ரன்வீரைப் பாராட்டிய அமிதாப்


பத்மாவத் படத்தில் கில்ஜி கதாபாத்திரத்தில் நடித்த ரன்வீர் சிங்கை பாராட்டி பூங்கொத்து அனுப்பியிருக்கிறார் அமிதாப் பச்சன்.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ஷாகித் கபூர் ஆகியோர் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள பத்மாவத் திரைப்படம் வெளியாகி வசூல் சாதனை புரிந்துவருகிறது. இந்த படத்தை ஷங்கர், வசந்தபாலன் உட்பட திரைப்பிரபலங்கள் பலரும் பாராட்டிவருகின்றனர். இதில் ராணி பத்மாவதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தீபிகா படுகோனுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
அதே போல் அலாவுதீன் கில்ஜி கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ரன்வீர் சிங்கையும் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் அலாவுதீன் கில்ஜி வேடத்தில் சிறப்பாக நடித்திருப்பதாகப் பாராட்டி பூங்கொத்துடன் வாழ்த்து மடல் ஒன்றையும் அனுப்பிவைத்துள்ளார்.
இந்தத் தகவலை புகைப்படத்துடன் ரன்வீர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, “இந்த வாழ்த்து எனக்கு விருது கிடைத்தது போல் இருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.
இதே போல் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான ‘பாஜிராவ் மஸ்தானி’ படத்தில் சிறப்பாக நடித்ததற்காகவும் ரன்வீர் சிங்கைப் பாராட்டி வாழ்த்து மடல் ஒன்றையும் அமிதாப் அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது