மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 30 ஜன 2018

சிறப்புப் பார்வை: காந்தியின் கடைசி நாள்!

சிறப்புப் பார்வை: காந்தியின் கடைசி நாள்!

முருகேஷ்

டெல்லியின் அல்புகர்க் சாலையில் (தற்போது அந்த சாலை 30 ஜனவரி சாலை என்ற பொருளில் தீஸ் ஜனவரி மார்க் என்று அழைக்கப்படுகிறது) அமைந்துள்ளது பிர்லா மாளிகை. இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்காகவும் உழைத்த மகாத்மா காந்தியின் இன்னுயிர் தோட்டாக்களால் பறிக்கப்பட்டது இங்குதான்.

1947, செப்டம்பர் 9ஆம் தேதி பிர்லா மாளிகைக்கு இடம்பெயர்ந்த காந்தி, தன் வாழ்நாளின் இறுதி 144 நாட்களை அங்குதான் கழித்தார். தினமும் காலை 3 மணிக்கே எழுந்துவிடும் அவர், 3.30க்கு பிரார்த்தனை நடத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். பின்னர் தன்னைப் பார்க்க வந்தவர்களிடம் கலந்துரையாடுவது, ராட்டையைச் சுற்றுவது என அவரது பொழுது கழியும்.

1948, ஜனவரி 30ஆம் தேதியும் ஏனைய நாட்களைப் போலவே விடிந்தது. காலையிலேயே எழுந்த காந்தி தனது காலைக்கடன்களை முடித்துவிட்டுப் பிரார்த்தனையைத் தொடங்கினார். தனது பேத்தி ஆபா காந்தி பிரார்த்தனைக்கு வராமல் தூங்கிக்கொண்டிருக்கிறார் என்பதை அவர் அறிந்திருந்தார். எனினும் அது குறித்து கோபம் கொள்ளாமல், மற்றொரு பேத்தியான மனு காந்தியிடம், “நெருக்கமானவர்களிடம்கூட எனது செல்வாக்கு வீழ்ச்சியடைந்து வருவது போன்று தோன்றுகிறது. பிரார்த்தனை என்பது ஆத்மாவைச் சுத்தப்படுத்துவதற்கான ஒரு துடைப்பம் போன்றது. ஆபா பங்கேற்கவில்லை என்பது என்னை வேதனைப்பட வைக்கிறது. எனது அதிருப்தியை அவளிடம் கூறு” என்று வேதனையோடு தெரிவித்துவிட்டு நகர்ந்துவிட்டார். பின்னர் தன் உதவியாளர் பியாரிலாலை அழைத்து, காங்கிரஸ் கட்சியின் விதிகளில், தான் செய்ய உத்தேசித்திருந்த மாறுதல்களைக் கொடுத்துப் படித்துப்பார்க்கச் சொன்னார்.

பதற்றம் மிகுந்த தினங்கள்

டெல்லியில், அன்றைய தினங்கள் மிகவும் பதற்றமானவையாகவே இருந்தன. இனவாதத் தாக்குதல்கள் காரணமாக பாகிஸ்தானிலிருந்து அதிக அளவு இந்துக்கள் அகதிகளாக இந்தியாவுக்கு வரத் தொடங்கினர். டெல்லியில் உள்ள இஸ்லாமியர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொள்ளவும் அவர்கள் விரும்பினர். எனவே, இரு மதத் தலைவர்களும் காந்தியைச் சந்தித்து டெல்லியில் எப்படி அமைதியை ஏற்படுத்துவது என ஆலோசனை நடத்துவதே வழக்கமாக இருந்தது. பிர்லா மாளிகையில் காந்தி தனது நேரத்தை வீணாகக் கழித்ததில்லை. எப்போதும் ஜனத்திரளுக்கு நடுவில் அவர் இருப்பார். எந்தச் சந்திப்பும் இல்லையென்றால் கடிதம் எழுதுவது கட்டுரை எழுதுவது என அவர் இருப்பார்.

ஜனவரி 30ஆம் தேதி அன்று, காந்தியின் கடைசி சந்திப்பு என்பது சர்தார் வல்லபாய் பட்டேலுடன் நடந்தது. அது கடைசிச் சந்திப்பு என்பதை இருவரும் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்.

அந்தச் சந்திப்புக்கு ஒரு முக்கியக் காரணம் இருந்தது. இந்தியா சுதந்திரம் பெற்ற பின்பு நேருவுக்கு நிகரான தலைவராக பட்டேலும் இருந்தார். நேரு பிரதமராகத் தேர்வு செய்யப்பட்ட பின்னர் இருவருக்கும் கருத்து மோதல்கள் அதிகரித்துவருவதாகச் செய்திகள் வெளியாகின. இன மோதல் பிரச்சினைகளுக்கு நடுவே இந்தியா இருந்துவந்த நிலையில், இரு தலைவர்களின் மோதல் காந்தியை கவலையடையச் செய்தது.

இந்நிலையில், பட்டேலிடம் பேச காந்தி முடிவு செய்தார். அதன்படி, ஜனவரி 30ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு பட்டேல் தனது மகள் மணிபன் உடன் பிர்லா மாளிக்கைக்கு வந்தார். அவர்களது பேச்சு மாலை 5 மணியையும் தாண்டி நீடித்தது. 5 மணிக்கு காந்திக்குப் பிரார்த்தனைக் கூட்டம் இருந்தது. எனினும், இருவரையும் தொந்தரவு செய்ய அங்கிருந்தவர்களுக்கு மனமில்லை. இறுதியில், மாலை 5.10க்கு அவர்களது பேச்சு முடிவுக்கு வந்தது. பட்டேல் 5.15க்குப் புறப்பட்டுச் சென்றார்.

பிரார்த்தனைக்குச் செல்வதற்காக மனு காந்தி , ஆபா காந்தி ஆகியோர் தோள்களில் கைகளைப் போட்டபடி காந்தி நடந்துவந்தார். அவரது வருகைக்காக ஏராளமானோர் ஆர்வத்துடன் காத்திருந்தனர். அவரைப் பார்த்ததும் மக்கள் உற்சாகத்துடன் “காந்தி வருகிறார்” எனத் தங்களுக்குள் கூறிக்கொண்டனர். பிரார்த்தனைக்குக் கால தாமதம் ஏற்பட்டது தொடர்பாகத் தனது பேத்திகளிடம் அவர் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

முக்கியமான பேச்சு என்பதால் குறுக்கிடவில்லை எனத் தெரிவித்த மனுவிடம், “நோயாளிக்கு சரியான நேரத்தில் மருந்தை வழங்கவேண்டியது செவிலியரின் பணி. அதில் கால தாமதம் ஏற்பட்டால், நோயாளி இறந்துவிடுவார்” என காந்தி பதிலளித்தார்.

கூப்பிய கரங்களுக்குள்…

தனது இருக்கைக்கு வெறும் 25 அடி தூரத்தில் காந்தி இருக்கும்போது, அவரது பாதத்தில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய இளைஞர் ஒருவர், திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை வெளியில் எடுத்துச் சுடத் தொடங்கினார். நாதுராம் கேட்சே என்ற அந்த இளைஞர் சுட்ட 3 குண்டுகள் உடலில் பாய்ந்த நிலையில், ரத்த வெள்ளத்தில் காந்தி புல்வெளியில் சாய்ந்தார். அவரது மூக்குக் கண்ணாடியும் காலணியும் சிதறி விழுந்தன.

அந்த நேரத்தில். “ஹே ராம்” என காந்தி தனது கடைசி வார்த்தையை உதிர்த்ததாகக் கூறப்படுகிறது. என்றாலும், அப்படி அவர் சொன்னார் என்பதற்கு வலுவான ஆதாரம் ஏதும் கிடையாது. காந்தி அப்படி கூறியதைத் தான் கேட்கவில்ல என அவருடன் இருந்த தனிச் செயலாளர் கல்யாணமும் கூறியுள்ளார்.

காந்தியைச் சுட்டுக் கொன்ற பின் தற்கொலைக்கு முயன்ற கோட்சேவை அங்கிருந்த ராயல் இந்தியப் படை வீரர்கள் கைது செய்தனர். ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தடை செய்யப்பட்டது.

காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட செய்தி மாலை 6 மணிக்கு ஆல் இந்தியா ரேடியோவில் அறிவிக்கப்படுகிறது. நாடு முழுவதுமுள்ள மக்கள் இந்த செய்தியைக் கேட்டு உறைந்து போயினர். பலரும் டெல்லியை நோக்கி விரையத் தொடங்கினர். சுமார் 2 மில்லியன் மக்கள், ராஜ்கோட்டில் குவிந்தனர்.

ஜனவரி 31ஆம் தேதி காந்தியின் உடல் சிதையூட்டப்பட்டது.

காந்தியின் நினைவாக…

காந்தியின் உடல் சிதையூட்டப்பட்ட ராஜ்கோட் தற்போது இந்தியாவின் முக்கிய சுற்றுலாத் தலமாக உள்ளது. காந்தி வசித்துவந்த பிர்லா மாளிகை பின்னர் அரசுடமையாக்கப்ப்பட்டது. தற்போது காந்தி சமாதி என அழைக்கப்படும் அங்கு காந்தியைப் பற்றிய 60 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. அவருடைய 6 ஆயிரம் புகைப்படங்கள் பாதுகாக்கப்பட்டுவருகின்றன. காந்தி அங்கு வாழ்ந்த 144 நாட்களில் அவர் பயன்படுத்திய பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் உட்பட பல லட்சம் பேர் ஆண்டுதோறும் இங்கு வந்து செல்கின்றனர்.

இதேபோல், அகமதாபாத்தில் உள்ள அவரது சபர்மதி ஆசிரமமும் நினைவிடமாகப் பாதுகாக்கப்பட்டுவருகிறது. அகமதாபாத்தில் காந்தி வாழ்ந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்புகள், அவரது கட்டுரைகள், அவர் எழுதிய மற்றும் அவருக்கு வந்த கடிதங்கள், அவர் பயன்படுத்திய ராட்டை போன்றவை அங்கு வைக்கப்பட்டுள்ளன. ஆண்டுக்கு 7 லட்சம் பேர் இங்கு வருகை தருகின்றனர்.

காந்தியின் 71ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு டெல்லி ராஜ்காட்டில் உள்ள அவரது சமாதியில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர். காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். காந்தியின் சபர்மதி ஆசிரமத்திலும் ஏராளமான பொதுமக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

தமிழகத்தில் ஆளுநர் பன்வாரிலால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலையின் அடியில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை வாசிக்க மற்றவர்கள் ஏற்றுக்கொண்டனர்.

மத வெறுப்புக்கும் மத அடிப்படையிலான மோதல்களுக்கும் மாற்றாக அன்பையும் அகிம்சையையும் தியாகத்தையும் முன்வைத்தவர் காந்தியடிகள். வன்முறைக்கு வன்முறை பதில் அல்ல என உறுதியாக நம்பியவர். பெருவாரியான மக்களையும் அந்த நம்பிக்கையை ஏற்று அதன்படி நடந்துகொள்ளச் செய்தவர். அவரது அகிம்சைக் கொள்கைக்கு மக்களிடையே கிடைத்த பெரும் ஆதரவே அவரைக் கொலைசெய்யச் சிலரைத் தூண்டியது. மத நல்லிணக்கத்துக்காக, அகிம்சைக் கொள்கைக்காக காந்தி உயிரையே தியாகம் செய்தார். தியாகிகள் தினமாகக் கடைப்பிடிக்கப்படுவதற்கு இதைக் காட்டிலும் பொருத்தமான தினம் வேறு எது இருக்க முடியும்?

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

செவ்வாய் 30 ஜன 2018