மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 30 ஜன 2018

சிறப்புக் கட்டுரை: கந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா? - 9

சிறப்புக் கட்டுரை: கந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா? - 9

கேபிள் சங்கர்

முதல் வாய்ப்பு, அதுவும் பெரிய நிறுவனம், நடிகர் என்று ஆரம்பித்துவிட்டு அது தடைப்பட்டு நின்றுபோனால் அந்த இயக்குநரின் வாழ்க்கை மிகப் பெரிய கேள்விக்குறியாகிவிடும். நண்பர் ஒருவரின் வாழ்க்கை அப்படி மாறிய கதைதான் இது. பிரபல இயக்குநரிடம் உதவியாளராக நான்கைந்து வருடங்கள் பயணம். எல்லாம் சிறப்பாகப் போய்க்கொண்டிருக்க, ஒருநாள் அன்றைய சிறு பட்ஜெட் படங்களின் நட்சத்திரத் தயாரிப்பாளரிடம் கதை சொல்ல வாய்ப்பு இருக்கிறது என்று தெரியவருகிறது. பெரும் முயற்சி செய்து அவரின் சந்திப்புக்கு ஏற்பாடாகிறது.

அந்த நாளுக்காகக் காத்திருந்தது வீண் போகவில்லை. நட்சத்திரத் தயாரிப்பாளருக்கு நண்பர் கதை சொன்ன விதம் மிகவும் பிடித்துவிட, “இந்தா பிடி” என்று ஒரு நல்ல தொகைக்கு அட்வான்ஸ் செக் வாங்கியாகிவிட்டது. எங்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சி. நண்பனின் முதல் பயணமே மாபெரும் வெற்றி தயாரிப்பாளருடன் எனும்போது நண்பரின் வெற்றி உறுதி என்கிற நம்பிக்கை. நண்பர் கதையை இன்னும் மெருகேற்ற விழையலானார்.

அடுத்த கட்டமாகத் தயாரிப்பாளர் அவரை அழைத்து ஒரு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தார். இன்ப அதிர்ச்சிதான் என்றாலும் அதை அவர் எதிர்ப்பாக்கவில்லை. இன்றைய மாஸ் முதல் நிலை நடிகர். அன்றைக்கு நல்ல ஃபீல் குட் படங்களில் நடித்து வியாபாரம் ஆகக்கூடிய நிலையில் இருந்தவர். அவரிடம் சென்று கதை சொல்லச் சொல்லி அனுப்பி வைத்தார். நண்பருக்கு லேசாக பயம் வந்தது. ஏனென்றால் அதுநாள் வரை அவரது தந்தைதான் கதை கேட்டு வந்தார். திடீரென இவரிடம் போய் கதை சொல்லச் சொன்னதன் காரணம் புரியாமல் லேசான பதற்றத்தோடுதான் சென்றார்.

நடிகரோ, இவரைச் சிறப்பாக வரவேற்று ஆற அமர உட்கார வைத்துக் கதை கேட்டார். காட்சிகளுக்கிடையே ஆன விளக்கங்கள், வசனங்கள் என எல்லாவற்றையும் டீட்டெயிலாகக் கேட்டறிந்தார். மிகவும் ஆர்வமானார். கதையை முழுவதும் கேட்ட மாத்திரத்தில் பிடித்திருக்கிறது இல்லை என்பதை உடனே சொல்லாமல் தம்மடிக்கப் போய்விட்டார். நண்பருக்கோ பதற்றம் அதிகமாகிவிட்டது.

அரை மணி நேரத்துக்குப் பிறகு வந்தவர் நண்பரை அழைத்து, கதை பிடித்திருப்பதாகவும், தயாரிப்பாளரிடம் தான் பேசுவதாகவும் சொல்லிவிட்டு, க்ளைமாக்ஸில் மட்டுமே மாறுதல் தேவை என்று ஒரு ‘இக்கு’ வைத்திருக்கிறார்.

நண்பருக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ஏனென்றால் க்ளைமாக்ஸுக்காகத்தான் அனைவருமே படத்தின் கதை பிடித்திருப்பதாகச் சொல்கிறார்கள் என்பது அவரது நம்பிக்கை. “கதை உங்களுக்கு ஓகேன்னா சார் கிட்ட சொல்லிருங்க. ஆனா, நீங்க எனக்கு ஓர் உதவி செய்யணும்” என்று விண்ணப்பம் வைத்திருக்கிறார் நடிகரிடம். தயாரிப்பாளருக்கு க்ளைமாக்ஸ் மிகவும் பிடித்தமானதாக இருப்பதால், ஓரிரு நாளில் இரண்டொரு க்ளைமாக்ஸுகளைத் தயார் செய்துகொண்டு, அவரிடம் இதைப் பற்றி பேசும்வரை அமைதிகாக்க வேண்டுமென்று வேண்டுகோள் வைத்தார்.

இதை அவர் எங்களிடம் சொன்னபோது, “ஏண்டா... தயாரிப்பாளர்தானே அனுப்பினாரு. அவரிடம் சொல்லாமல் இப்படி ஏன் முடிவெடுத்தாய்?” என்று கேட்டபோது, “நல்ல நடிகர், தயாரிப்பாளர் காம்பினேஷன் ஒரு புதுமுக இயக்குநருக்குக் கிடைப்பது என்பது சாதாரணமானதல்ல. அங்கே இங்கே சரிக்கட்டித்தான் புராஜெக்டை ஆரம்பிக்க வேண்டும். நடிகர் அட்வான்ஸ் வாங்கி டேட் கொடுத்துட்டா, தயாரிப்பாளருக்காகவாவது செய்தேதான் ஆகணும். இவ்வளவு பெரிய தயாரிப்பாளர் படத்திலிருந்து வெளியேறினால் அவருக்குத்தான் பிரச்னை” என்றார் நண்பர். எனக்கும் சரியென்றே பட்டது.

நாயகன் நண்பரிடம் வாக்கு கொடுத்தது போல, தயாரிப்பாளரிடம் க்ளைமாக்ஸ் பற்றி பேசாமல், ஓகே சொல்லிவிட, அட்வான்ஸ் வாங்கியாகிவிட்டது. தயாரிப்பாளர் மற்ற டெக்னீஷியன்களுக்கு எல்லாம் அட்வான்ஸ் கொடுத்து ஷூட்டிங் தேதியை ஃபிக்ஸ் செய்ய ஆரம்பிக்க, நண்பர் நடிகரிடம் வேறு க்ளைமாக்ஸ் சொல்வதாய்ச் சொன்னதையே மறந்து போனார்.

நடிகர் மறக்கவில்லை. நண்பருக்கு போன் போட்டு, என்ன ஆச்சுங்க க்ளைமாக்ஸ் என்று கேட்க, நேரில் வருதாகச் சொல்லிவிட்டு, தயாரிப்பாளரிடம் போய் “இப்ப ஹீரோ திடீர்னு க்ளைமாக்ஸை மாத்த சொல்லுறாரு” என்பது போல தயாரிப்பாளரிடம் சொன்னவுடன், “இதான் க்ளைமாக்ஸ், தயாரிப்பாளர் இதான் வேணும்டாரு” என்று சொல்லச் சொல்லி அனுப்ப, நடிகரிடம் போனார் நண்பர்.

வழக்கம்போல நல்ல வரவேற்பு. “என்ன முடிவு பண்ணியிருக்கீங்க?” என்று நடிகர் ஆர்வமாகக் கேட்க, தயாரிப்பாளரின் வாய்ஸ் மீதான நம்பிக்கை மிகவும் அதிகமாக இருக்கிற நிலையைச் சாதகமாகப் பயன்படுத்த எண்ணி, “அதே பழைய க்ளைமாக்ஸ்தான் சார்” என்றார் நண்பர்.

“அன்னிக்கு மாத்துறேன்னு சொன்னீங்க?”

“புரொட்யூசர் மாத்த வேணாம்ண்டாரு...” கொஞ்சம் அழுத்தமான குரலில் நண்பர்.

நடிகர் ஏதும் பேசவில்லை. “ஓகே.. நீங்க கிளம்புங்க. நான் தயாரிப்பாளரிடம் பேசிக்கொள்கிறேன்” என்று சொல்லிவிட்டுத் தயாரிப்பாளரிடம் பேசியிருக்கிறார். படத்தில் நடிக்க விருப்பமில்லையென்று சொல்லி, அட்வான்ஸ் பணத்தையும் திரும்பக் கொடுத்தனுப்பியிருந்தார்.

தயாரிப்பாளரிடம் அவர் சொன்ன காரணம் இதுதான்: “உங்க டைரக்டர் உங்ககிட்ட சொன்ன கதை ஒண்ணு. என்கிட்ட சொன்னது ஒண்ணு. அவர்கிட்ட நீங்க தயாரிப்பாளர் கிட்ட சொல்லிட்டீங்களான்னு கேட்டதுக்கு அவர் பதில் சொன்ன விதமும் எனக்குப் பிடிக்கலை. இப்படி ஆரம்பத்துலேயே நேர்மையில்லாம இருந்தா என்னால ட்ராவல் பண்ண முடியாது” என்று சொல்லிவிட்டார்.

வளர்ந்துவரும் சூப்பர் ஸ்டார் நடிகரைப் பகைத்துக்கொள்ள முடியாமல் தயாரிப்பாளர் படத்தை ட்ராப் செய்துவிட்டு, அதே நடிகரின் கால்ஷீட்டை வைத்து பின்னாளில் பெரிய படமெடுத்துப் பெரும் வெற்றியைக் கொடுத்தார்.

ஆனால், பின்னால பாத்துக்கலாம்னு அன்றைக்குத் திட்டம் போட்ட நண்பர் இன்றுவரை படம் எடுக்கவில்லை. வாய்ப்பு தேடிக்கொண்டேயிருக்கிறார். 15 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.

(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: கேபிள் சங்கர் எழுத்தாளர், திரைப்பட விமர்சகர், இயக்குநர். ‘சினிமா வியாபாரம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். ‘தொட்டால் தொடரும்’ என்னும் படத்தை இயக்கியுள்ளார். இவரைத் தொடர்புகொள்ள: [email protected])

கந்து வட்டி-1

கந்து வட்டி-2

கந்து வட்டி-3

கந்து வட்டி-4

கந்து வட்டி-5

கந்து வட்டி-6

கந்து வட்டி-7

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

செவ்வாய் 30 ஜன 2018