மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 30 ஜன 2018

சிறப்புக் கட்டுரை: என்னை வெறும் பிறப்புறுப்பாக உணர்ந்தேன்!

சிறப்புக் கட்டுரை: என்னை வெறும் பிறப்புறுப்பாக உணர்ந்தேன்!

சஞ்சய் லீலா பன்சாலிக்கு ஸ்வரா பாஸ்கர் கடிதம்

பத்மாவத் படத்தின் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலிக்கு, நடிகை ஸ்வரா பாஸ்கர், பெண்களின் வாழ்வுரிமையை மறுக்கும் ‘சதி’ மற்றும் ‘ஜோஹர்’ முறைகளை மகிமைப்படுத்தியதை எதிர்த்து ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடித்தத்தின் முக்கியமான பகுதிகள்:

திரு.பன்சாலி அவர்களுக்கு,

முதலில், உங்களது படம் ‘பத்மாவத்’ வெளியானதற்கு வாழ்த்துகள் சார். படத்தில் சில காட்சிகளை அகற்றிவிட்டாலும், ஒருவழியாக படம் வெளியாகிவிட்டது. 'சகிப்புத்தன்மை' மிக்க இந்தியாவில், இறைச்சிக்காக மக்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். ஆண் பெருமையை நிலைநாட்டும் சில பழக்கவழக்கங்களுக்காகப் பள்ளிக்கூடக் குழந்தைகள் கொல்லப்படுகிறார்கள். இதற்கு நடுவில் உங்கள் படம் வெளியாகிவிட்டது. அது பாராட்டுக்குரியதுதான். அதனால், மீண்டும் வாழ்த்துகள்.

படத்தில் நடித்தவர்களும், உதவி செய்தவர்களும் மிகச் சிறப்பான வேலையைச் செய்துள்ளார்கள். பிரமிக்கத்தக்க வேலை என்றுதான் சொல்ல வேண்டும். இவை அனைத்துமே உங்களைப் போன்ற ஒரு சிறந்த படைப்பாளியிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்றன. எந்த வேலை செய்தாலும் அதில் உங்கள் முத்திரையைப் பதித்துவிட நீங்கள் தவறுவதில்லை. சாதாரணக் கலைஞர்களையும் மிகச் சிறப்பாகக் காட்டும் வித்தையை நீங்கள் அறிவீர்கள். உங்கள் படத்துக்கான ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் எனக்கு அது நன்றாகவே தெரியும். அனைவரின் கருத்துகளுக்கும் நீங்கள் மதிப்பு கொடுப்பதை பார்த்து நான் வியந்து போயிருக்கிறேன். உங்களின் தீவிர ஆராதகர்களில் நானும் ஒருத்தி.

உங்கள் படம் ‘பத்மாவதி’ ஆக இருந்தபோதே நான் உங்களுக்காகக் குரல் கொடுத்தேன் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். நீங்கள் போட்டுள்ள ரூ.185 கோடி பணத்துக்காகத்தான் மௌனமாக இருக்கீறீர்கள் என்று நான் வாதாடியுள்ளேன். அதற்கான ஆதாரம் இதோ...

https://youtu.be/ZGmyYvSUARY

https://www.youtube.com/watch?v=ZGmyYvSUARY&feature=youtu.be

நான் கூறியவை அனைத்தையும் நம்பினேன். உங்களுக்கும் இந்த நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் தான் நினைத்ததை வெளிப்படுத்தும் உரிமை இருக்கிறது. நினைத்த கருத்தை பயமில்லாமல் மக்கள் வெளிப்படுத்த வேண்டும், படம் எடுக்க வேண்டும், குழந்தைகள் பள்ளிக்குப் பத்திரமாகச் சென்றுவர வேண்டும், உங்களை எதிர்த்தவர்களுக்குப் பதிலடியாக உங்கள் படம் பெரும் வெற்றி பெற வேண்டும் என்று ஆசைப்பட்டேன். முதல் நாள் முதல் காட்சிக்குக் குடும்பத்துடன் சென்றேன்.

உங்கள் படத்தின் மீதுள்ள இந்தப் பற்றுதலால்தான் நான் படத்தைப் பார்த்து அசந்துபோனேன். அதனால்தான், இந்தக் கடிதத்தை எழுதும் உரிமை எனக்கு இருக்கிறது என்ற நினைக்கிறேன். நான் சொல்ல வருவதை நேரடியாகவும் சுருக்கமாகவும் சொல்ல முயற்சி செய்கிறேன்.

பெண்கள் வெறும் பிறப்புறுப்புகள் அல்ல

• பாலியல் வன்முறைக்கு ஆளானாலும், பெண்களுக்கு வாழ்வதற்கான உரிமை இருக்கிறது சார்.

• கணவனோ, ஆண் பாதுகாவலர்களோ, உரிமையாளர்களோ, ‘பெண்களின் பாலியல் கட்டுப்பாட்டு வீரர்களோ’ - ஆண்களை நீங்கள் எப்படி நினைக்கிறீர்களோ - அவர்கள் இறந்துபோனாலும் பெண்களுக்கு வாழ உரிமை உள்ளது.

• ஆண்கள் வாழ்ந்தாலும் இல்லையென்றாலும் பெண்களுக்கு வாழ்வதற்கான உரிமை இருக்கிறது.

• மொத்தத்தில், பெண்களுக்கு வாழ உரிமை இருக்கிறது.

இது மிகவும் அடிப்படையான விஷயம்தான்.

மேலும் சில அடிப்படை விஷயங்கள்:

• பெண்கள் நடக்கும், பேசும், பிறப்புறுப்புகள் அல்ல.

• ஆம். பெண்களுக்குப் பிறப்புறுப்பு இருக்கிறது. ஆனால், அவர்கள் அதற்கும் மேலானவர்கள். அதனால், அவர்களின் மொத்த வாழ்க்கையையும் அந்த ஓர் உறுப்பின் பாதுகாப்பு, கட்டுப்பாடு, புனிதம் ஆகியவற்றை நோக்கியே மையப்படுத்தப்பட வேண்டியதில்லை. (13ஆம் நூற்றாண்டில் வேண்டுமானால் இப்படி இருந்திருக்கலாம். ஆனால், 21ஆம் நூற்றாண்டில் இவ்விஷயங்கள் தேவையில்லை. அவற்றை மகிமைப்படுத்துவது அர்த்தமற்றது.)

• பெண்களின் பிறப்புறுப்புக்கு மரியாதை கொடுப்பது நல்ல விஷயம்தான். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அப்படி யாரும் செய்வதில்லை. ஆனாலும் ஒரு பெண் தொடர்ந்து வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறாள். ஒரு பெண்ணின் அனுமதியின்றி அவள் பிறப்புறுப்பு அவமானப்படுத்தப்பட்டால் அவள் இறந்து போக வேண்டிய அவசியம் இல்லை.

• பிறப்புறுப்பைத் தாண்டி வாழ்க்கை இருக்கிறது. அதனால் பாலியல் வன்புணர்வுக்குப் பிறகும் வாழ்க்கை இருக்கிறது. பலமுறை இதை கூறினாலும் யாருக்கும் புரிவதில்லை. அதனால், மீண்டும் மீண்டும் கூறுகிறேன்.

• மொத்தத்தில், பிறப்புறுப்பைத் தாண்டி வாழ்க்கை உள்ளது.

நீங்கள் நினைக்கலாம், நான் ஏன் பிறப்புறுப்பைப் பற்றி இவ்வளவு பேசுகிறேன் என்று. ஏனென்றால் சார், உங்களது மிகப் பெரிய இந்த படைப்பின் முடிவில் நான் அப்படித்தான் உணர்ந்தேன். ஒரு பிறப்புறுப்பு - அவ்வளவுதான். பெண்களின் உரிமைக்கான இத்தனை வருடப் போராட்டத்தின் முடிவில், மீண்டும் தொடக்கத்தில் சென்று நிற்கிறோம். மீண்டும் அடிப்படைக் கேள்வியில் வந்து நிற்கிறோம் - வாழ்வதற்கான உரிமை. உங்கள் படம், இருண்ட காலத்திலிருந்து அந்தக் கேள்வியை மீண்டும் கண்முன் நிறுத்தியிருக்கிறது. பெண்கள் விதவையானாலும், வன்புணர்வு செய்யப்பட்டாலும், இளமையாக இருந்தாலும், வயதானவர்களானாலும், கர்ப்பிணியாக இருந்தாலும், அவர்களுக்கு வாழ்வதற்கான உரிமை இருக்கிறதா?

‘சதி’ மற்றும் ‘ஜோஹர்’ நம் வரலாற்றின் ஒரு பகுதி என்பது எனக்கும் தெரியும். இவை நடந்தவைதான். அதேபோலத்தான் அமெரிக்காவில் கறுப்பினத்து மக்கள் ஒடுக்கப்பட்டார்கள். அதற்காக, அவர்களைப் பற்றிய, இன வெறுப்பு பற்றிய, இப்படியான ஒரு படத்தை இன்று எடுக்க முடியுமா? இன வெறுப்பு பற்றிய வசனம் இல்லாமலாவது எடுக்க முடியுமா? இதுபோன்ற வேற்றுமைகளை மிக மோசமாக மகிமைப்படுத்தி எடுப்பது எப்படி என்று எனக்குப் புரியவில்லை. இப்படியான ஒரு கொடூரமான வழக்கத்தை எப்படி மகிமைப்படுத்த முடியுமென்று எனக்குப் புரியவில்லை.

‘சதி’, ‘ஜோஹர்’ போன்ற வழக்கங்கள் மகிமைப்படுத்த வேண்டிய விஷயங்கள் அல்ல என்றுதான் நீங்களும் சொல்வீர்கள். இது மாதிரியான வழக்கங்களும், பெண்ணுறுப்புச் சிதைவு, ஆணவப் படுகொலைகள் போன்ற செயல்களும் ஆணாதிக்க, வெறுப்புமிக்க எண்ணங்களின் உச்சம் என்று நம்புகிறவர்தான் நீங்கள். சதி, ஜோஹர், பெண்ணுறுப்புச் சிதைவு ஆகியவை பெண்களின் உரிமைக்கு எதிரானது மட்டுமல்ல, அவர்களின் வாழ்வுரிமையைக் கேள்விக்குட்படுத்துவது. அது தவறானது. 2018ஆம் ஆண்டில் அது பற்றிப் பேசவே தேவை இருக்காது என்றுதான் அனைவரும் நினைத்தோம். ஆனால், அது தவறாகிவிட்டது. நீங்கள் ஆணவப் படுகொலைகளையும் பெண்ணுறுப்புச் சிதைவையும் மகிமைப்படுத்திப் படம் எடுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

சார், நீங்கள் என்னிடம் படம் கூறும் விஷயத்தை மட்டும் கவனிக்குமாறு கூறுவீர்கள். அது 13ஆம் நூற்றாண்டின் படம் என்று சொல்லுவீர்கள். 13ஆம் நூற்றாண்டில் பலதார மணம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. முஸ்லிம்கள் மாமிசத்தையும் பெண்களையும் ஒன்றாகப் பார்த்தனர். கௌரவமான இந்து மதத்தைச் சார்ந்த பெண்கள் மகிழ்ச்சியுடன் உடன்கட்டை ஏறினார்கள். அப்படிக் கணவரின் உடல் கிடைக்காவிட்டால், அவர்களே நெருப்பில் விழுந்தார்கள். பிற ஆண்கள் ஆக்கிரமிக்கும் பட்சத்தில் கூட்டாகத் தற்கொலை செய்துகொள்வது அவர்களது வழக்கம். இதைத்தான் நீங்கள் கூறுவீர்கள்.

‘சதி’ வழக்கமும் வன்புணர்வும்

ஆனால் சார், நீங்கள் எடுத்துள்ள படம் இப்போதுள்ள நிலையைத்தான் பிரதிபலிக்கிறது. சதி மற்றும் வன்புணர்வு ஆகியவை ஒரே மனதின் இருவேறு விதமான எண்ணங்கள், அவ்வளவே. இரண்டிலும் பெண்களை ஒன்றுமில்லாமல் தாழ்மைப்படுத்துவதே நோக்கம். சதி பற்றியோ, ஜோஹர் பற்றியோ ஒரு விமர்சனம்கூட நீங்கள் வைக்கவில்லை. படத்தின் தொடக்கத்தில் சதி, ஜோஹர் ஆகியவற்றை இப்படம் ஆதரிக்கவில்லை என்று disclaimer போட்டதாகக் கூறுவீர்கள். ஆமாம், ஆனால் அதைத் தொடர்ந்து 2 மணிநேரம் 45 நிமிடங்கள் ராஜபுத்ர கௌரவம், எதிரிகளின் கையில் சிக்காமல் நெருப்பில் விழும் ராஜபுத்ர பெண்களின் பெருமை ஆகியவற்றை பேசினீர்கள்.

மூன்று முறைக்கும் மேலாக சதி / ஜோஹரின் பெருமைகளை உங்கள் கதாபாத்திரங்கள் பேசின. அழகு, அறிவு, குணம் ஆகியவற்றின் சிகரமாக விளங்கிய உங்கள் படத்தின் கதாநாயகி, ஜோஹரில் பங்கேற்கத் தன் கணவனிடம் அனுமதி பெற்றார். காரணம், இறந்து போவதற்குக்கூட கணவனின் அனுமதி வேண்டுமே. அதற்குப் பிறகு, சத்தியம் / அசத்தியம், தர்மம் / அதர்மம் ஆகியவற்றைப் பற்றி நீண்ட ஓர் உரையைக் கொடுத்தார். அது மட்டுமல்லாமல், ‘சதி’தான் சத்தியம் மற்றும் தர்மத்தின் வழி என்றும் கூறினார்.

படத்தின் இறுதிக் காட்சியில் - மிகச் சிறப்பான ஒரு காட்சிதான் அது - முஸ்லிம் வில்லன் மேலே அலறிக்கொண்டு ஓடிவர, நூற்றுக்கணக்கான பெண்கள், சிகப்பு நிற ஆடை அணிந்து துர்கா தேவி போல ஜோஹர் நெருப்பை நோக்கிச் செல்கிறார்கள், அதற்கு ஒரு சிறப்பான இசைப் பின்னணி. அதற்கு ஒரு தனி சக்தி இருந்தது. பார்வையாளர்கள் மயங்கிப் போய் அந்த நடிப்பில் ஆழ்ந்து போயிருந்தார்கள். இது, சதி / ஜோஹரை மகிமைப்படுத்தும் காட்சி இல்லையென்றால், வேறு என்ன இருக்க முடியும் என்று தெரியவில்லை. இந்தக் காட்சி என்னை மிகவும் பாதித்தது. கர்ப்பிணிப் பெண்களும் சிறு குழந்தையும் நெருப்புக்குள் செல்கிறார்கள்.

கில்ஜி போன்ற ஒரு கொடுமைக்காரனிடம் காலம் முழுவதும் அடிமைப்பட்டுக் கிடக்க வேண்டுமானாலும் நான் வாழவே விரும்புவேன் என்று எண்ணியபோது, என் இருப்பு சட்ட விரோதமானதாக இருப்பதாக உணர்ந்தேன். அந்தக் கணம், மரணத்தைவிடவும் மேலானதாக வாழ்வைத் தேர்ந்தெடுப்பது தவறு என்று தோன்றியது. வாழும் ஆசை எனக்கு இருப்பது தவறு என்று தோன்றியது. இது, இதுதான் சினிமாவின் சக்தி சார்.

உங்கள் படங்கள் மிகவும் முக்கியமானவை சார். அவை அனைவரின் எண்ணங்களையும் பாதிக்க வல்லவை. அதனால், நீங்கள் மிகவும் பொறுப்புடன் இருக்க வேண்டியது அவசியம். மிகவும் கஷ்டப்பட்டுத்தான் இந்தியாவில் சதி, ஜோஹர் ஆகியவற்றை ஒழித்துக் கட்டினார்கள். இந்த நியாயமற்ற குற்றவியல் நடைமுறைகளைச் சிந்தித்துப் பார்க்காமல் மகிமைப்படுத்திய உங்கள் செயலுக்காக நீங்கள் பதில் கூற வேண்டும் சார். உங்கள் படத்துக்கான டிக்கெட் வாங்கிய ஒரு பார்வையாளராக, எதனால் ஏன் இப்படிச் செய்தீர்கள் எனக் கேட்கும் உரிமை எனக்கு இருக்கிறது.

திரு.பன்சாலி சார், நான் என் கடிதத்தை முடிக்கிறேன். உங்களுக்கு விருப்பமான பல படங்களை நீங்கள் நினைத்தது போலவே எடுக்க வேண்டும். உங்கள் கருத்துரிமைக்காக நான் எவ்வளவு வேண்டுமானாலும் போராடுவேன். அதேநேரத்தில், உங்கள் கலையைப் பற்றிய கேள்வியையும் நான் எழுப்புவேன். இதற்கிடையில், உங்களை எதிர்த்தவர்கள், சதியை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சொல்லாமல் இருக்க வேண்டும்.

உண்மையுடன்,

ஸ்வரா பாஸ்கர்

வாழ்வதற்கு ஆசையுடன் இருப்பவள்.

நன்றி: https://thewire.in/218456/end-magnum-opus-i-felt-reduced-vagina/

தமிழில்: அசீபா பாத்திமா

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

செவ்வாய் 30 ஜன 2018