விஸ்வரூபம் 2: தீவிரம் காட்டும் கமல்


விஸ்வரூபம் படத்தை வெளியிடும் முனைப்பில் தீவிரம் காட்டிவரும் கமல்ஹாசன் தனக்கான டப்பிங் பணியைத் தொடங்கியிருக்கிறார்.
கமல் ஒரு பக்கம் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டுவந்தாலும் மற்றொரு பக்கம் விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலைகளிலும் ஈடுபட்டுவருகிறார். பல்வேறு விமர்சனங்களுக்கும் எதிர்ப்புக்குமிடையே வெளிவந்த விஸ்வரூபம் முதல் பாகம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இரண்டாம் பாகமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கமல் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.
விஸ்வரூபம் கிடப்பில் போய்விடுமோ என்று அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்க, இறுதிக் கட்டப் படப்பிடிப்பிற்கான புகைப்படங்களை வெளியிட்டு ஆச்சரியப்படுத்தினார் கமல். அடுத்து, படத்தின் ஒலிவடிவமைப்புப் பணிகள் முடிவடைந்ததாக கடந்த டிசம்பர் 22ஆம் தேதி அறிவித்தார். தற்போது கமல் டப்பிங் பேசும் பணிகள் தொடங்கியிருக்கிறது. இது குறித்தான புகைப்படமும் வெளியாகியிருக்கிறது.
ஸ்பை த்ரில்லர் வகையில் உருவாகும் இந்தப் படத்தில் கமல், பூஜா குமார், ஆண்ட்ரியா, சேகர் கபூர், ரகுல் போஸ் ஆகியோர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைக்க ஷாம்தத் சய்னுதீன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆஸ்கர் பிலிம்ஸ், ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமாகத் தயாரித்துவருகின்றன.