மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 30 ஜன 2018

பெங்களூரு போகும் எடப்பாடி

டெல்டா மாவட்ட சம்பா பயிரைக் காப்பாற்றும் நோக்கில் காவிரி நீரைத் திறந்துவிட வேண்டுமென்று நேரில் வலியுறுத்துவதற்காக, கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையாவை நேரில் சந்திக்கவுள்ளார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. இந்த சந்திப்பு நிகழ்வதற்கான தேதியை முடிவு செய்யுமாறு, தமிழக அரசின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

காவிரி நீரைத் திறந்துவிட்டால்தான், தமிழகத்திலுள்ள டெல்டா மாவட்டங்களில் சம்பா பயிர் சாகுபடி நடக்கும் என்ற சூழல் நிலவுகிறது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைப்புகள் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்குக் கோரிக்கை விடுத்தன. இம்மாத தொடக்கத்தில், காவிரியில் 7 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டுமென கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையாவுக்குக் கடிதம் எழுதினார் தமிழக முதலமைச்சர்.

ஆனால், அவரது வேண்டுகோளை சித்தராமையா நிராகரித்தார். கடந்த 17ஆம் தேதியன்று அதிமுக தலைமையகத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகா முதலமைச்சருக்கும் இந்திய பிரதமருக்கும் கடிதம் எழுதியதனால் எந்தப் பலனும் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டார். இந்த விவகாரத்தில் தீர்வு பெற மத்திய அரசு உதவ வேண்டுமெனவும் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த நிலையில், நேற்று (ஜனவரி 29) காவிரியில் நீர் திறப்பது தொடர்பாக சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதுகுறித்து தமிழக அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.

அதில், டெல்டா மாவட்ட சம்பா பயிரை காப்பாற்றும் நோக்கில் காவேரி நீரை திறந்துவிட கர்நாடகா அரசை வலியுறுத்துவது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் மற்றும் டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் நேராகச் சென்று கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையாவைச் சந்திப்பதாக முடிவானது.

இந்த சந்திப்புக்கான நேரம் மற்றும் நாள் முடிவு செய்வது தொடர்பாக, கர்நாடக மாநில தலைமைச் செயலாளர் மற்றும் கர்நாடக முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் ஆகியோருக்கு தமிழக அரசின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதோடு, தொலைபேசி மூலமாகவும் தகவல் சொல்லப்பட்டுள்ளது. இதனால், விரைவில் கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா – தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடகாவில் வரும் மே மாதம் சட்டமன்றத் தேர்தல் நடக்கக்கூடும் என்பதால், அதற்கு முன்னதாகவே காவிரி நீர் விவகாரத்தில் தீர்வு பெற வேண்டிய கட்டாயத்தில் தமிழகம் உள்ளது.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

செவ்வாய் 30 ஜன 2018