மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 30 ஜன 2018

அந்த மிசா நாள்... கோவை ராமகிருஷ்ணன்

அந்த மிசா நாள்... கோவை ராமகிருஷ்ணன்

“இந்தியாவிலேயே மிசா மற்றும் தடா ஆகிய இரு கொடுஞ்சட்டங்களிலும் சிக்கி சிறை சென்றவர்கள் தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கோவை ராமகிருஷ்ணன், மற்றும் பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகிய இருவர் மட்டும்தான். ஒரு வருட மிசா சிறைவாசத்துக்குப் பிறகு கோவை ராமகிருஷ்ணன் விடுதலையான நாள் இன்று!”

-இப்படி ஒரு வாட்ஸ் அப் தகவலை இன்று (ஜனவரி 30) பார்த்த உடனேயே கோவை ராமகிருஷ்ணனை தொடர்புகொண்டோம்.

அந்தப் போராட்ட நினைவுகளைப் பற்றி அவரிடமே கேட்டோம். உறுதியான குரலில் அந்த மிசா நாளை நமக்காக நினைவூட்டினார்.

“மிசா சட்டத்தில் 1976இல் நாங்கள் கைது செய்யப்பட்டோம். நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டு ஆறு மாதம் கழித்துதான் தமிழ்நாட்டில் மிசா சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழக அரசு அதை அமல்படுத்தாமல் வைத்திருந்தார்கள். அரசைக் கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டுவந்து நெருக்கடி நிலையை தமிழ்நாட்டில் அமல்படுத்தினார்கள்.

நெருக்கடி நிலைமை அமல்படுத்தப்பட்ட ஜனவரி 30ஆம் தேதி இரவு தமிழ்நாடு முழுக்க ராணுவம் குவிக்கப்பட்டது. மக்களுக்கு ஒரே பதற்றம். என்ன நடக்கப் போகிறதோ என்று ஒவ்வொருவரும் நினைத்துக் கொண்டிருந்தோம். அன்று பின்னிரவு 3 மணிக்கு கோவையில் இருக்கும் எனது வீட்டுக்கு வந்து காவல்துறை கதவைத் தட்டியது. அப்போது எனக்கு 24 வயது. திராவிடர் கழகத்தில் தீவிரமாக நான் செயலாற்றிக்கொண்டிருந்த நேரம்.

என்னைக் கைது செய்து காவல் வண்டியில் ஏற்றி அந்த இருட்டில் எங்கேயோ அழைத்துச் சென்றார்கள். கொஞ்ச தூரம் சென்றதுமே பக்கத்து தெருவில் காவல் வாகனம் நின்றது. என்னை வண்டியிலேயே உட்காரச் சொல்லிவிட்டு சில காவலர்கள் பாதுகாப்புக்கு இருந்தனர். இன்னும் சில காவலர்கள் இறங்கி வாகனம் நின்ற இடத்தில் இருந்த ஒரு வீட்டுக்குள் சென்றனர். யாரையோ தேடுகிறார்கள் என்று தெரிந்தது, யாரைத் தேடுகிறார்கள் என்று தெரியவில்லை.

அந்த வீட்டுக்குள் சென்று பார்த்துவிட்டு திரும்பி வந்த காவலர்கள் மீண்டும் வண்டியில் ஏறினர், கோவை-திருச்சி சாலையில் இருக்கும் ஆரிய வைத்தியசாலை வாசலில் போய் நின்றது காவல் வாகனம். அங்கே போனபிறகுதான் எனக்குத் தெரிந்தது, கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பாராளுமன்ற உறுப்பினராக இருந்த தோழர் ரமணியைத் தேடித்தான் ஆரிய வைத்திய சாலைக்குச் சென்றிருக்கிறது காவல்துறை. அவர் அங்கே சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்.

முதலில் தேடியது அவர் வீடு. அங்கேதான் அவர் ஆரிய வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக சொன்னதை அடுத்து இங்கே வந்தனர்.

தோழர் ரமணி படுத்த படுக்கையாக அங்கே சிகிச்சை பெற்று வந்தார். எனவே மருத்துவமனைக்கு காவல்துறை பாதுகாப்பை அதிகப்படுத்திவிட்டு என்னை கோவை B4 காவல் நிலையத்தில் கொண்டு போய் வைத்தார்கள். மாலை ஆறுமணிக்கு ஆட்சித் தலைவரிடத்தில் இருந்து எனக்கு ஒரு கடிதம் கொடுக்கப்பட்டது. அதில், ‘உங்களை மிசா சட்டத்தில் கைது செய்திருக்கிறோம். நீங்கள் வெளியே இருப்பது நாட்டுக்கு பாதுகாப்பானது அல்ல’ என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அப்புறம் என்னை வண்டியில் ஏற்றினார்கள். மீண்டும் காவல்துறை வாகனம் ஆரிய வைத்தியசாலைக்குப் போனது. நான் வண்டியில் உட்கார்ந்திருக்கிறேன். இறங்கி மருத்துவமனைக்குள் சென்ற காவலர்கள் ஒரு கட்டிலை தூக்கி வந்தனர். அதில் தோழர் ரமணி சிகிச்சை பெற்றபடியே படுத்திருந்தார். அப்படியே அவரைக் கட்டிலோடு தூக்கி வந்து காவல்துறை வண்டிக்குள் வைத்தனர்.

பின் எங்களை கோவை சிறைக்குள் அழைத்துச் சென்றனர், அப்போது இரவு 11 மணி இருக்கும். கோவை சிறையில் சுமார் 50 முதல் 60 பேர் வரை கைது செய்யப்பட்டிருந்தோம். திமுகவில் அதிகமாக இருந்தார்கள், கம்யூனிஸ்டு கட்சியில் பலர் கைது செய்யப்பட்டிருந்தனர். திராவிடர் கழகத்தில் நானும், இன்றைய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் துணைத் தலைவரும் வழக்கறிஞருமான துரைசாமி, அன்றைய எங்கள் மூத்த தோழர் மேயர் ராமசாமி ஆகிய மூவரும் சிறையில் அடைக்கப்பட்டோம். ஓர் ஆண்டு கழித்துதான் நாங்கள் விடுதலை செய்யப்பட்டோம்...’’

என்று மிசா நினைவுகளை நம்முடன் பகிர்ந்துகொண்டார் கோவை ராமகிருஷ்ணன்.

தடா நினைவுகள்!

“மிசாவில் அப்படி என்றால், இன்னொரு கொடுஞ்சட்டமான தடாவில் 1991-ல் கைதானோம். ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின்னால்தான் தடா வழக்கு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டது. தடா அமல்படுத்தப்பட்டபோது முதல் வழக்கு எங்கள் மீதுதான் போட்டார்கள். நான், தோழர் ஆறுசாமி. விடுதலைப் புலிகள் இரண்டு பேர், அவர்களுக்கு உதவி செய்ததாக நான்கு பேர் என்று எட்டு பேர் மீது தடா வழக்கு போடப்பட்டது. அதில் மூன்று வருடம் சிறையில் இருந்தோம். அதுதான் மிகக் கொடுமையான காலம்’’ என்று தன் போராட்ட நாட்களை நினைவு கூர்ந்தார் இன்னும் போராளியாகவே தொடர்ந்துகொண்டிருக்கும் கோவை ராமகிருஷ்ணன்.

நினைவு கூர வேண்டிய நாள்தான் இது!

-ஆரா

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

செவ்வாய் 30 ஜன 2018