மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 30 ஜன 2018

அன்புச்செழியனுடன் முதல்வர், துணை முதல்வர்!

அன்புச்செழியனுடன் முதல்வர், துணை முதல்வர்!

கந்து வட்டி புகாரில் தேடப்படும் குற்றவாளியான அன்புச்செழியனுடன் முதல்வரும் துணை முதல்வரும் ஆலோசனை நடத்தியதாக பாமக நிறுவனர் குற்றஞ்சாட்டியுள்ளார். அவர்கள் உடனடியாக ராஜிநாமா செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மதுரையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் பேரன்களுக்குக் காதணி அணிவிக்கும் விழா நடைபெற்றது. இதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் உட்பட தமிழக அரசின் அமைச்சர்கள் பலரும் கலந்துகொண்டனர். இந்த விழாவில் கந்துவட்டி வழக்கில் தேடப்பட்டுவரும் அன்புச் செழியனும் கலந்துகொண்டதாக வெளியான புகைப்படங்கள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (ஜனவரி 30) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

”அமைச்சர் செல்லூர் ராஜுவின் இல்ல காதணி விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் திரைப்படத் தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை வழக்கில் தேடப்பட்டுவரும் கந்து வட்டிக்காரர் அன்புச்செழியனும் கலந்துகொண்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தச் செய்திகள் உண்மை என்றால் முதல்வர் , துணை முதல்வர் ஆகியோரின் செயல் கண்டிக்கத்தக்கதாகும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், செல்லூர் ராஜுவின் இல்ல நிகழ்வில் அனைத்து அத்துமீறல்களும் அரங்கேற்றப்பட்டுள்ளன என விமர்சித்துள்ள அவர், “கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் அனைத்து அதிகாரிகள் மற்றும் பணியாளர்களிடமிருந்து அவரவர் நிலைக்கு ஏற்ப ‘அன்பளிப்புகள்’ மிரட்டிப் பறிக்கப்பட்டிருக்கின்றன. அன்பாகப் பெறப்பட்ட பரிசுகளின் மதிப்பு மட்டும் ரூ.25 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த விழாவுக்காக மதுரை மாநகரம் முழுவதும் விதிகளை மீறி பதாகைகளும், அலங்கார வளைவுகளும் வைக்கப்பட்டிருந்தன.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கிப் புயலில் சிக்கி நூற்றுக்கணக்கான மீனவர்கள் உயிரிழந்தபோது, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு உடனடியாக ஆறுதல் சொல்லச் செல்லாத எடப்பாடி பழனிச்சாமி, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்களுடன் சென்று வாழ்த்தியிருக்கிறார். இந்தக் காதணி விழாவில், தேடப்படும் குற்றவாளியான கந்துவட்டி அன்புச்செழியனும் கலந்துகொண்டிருக்கிறார்” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த விழாவில் முதல் வரிசையில் அமர்ந்திருந்த அன்புச்செழியனுக்கு அமைச்சர்களும், கட்சி நிர்வாகிகளும் வணக்கம் தெரிவித்ததாக இணைய ஊடகங்களில் செய்திகளும், புகைப்படங்களும் வெளியாகியுள்ளன என்று குறிப்பிட்டுள்ள அவர், “விழாவின் முடிவில் முதல்வரும், துணை முதல்வரும் விருந்து சாப்பிட்ட அறைக்குள் நுழைய அனைவருக்கும் அனுமதி மறுக்கப்பட்டதாகவும், அந்த அறைக்குள் கந்துவட்டி அன்புச்செழியன் மட்டும் அனுமதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. அதைத் தொடர்ந்து மூடப்பட்ட அறைக்குள் ஆலோசனை நடந்ததா, பேரங்கள் நடந்ததா” என கேள்வி எழுப்பியுள்ளார்.

அசோக்குமார் தற்கொலை வழக்கில் அன்புச்செழியனின் முன்பிணை மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அவரைக் கைது செய்ய நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. அவர் தொடர்ந்து தேடப்படும் குற்றவாளியாகவே உள்ளார் என்று கூறியுள்ள ராமதாஸ், “அன்புச்செழியனை தமிழக அமைச்சரவையில் ஐந்தாவது இடத்தில் உள்ள அமைச்சர் அவரது இல்ல விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கிறார். அங்கு வரும் அமைச்சர்கள் அனைவரும் அவருக்கு வணங்குகிறார்கள். இவற்றுக்கெல்லாம் மேலாக முதல்வரும், துணை முதல்வரும் தனி அறையில் தேடப்படும் குற்றவாளியுடன் ஆலோசனை நடத்துகிறார்கள் என்றால், தமிழ்நாட்டில் சட்டம், நீதி, தருமம் ஆகியவை எந்த அளவுக்கு காலில் போட்டு மிதிக்கப்படுகின்றன என்பதை உணரலாம்” என்று வேதனை தெரிவித்துள்ளார்.

தேடப்படும் குற்றவாளியை முதல்வர் பழனிச்சாமி தனி அறையில் சந்தித்துப் பேசியது மன்னிக்க முடியாத குற்றமாகும் எனக் கண்டித்துள்ள அவர், “ இதன்மூலம் தனது பதவியை அவர் களங்கப்படுத்தியுள்ளார். குற்றவாளியை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், செல்லூர் ராஜு உள்ளிட்ட அமைச்சர்கள் இனியும் பதவியில் நீடிக்கும் தகுதியை இழந்து விட்டனர். அவர்கள் அனைவரும் உடனடியாக பதவி விலக வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

செவ்வாய் 30 ஜன 2018