. ஃபேஸ்புக்கில் நண்பரான யாரோ ஒருவர், நடாஷாவுக்கு ஸ்மார்ட்போன் பரிசளித்திருந்தார். அது செய்த கைங்கர்யம்தான் இவ்வளவும்.

யாரென்று தெரியாதவர்களுடன் நடாஷா பழகியது அவளது குடும்பத்தினரைப் பதறவைத்தது. அவர்களுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. இந்த விஷயத்தை வெளியில் சொன்னால், உறவினர்கள் மத்தியில் மானம் போய்விடும். இதனால் வீட்டில் சண்டை நடந்தால் அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் கேவலமாகப் பார்ப்பார்கள். என்ன செய்வதென்று இனம்புரியாத கலக்கத்தில் இருந்தவர்கள், மைண்ட் ஸோன் மருத்துவமனைக்குச் சென்றனர். அங்கு, நடாஷாவுக்கு கவுன்சலிங் கொடுப்பதென்று முடிவு செய்யப்பட்டது. ஆனால், அவளது பெற்றோரால் அதை உடனடியாகச் செயல்படுத்த முடியவில்லை.

இடைப்பட்ட காலத்தில், நடாஷாவை ஆடம்பர மோகம் ஆட்கொண்டிருந்தது. நினைத்தவுடன் கார் புக் செய்து எங்காவது சென்றுவிடுவாள். இரவில் ஆண் நண்பர்களுடன் ஊர் சுற்றிவிட்டு வருவாள். இவர்களில் சிலர், நடாஷாவைத் தேடி வீட்டுக்கே வந்தனர். இந்த இளைஞர்களை அவளது பெற்றோரால் கண்டிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு செல்வாக்கு மிக்கவர்களுடன் பழகிவந்தாள் நடாஷா.

ஆடம்பரமாக வாழும் பெண்கள் புகைபிடிக்க வேண்டும் என்ற தவறான கண்ணோட்டத்தைப் பின்பற்றினாள் நடாஷா. மது மற்றும் புகைப்பழக்கத்தினால், அவளது உடல் நலிந்தது. இது போதாதென்று, உடல் மெலிகிறேன் என்று பட்டினி கிடந்தாள். எல்லா நேரமும் சாட்டிங், போஸ்ட்டிங் என்று சமூக வலைதளங்களையே பார்த்துவந்தாள். மற்றவர்களின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களோடு ஒப்பிட்டுப்பார்த்து வருத்தப்படுவதையும் வழக்கமாக்கிக் கொண்டிருந்தாள். இதனால் அவள் சரியாகத் தூங்கவில்லை.

தலைகீழ் மாற்றங்கள்

வாழும் உலகத்தை எதிர்கொள்ள விரும்பாமல், டிஜிட்டல் உலகத்திலேயே இருக்க விரும்பினாள் நடாஷா. முழுமையாக அவள் டிஜிட்டல் அடிக்ஷனுக்கு ஆளாகியிருந்தாள். படிப்பைக் கைவிடுவதாகப் பெற்றோரிடம் சொன்னாள். குறும்படங்களில் நடிப்பதுதான் தனது லட்சியம் என்றாள். படிப்பே வாழ்க்கைத் துணை என்று நம்பிய நடாஷாவின் பெற்றோருக்கு, இந்த அதிர்ச்சியைத் தாங்கவே முடியவில்லை.

நடாஷாவின் நடத்தை மாறிப்போனதை உணர்ந்த பெற்றோர், அப்போதுதான் அவளது ஃபேஸ்புக் பக்கத்தையே பார்த்தனர். பார்த்தவுடன், அவர்கள் அரண்டுபோனார்கள். காரணம், அந்த அளவுக்கு அவளது புகைப்படங்கள் ஆபாசமாக இருந்தன. இது மட்டுமல்லாமல், நடாஷாவுக்காக ஆண் நண்பர்கள் ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டனர்.

இதை எல்லாம் காணச் சகிக்காமல், நடாஷாவுக்குத் திருமணம் செய்துவைக்கலாம் என்று யோசனையில் இறங்கினர் அவளது குடும்பத்தினர். இதைச் சொன்னதும், நடாஷாவின் அட்டகாசம் இன்னும் அதிகமானது. இரண்டு நாள்கள் வெளியில் தங்கிவிட்டு, நான் ஷூட்டிங் போய் வந்தேன் என்று சொல்லியிருக்கிறாள். இதற்கு மேல் தாங்க முடியாதென்று, மீண்டும் மைண்ட் ஸோன் மருத்துவமனையை நாடினர் அவளது பெற்றோர். எங்களால் இவளைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை என்று அழுதனர்.

சிகிச்சைக்காக அழைத்துவரப்பட்டபோது, நடாஷா ஒரே ஒரு நிபந்தனை விதித்தாள். “என்னை எத்தனை நாள்கள் வேண்டுமானாலும் மருத்துவமனையில் தங்க வையுங்கள். ஆனால் ஸ்மார்ட்போன், ஃபேஸ்புக் பயன்படுத்த மட்டும் அனுமதியுங்கள்” என்பதே அது. ஆனால், அது நிகழவில்லை.

ஒருவரை போதையிலிருந்து மீட்பதற்கு டீடாக்சின் (De-toxin) தான் சிறந்த சிகிச்சை முறை. உதாரணமாக, ஒருவர் எந்த போதைப்பொருளை பயன்படுத்துகிறாரோ, அதை அவர் அருகில் அண்டவிடாமல் பார்த்துக்கொள்ளவது. மைண்ட் ஸோன் மருத்துவமனை Digital Free World. இந்த வளாகத்தில் செல்போன், லேப்டாப், வாட்ஸ்அப், ஃபேஸ்புக் என்று எதற்கும் அனுமதி இல்லை. இந்தச் சூழலுக்குள் 21 நாள்கள் ஒருவர் தன்னைப் பொருத்திக்கொள்வதே மிகப் பெரிய விஷயம்.

முதல் இரண்டு நாள்கள் அவர்களால் தூங்க முடியாது. வெறுமை அவர்களை வாட்டும். நடாஷாவைப் பொறுத்தவரை, ஆறு மாதங்கள் மருத்துவமனையில் இருக்கிறேன். செல்போனை மட்டும் என்னிடம் கொடுத்துவிடுங்கள் என்றார். அதற்கு, மைண்ட் ஸோன் மருத்துவமனை செவிசாய்க்கவில்லை. இந்த செயல்முறையைக் கடந்துவந்தால், அதுதான் டீடாக்ஸின்.

டிஜிட்டல் அடிக்ஷன் என்பது, பலரால் புது விஷயமாகப் பார்க்கப்படுகிறது. ஆல்கஹால், கஞ்சா, சிகரெட்டுக்குத்தான் மனிதர்கள் அடிமையாவார்கள் என்பதில்லை; செக்ஸ், உணவு, காதல், உறவு, உடற்பயிற்சி, மசாஜ், ஷாப்பிங், சூதாட்டம் என்று எந்த விஷயத்துக்கும் ஒருவர் அடிமை ஆகலாம். அந்த வகையில், டிஜிட்டல் உலகம் எனும் மாயையில் நடாஷா மாட்டிக்கொண்டாள்.

சிகிச்சையின்போது முதல் சில நாள்கள், நடாஷா சரியாகத் தூங்கவில்லை. இதுநாள்வரை பேசிப் பழகிவந்த யாரோடும் தொடர்புகொள்ள முடியவில்லை; என்னுடைய கலர்ஃபுல்லான வாழ்க்கையைக் கெடுத்துவிட்டீர்கள் என்று மருத்துவர்கள் மீதும் பெற்றோர் மீதும் கோபத்துடன் இருந்தாள் நடாஷா.

நடாஷாவை ஆய்வு செய்தபோது, பல விஷயங்கள் அவளுக்குள் இருந்தது தெரியவந்தது. தான் அழகாக இல்லை; கறுப்பாக இருக்கிறேன் என்ற எண்ணங்களால், அவள் அவமானத்தை உணர்ந்தாள். ஆனால், சமூக வலைதளங்களில் அவள் பதிவிட்ட புகைப்படங்களை முகம்தெரியாத பலர் பாராட்டினர். Cute, Awesome போன்ற வார்த்தைகளை, அதுநாள்வரை நடாஷா கேட்டதே இல்லை. அது தனக்குக் கிறக்கத்தைத் தந்ததாகச் சொன்னாள். ஆரம்ப காலகட்டத்தில், ஃபேஸ்புக் ரொம்பவும் ஆறுதலாக இருந்ததாக உணர்ந்தாள்.

அவளது தாழ்வுமனப்பான்மையைப் போக்க, டிஜிட்டல் அடிக்ஷன் மருந்தாக இருந்திருக்கிறது. அவளது நம்பிக்கையை அதிகரிக்கவும், சுயமதிப்பைக் கூட்டவும் அது உதவியாக இருந்தது. குடும்பத்திலோ, பள்ளியிலோ, சமூகத்திலோ அவளை வெளிப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் குறைவாக இருந்தன.

இவர்களது வழிகாட்டுதலுக்குப் பிறகே, தான் மாயையான உலகத்தில் மாயமாகிவிட்டதை நடாஷா உணர்ந்தாள். அதிலிருந்து விடுபட, அவளது உளவியல் சிக்கலுக்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டன.

டிஜிட்டல் அடிக்ஷனால் பாதிக்கப்பட்டவர்கள், டிஜிட்டல் வாசத்தை ஆறுதல்படுத்தும் மருந்தாகப் பார்க்கிறார்கள். அதற்கு ஏற்றவாறு, ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டவுடன் உடனடி பாராட்டு கிடைக்கிறது. இதைப் பார்த்ததும், எத்தனை பேர் தன் மீது அக்கறையாக இருக்கிறார்கள் என்ற எண்ணம் உண்டாகிறது. தொடர்ச்சியாக யாரெல்லாம் லைக்ஸ் போடுகிறார்கள் என்று கவனித்து, அவர்களைத் தனது சிறந்த நண்பர்களாக மனம் ஏற்றுக்கொள்கிறது.

நடாஷாவுக்கு ஏற்பட்ட உளவியல் சிக்கல் எல்லோருக்கும் ஏற்படுமா என்று கேள்விக்கு, பதில் சொல்வது கடினம். எது உயர்ந்தது, எது அழகானது, எது கம்பீரமானது என்று எல்லாவற்றையும் சமூகம் கட்டமைத்திருக்கிறது. அந்தச் சமூகத்தில் அவள் வாழ்கிறாள். அந்தச் சமூகம் தரும் அழுத்தமானது, அதில் வாழும் தனிமனிதனுடைய உளவியலில் சிக்கலை ஏற்படுத்துகிறது. அது, அந்த நபரை டிஜிட்டல் அடிக்ஷனுக்கு ஆளாக்குகிறது.

ஆல்கஹால், சிகரெட் போன்ற போதைப் பழக்கங்கள், ஒருவரது மூளை மற்றும் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும். அதுபோல, டிஜிட்டல் அடிக்ஷன் நேரடியாக மூளையின் ரிவார்டு சர்க்யூட்டைத் தூண்டும். அப்படித் தூண்டப்பட்டால், மீண்டும் மனம் அதைத் தேடும். ஃபேஸ்புக், வாட்ஸ்அப்பினால் இந்த ரிவார்ட் சர்க்யூட் தூண்டப்படும்போதும், இதுவே நிகழ்கிறது.

இது மாதிரியான சூழலை, வெளியில் பெற்றோர்களோ, நண்பர்களோ அமைத்துத்தர முடியாது. அந்த நேரத்தில் தூக்கமின்மையோ, அமைதியின்மையோ, அதிக வன்முறையோ பாதிப்பை ஏற்படுத்தும். அதைத் தடுக்க மருந்துகளைப் பரிந்துரைப்பார்கள் மனநல மருத்துவர்கள். மருந்துகளோடு மட்டும் ஒரு சிகிச்சை முடிந்துவிடாது; அதன் பிறகு, பாதிப்புக்கான மூல காரணம் என்ன, அதன் உளவியல் பின்னணி, எப்படிப்பட்ட சமூக சிக்கல்களுக்கு மத்தியில் நோயாளி வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்பதையும் பார்க்க வேண்டும்.

சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருந்த நாள்களில், எந்த சமூக வலைதளத்தையும் நடாஷா பார்க்கவில்லை. அந்தக் காலகட்டத்தில், நடாஷா எங்கிருக்கிறார், எப்படி இருக்கிறார், ஏன் ஆன்லைனில் வரவில்லை என்று அவளது சமூக வலைதள நண்பர்களில் ஒருவர்கூடக் கேள்வி எழுப்பவில்லை.

பப்புக்குப் போகலாமா, பாண்டிச்சேரியில் ரூம் போடலாமா என்றே நடாஷாவிடம் நலம் விசாரித்திருந்தனர் அவளது நண்பர்கள். அந்த 45 நாள்களில், இப்படிப்பட்ட அழைப்புகளே அவளுக்கு அதிகம் வந்திருந்தன. மிக நேர்மையான விசாரிப்பாக அவற்றுள் ஒன்றுகூட இல்லை. இதற்குப் பிறகே தீவிர உளவியல் சிகிச்சையை ஏற்றுக்கொண்டாள் நடாஷா. மெதுவாக, அந்த மாய உலகிலிருந்து வெளியே வந்தாள்.

வாழ்க்கையில் ஊடுருவும் டிஜிட்டல் சாதனத்தின் தாக்கம்

இன்று, 24 மணி நேரமும் எல்லோருடைய கைகளிலும் ஏதோ ஒரு டிஜிட்டல் சாதனம் தவழ்ந்துகொண்டிருக்கிறது. ஒருவருடைய சுக, துக்கங்களின்போது அது உடன் இருக்கிறது. அந்த நேரத்தில், அவர்களது வாழ்க்கையில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துவிடுகிறது. குழந்தைகளும் இளம் பெண்களும் இதற்கு அதிகளவில் இரையாகிறார்கள்.

சண்டையிட்டாலும் சமாதானமாக இருந்தாலும், கணவன் வேலைக்குச் சென்ற பிறகு மனைவிக்குத் துணையாக இருப்பது செல்போன்தான். அதில் மூழ்கி காணாமல் போகிறோம் என்பது, சம்பந்தப்பட்ட பெண்ணுக்கே தெரியாது.

குழந்தைகள் செல்போனைப் பயன்படுத்தும்போது, அவர்களது மூளை அதிகமாகத் தூண்டப்படுகிறது. அது தரும் உற்சாகத்தையும் குதூகலத்தையும் உணர்ந்த பிறகு, மற்ற விஷயங்கள் அவர்களுக்குச் சலிப்பூட்டுகின்றன. கடைக்குச் செல்வதோ, விளையாடப் போவதோ, உறவினர்களைக் காண்பதோ, அவர்களுக்குப் பெரிய அளவில் ஊக்கத்தைத் தருவதில்லை. மூளையில் ஏற்படும் இந்த தாக்கம், குழந்தைகளின் எதிர்கால வளர்ச்சியையே பாதிக்கிறது

மனிதன் மகிழ்ச்சியைத் தேடும் உயிரி. அந்த மகிழ்ச்சியை யாராவது தடுக்கும்போது, கொலை வெறி உண்டாகிறது. ஃபேஸ்புக், வாட்ஸ்அப்புக்கு அடிமையாவதும், இதுபோன்ற விளைவுகளை ஏற்படுத்தும். ஃபேஸ்புக்கில் மூழ்கிய நடாஷாவிடமிருந்து அவளது பெற்றோர்கள் செல்போனைப் பிடுங்கியபோதும் இதுதான் நிகழ்ந்தது. எனவே, இளைய தலைமுறைக்கு டிஜிட்டல் சாதனங்களை முறையாக உபயோகப்படுத்துவதற்கான கல்வியைத் தர வேண்டும்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 31 ஜன 2018