தொழுநோய்: மருத்துவர்கள் விழிப்புணர்வு பேரணி!

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் தொழுநோய் ஒழிப்பு நாளையொட்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
உலகத் தொழுநோய் ஒழிப்பு தினம் கடந்த 25ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டது. ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 25ஆம் தேதி இந்த நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மத்தியில் தொழுநோய் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதும், இந்நோயால் பாதிப்புக்குள்ளாகி அவதிப்படுவோர் இடையே ஒற்றுமை உணர்வை ஏற்படுத்துவதும் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுவதன் முக்கிய நோக்கமாகும்.
அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் முதல்வர் பொன்னம்பலம் நமச்சிவாயம் தலைமையில் அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தொழுநோய் விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றனர். தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் போர்வைகள், காலணிகள் வழங்கப்பட்டதுடன் விழிப்புணர்வுக்கான கலைநிகழ்ச்சிகளும் நேற்று (ஜனவரி 29) நடத்தப்பட்டன.
தமிழக அரசு சார்பில் பள்ளி, கல்லூரி மற்றும் பொது இடங்களிலும் தொழுநோய் விழிப்புணர்வு முகாம்கள் நடத்த உள்ளதாக சென்னை மாவட்ட மருத்துவப் பணிகளுக்கான துணை இயக்குநர் ஸ்ரீதேவி தெரிவித்தார்.