உணவு கேட்ட குழந்தைக்கு நேர்ந்த கொடுமை!

பள்ளியில் கூடுதலாக சாம்பர் கேட்ட ஒன்றாம் வகுப்பு மாணவன் மீது சத்துணவு ஊழியர் கொதிக்கும் சாம்பரை ஊற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம், திண்டோரி மாவட்டத்தில் உள்ள ஷாப்பூர் லுத்ரா கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. அப்பள்ளியில் கடந்த 23ஆம் தேதியன்று மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த பிரின்ஸ் மெஹ்ரா என்ற ஒன்றாம் வகுப்பு மாணவன், அங்குள்ள சமையல் செய்யும் நேம்வதி பாய் என்னும் பெண் ஊழியரிடம் இரண்டாவது முறையாக சாம்பார் கேட்டுள்ளான். இதனால், ஆத்திரமடைந்த அந்தப் பெண் சிறுவன் முகத்தில் கொதிக்கும் சாம்பாரை ஊற்றியுள்ளார்.
இதனால் சிறுவனின் முகம், நெஞ்சு மற்றும் முதுகு பகுதிகள் வெந்து காயம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, மாணவன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இந்த சம்பவம் குறித்து அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றொர் ஜனவரி 24ஆம் தேதி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் நேற்று (ஜனவரி 28) வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.