மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 30 ஜன 2018

ஆட்சியாளர்களுக்காக உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணம்!

ஆட்சியாளர்களுக்காக உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணம்!

இன்றைய ஆட்சியாளர்கள் வைத்திருக்கும் தனியார் பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்துவதற்காகவே, தற்போது அரசு பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறினார் தேமுதிக மகளிரணி செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். அதோடு, “ஐந்து, பத்து பைசாக்களை கூட பார்க்காத இந்தக் காலத்தில், பேருந்து கட்டணத்தை மட்டும் 2 பைசா, 5 பைசா என்று குறைக்கிறார்கள்; ஆனால், கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்குகிறார்கள்” என்று தமிழக அமைச்சர்கள் மீது குற்றம் சாட்டினார்.

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளின் பயணக் கட்டணம் கடந்த 20ஆம் தேதி முதல் உயர்த்தப்பட்டது. இதை எதிர்த்து, நேற்று (ஜனவரி 29) மாவட்டம்தோறும் தேமுதிக கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. திருவள்ளூரில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டார் அக்கட்சியின் மகளிரணி செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.

அப்போது, தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் நஷ்டத்தில் இயங்குவதற்கு ஆட்சியாளர்களின் ஊழலே காரணம் என்று குற்றம்சாட்டினார். “2000ஆம் ஆண்டு வரை லாபத்தில் இயங்கிய போக்குவரத்துத் துறை, தற்போது 5,700 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்குகிறது. இதற்கு யார் காரணம்? எந்த தனியார் பேருந்து நிறுவனமாவது நஷ்டத்தில் இயங்குகிறதா? எல்லாமே லாபத்தில் இயங்குகிறது. அப்படி இருக்கும்போது, அரசுப் பேருந்துகள் மட்டும் நஷ்டத்தில் இயங்குவது ஏன் என நாம் சிந்திக்க வேண்டும்.

பேருந்து வாங்குவது, அதைப் பராமரிப்பது, டீசல் வாங்குவது, ஆட்களைப் பணியமர்த்துவது என்று எல்லாவற்றிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் இதனால் பலன் பெறுகிறார்கள். ஆனால், அந்த சுமை மட்டும் தமிழக மக்களின் மீது விழுந்துள்ளது.

ஐந்து, பத்து பைசாக்களைக்கூட பார்க்காத காலத்தில், பேருந்து கட்டணத்தை மட்டும் 2 பைசா, 5 பைசா என்று குறைக்கிறது தமிழக அரசு. ஆனால், ஆட்சியாளர்கள் கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்குகிறார்கள். பைசா கணக்கில் நீங்கள் லஞ்சம் வாங்கிவிட்டு, கோடிக்கணக்கில் மக்களுக்கு வசதி செய்துகொடுங்கள். அதனை செய்ய முடியாத ஆட்சி, ஓர் ஆட்சியா? இதைக் கேள்வி கேட்கக்கூடாது என்பதற்காக, மக்களுக்கு 500, 10000 ரூபாய்களைக் கொடுத்து அவர்களையும் ஊழல்வாதிகளாக்கிய கேவலமான ஆட்சி நடந்து வருகிறது” என்று தற்போதைய ஆட்சியாளர்களைச் சாடினார் பிரேமலதா.

அதேநேரத்தில், திமுகவினரையும் தாக்கிப் பேசினார். “திமுகவினர் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இந்த நஷ்டத்தில் திமுகவுக்குப் பங்கில்லையா? யாரை ஏமாற்ற, அவர்கள் இந்த கபட நாடகம் ஆடுகின்றனர். இன்று தமிழகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் பல நூறு பேருந்துகள், திமுகவில் இருக்கும் முன்னாள் அமைச்சர்களுக்குச் சொந்தமானவை.

இன்று ஒவ்வோர் அமைச்சருக்கும் சொந்தமாக 200, 300 பேருந்துகள் இருக்கின்றன. பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணம். அதிகாரிகள், ஆட்சியாளர்கள் வைத்திருக்கும் தனியார் பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்துவதற்காகவே, இப்போது அரசு பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது” என்று கூறினார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

செவ்வாய் 30 ஜன 2018