மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 30 ஜன 2018

டிஜிட்டல் திண்ணை:இளைஞர் அணி இணைச் செயலாளர் ஆகும் உதயநிதி

டிஜிட்டல் திண்ணை:இளைஞர் அணி  இணைச் செயலாளர் ஆகும் உதயநிதி

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. தயாராக வைத்திருந்த ஸ்டேட்டஸுக்குப் போஸ்ட் கொடுத்தது ஃபேஸ்புக்.

“சில வாரங்களாக திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் மகன் உதயநிதி புராணம் அதிகமாக இருக்கிறது. சினிமாவில் டூயட் பாடிக்கொண்டிருந்த உதயநிதி ஸ்டாலின் அரசியல் பற்றிப் பேச ஆரம்பித்திருக்கிறார். திமுக போராட்டங்களில் தலைகாட்ட ஆரம்பித்திருக்கிறார். பஸ் கட்டண உயர்வுக்குக் கண்டனம் தெரிவிக்கிறார். கருத்து சொல்கிறார்.

உதயநிதி சினிமாவுக்கு எண்ட்ரி ஆனபோதே அவருக்கு ரசிகர் மன்றம் தொடங்கப்பட்டது. அன்பில் மகேஷ்தான் அந்த மன்றத்துக்குத் தலைவர். சேலம் ராஜா மன்றத்துக்கு பொருளாளர். அரசியல் கலப்பு இல்லாமல் உதயநிதி ரசிகர் மன்றம் செயல்படும் என தொடங்கப்பட்ட காலத்தில் சொன்னார்கள். ஆனால், கடந்த தேர்தலில் மன்றத்தின் தலைவர் மகேஷுக்கு தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்கப்பட்டு அவர் எம்.எல்.ஏ. ஆகிவிட்டார். அதன் பிறகு மன்ற நிகழ்ச்சிகளில் தலைகாட்டாமல் இருந்தார். ஆனாலும் மன்றத்தின் தலைவர் என்ற பொறுப்பு வேறு யாருக்கும் கொடுக்கப்படவில்லை. ‘மன்றத்தில் இருப்பவர்கள் யாரும் கட்சிப் பணிகளில் ஈடுபடவே கூடாது’ என அடிக்கடி சொல்லிவந்தார் உதயநிதி. அதற்கு அவர் சொன்ன இன்னொரு காரணம், ‘ இது என் ரசிகர் மன்றம். என் ரசிகர்கள் எல்லாக் கட்சிகளிலும் இருப்பார்கள். திமுக என்ற முத்திரையை தயவுசெய்து மன்றத்தில் குத்த வேண்டாம்’ என்பது உதயநிதியின் கருத்தாக இருந்தது. அதன்படியே மன்றம் கட்சிக்கு சம்பந்தம் இல்லாமல்தான் இவ்வளவு நாளாக செயல்பட்டது. இந்த சூழ்நிலையில்தான் இப்போது உதயநிதி அரசியல் பேச ஆரம்பித்திருக்கிறார்.

இது சம்பந்தமாக திமுக வட்டாரத்தில் விசாரித்தோம். ‘2ஜி வழக்கில் கனிமொழி விடுதலை ஆன பிறகு கட்சிக்குள் அவரது ஆதரவும் செல்வாக்கும் கூடியிருக்கிறது. கனிமொழிக்கு முக்கியப் பொறுப்புகள் வழங்க வேண்டும் என கட்சிக்குள்ளிருந்து தளபதிக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. ஸ்டாலின் மனைவி துர்காவுக்குத் தனது மகன் உதயாவை அரசியலில் அடுத்த வாரிசாகக் கொண்டுவர வேண்டும் என்பதுதான் கனவு, ஆசை. இவ்வளவு நாளாக இது சம்பந்தமாக நேரடியாக ஸ்டாலினிடம் பேசாமல் இருந்தார் துர்கா. தற்போது மருமகன் சபரீசன் மூலமாக அதற்கான காய்நகர்த்தல் தொடங்கியிருக்கிறது. ‘மாப்பிள்ளைக்கும் வயசாகிட்டே போகுது. கமல், ரஜினி, விஷால் என்று சினிமாக்காரங்க களத்தில் இறங்க ஆரம்பிச்சுட்டாங்க. நம்ம வீட்டுலயும் ஒரு சினிமாக்காரர் இருக்காரு. அவரை இனியும் நாம அமைதியாக இருக்கச் சொல்லக் கூடாது. பொது நிகழ்ச்சிகளுக்கு வரச் சொல்வோம். கட்சியில் அவருக்கான முக்கியத்துவத்தை உருவாக்குவோம்’ என சபரீசன் சொன்னாராம். மேலும் உதயநிதியின் சமீபத்திய சினிமாக்கள் எதுவும் லாபத்தைக் கொட்டவில்லை. இந்த நிலையில் சினிமாவைத் தொடரவும் வேண்டுமா என்றும் வீட்டுக்குள் விவாதங்கள் நடந்திருக்கிறதாம்.

முதலில் யோசித்த ஸ்டாலின், பிறகு ஓகே சொல்லி இருக்கிறார். அதன் பிறகுதான் களத்தில் இறங்கியிருக்கிறார் உதயநிதி. இவருக்கு ஆதரவாக துர்காவும்,சபரீசனும் இருக்க, ’அவருக்கு என்ன அனுபவம் இருக்குன்னு திடீரென அரசியலில் இறக்கிவிடுறாங்க’ என்று கோபாலபுரத்திலுள்ள கருணாநிதி குடும்பத்தின் மற்ற வீடுகளிலிருந்து எதிர்ப்புக் குரலும் இருக்கிறதாம்.

வீட்டுக்குள் இப்படியென்றால் உதயநிதியைக் களத்துக்குக் கொண்டுவந்ததில் கட்சி அளவில் சென்னையின் முன்னாள் மேயரும், மாவட்டச் செயலாளருமான மா.சுப்ரமணியன் பங்களிப்பும் முக்கியமானது. உதயநிதியை அரசியலுக்குள் கொண்டு வர வேண்டும் என நீண்ட நாட்களாக ஸ்டானிடம் பேசி வந்தவர் மா.சு.தான். அதுமட்டுமல்ல, ஸ்டாலின் வசமிருந்த இளைஞர் அணிச் செயலாளர் பொறுப்பு கடந்த ஆண்டு வெள்ளக்கோயில் சாமிநாதனிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த ஒரு வருடமாக சாமிநாதன் இளைஞர் அணி சார்பில் எந்தப் போராட்டமும் நடத்தவில்லை. மக்களைப் பார்த்தால் கார் கண்ணாடியைக்கூட இறக்குவதில்லை என அவர் மீது அடுக்கடுக்கான புகார்களும் வாசிக்கப்பட்டது. அந்த இளைஞர் அணிப் பொறுப்பை உதயநிதிக்கு வழங்க வேண்டும் என்பதுதான் மா.சு.வின் திட்டமும் கோரிக்கையுமாக இருந்தது.

ஆனால், இவ்வளவு நாளாக ஸ்டாலின் அதைக் கேட்கவில்லை. இப்போது உதயநிதிக்கு க்ரீன் சிக்னல் கொடுத்ததை அடுத்து அவருக்கு கட்சியிலும் பதவி வாங்கிக் கொடுத்துவிட வேண்டும் என பேச்சை ஆரம்பித்திருக்கிறார் மா.சு. இது சம்பந்தமாக பேச்சு வந்தபோது, ‘எடுத்ததும் எப்படி இளைஞர் அணிச் செயலாளர் பதவியைக் கொடுத்துட முடியும்?’ என ஸ்டாலின் கேட்டாராம். அதற்கு மா.சு., ‘இளைஞர் அணி இணைச் செயலாளர் என்ற பதவியைக் கொடுத்து முடிவெடுக்கும் அதிகாரத்தை தம்பிகிட்ட கொடுக்கலாம். அவர் கைக்கு இளைஞர் அணி போனால் மிகச் சிறப்பாகச் செயல்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு..’ என மா.சு. சொல்ல... ஸ்டாலினோ, ‘பார்க்கலாம்...’ எனச் சொல்லியிருக்கிறாராம். ஒரு பக்கம் குடும்பத்தினரும், இன்னொரு பக்கம் மா.சு.வும் கொடுக்கும் அழுத்தத்தினால், விரைவில் திமுக இளைஞர் அணியின் இணைச் செயலாளர் பொறுப்பு உதயநிதிக்கு வழங்கப்படும். அதற்கான வேலைகள்தான் நடக்கிறது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

செவ்வாய் 30 ஜன 2018