மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 30 ஜன 2018

சிறப்புக் கட்டுரை: மத்திய பட்ஜெட் விவசாயிகளுக்கு உதவுமா?

சிறப்புக் கட்டுரை: மத்திய பட்ஜெட் விவசாயிகளுக்கு உதவுமா?

பிரசன்ஷா ஸ்ரீவஸ்தவா

நிதியமைச்சர் அருண் ஜேட்லி பிப்ரவரி 1ஆம் தேதி 2018-19ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார். 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் வரவுள்ளதால் மக்களிடம் அரசியல் ஆதரவைப் பெறும் பொருட்டு மத்திய அரசு ஒரு சிறப்பான பட்ஜெட்டை கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயத்துக்கான நிதியை அதிகரிப்பதன் மூலம் அதைச்சார்ந்த வெகுஜன மக்களின் கவனத்தை ஈர்க்க முடியும் என்றும் மத்திய அரசு கணிக்கிறது.

ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சி இமாசலப் பிரதேசத்திலும், குஜராத்திலும் அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்றிருந்தாலும் விவசாயிகள் அதிகம் வசிக்கும் பகுதியில் இவர்களுக்கு எதிராகவே வாக்களித்துள்ளனர். பாஜகவின் கடந்த கால செயல்பாடுகளின் மீதான அதிருப்தியே விவசாயிகளின் எதிர்ப்புணர்வுக்குக் காரணமாகும். கிராமப்புறப் பொருளாதாரத்தில் நிலவும் இன்னல்களுக்குத் தீர்வுகாண உரிய முக்கியத்துவம் செலுத்த வேண்டியுள்ளது. எனவே, கிராமப்புறப் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையிலான விவசாய சார்புக் கொள்கைகளை வரும் பட்ஜெட்டில் மத்திய அரசு மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம். மேலும், கிராமப்புறப் பொதுமக்களின் பிரச்னைகளுக்கும் இந்த பட்ஜெட் உரிய தீர்வளிக்கும் வகையில் இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

வேளாண் சார்ந்த கல்விகளுக்கு நிதியை அதிகரிப்பதன் மூலமும், தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துவதன் மூலமும் மத்திய அரசின் இலக்கான 2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் திட்டத்துக்கு வலு சேர்க்கலாம். அதேபோல சென்சார் பயன்படுத்துதலை ஊக்குவித்தல், அறுவடைக்குப் பிந்தைய செயல்களுக்கான தொழில்நுட்பங்களை ஊக்குவித்தல், குளோனிங் முறையிலான விலங்குகளை வணிகப் பயன்பாட்டுக்குப் பயன்படுத்துதல், சில தேர்ந்தெடுக்கப்பட்ட பயிர்களில் மரபணு மாற்று முறை ஆகியவற்றையும் மத்திய அரசு கவனத்தில்கொள்ள வாய்ப்புள்ளது.

வேளாண் பொருளாதாரம் சரிந்துள்ளதால் விவசாயிகளுக்கு வருவாய் சரிவும், வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பும் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் வேளாண் துறையின் ஆண்டு வளர்ச்சி 1.7 சதவிகிதமாகச் சரிந்தது. வேளாண் விளை பொருள்களுக்கு உரிய விலை கிடைக்காமல் போனது வேளாண் துறையின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தது. அடுத்த பட்ஜெட்டில் இவற்றுக்கெல்லாம் முக்கியத்துவம் அளித்து, கிராமப்புற உள்கட்டமைப்பு மற்றும் விவசாய வேலைவாய்ப்புகளை மேம்படுத்தினால் வளர்ச்சி ஏற்படும் என்று கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் கருதுகிறது.

அருண் ஜேட்லி கூறுகையில், “வேளாண் பொருளாதாரத்தின் வளர்ச்சி நியாயமான மற்றும் சமமான அளவில் இல்லை” என்றார். விவசாயத் துறையின் பயன்கள் எல்லோருக்கும் தெளிவாகக் கிடைக்கவில்லை. இவற்றையும் உள்ளடக்கிய வளர்ச்சியைக் காண பட்ஜெட்டில் பல்வேறு கொள்கைத் திட்டங்களை வகுக்க வேண்டியுள்ளது. பாசனத்திடம், பயிர்க் காப்பீடு, வேளாண் கடன் தொடர்பான கொள்கை சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதேபோல விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்கவும் வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டியுள்ளது.

பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் முந்தைய நிதியாண்டில் கிராமப்புற பொருளாதாரம் கடுமையான பாதிப்புக்குள்ளானது. கிராமப்புற வேலைவாய்ப்புகள் முடங்கி வளர்ச்சிக்குப் பதிலாக பின்னடைவைச் சந்தித்தது. அரசாங்கத்தின் திட்டங்கள் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதை தடுக்கத் தவறியது என்றே கூறலாம். இதன் காரணமாக மக்களுக்கு ஏற்பட்ட கோபமும், பாதிப்பும் பாஜகவின் வாக்காளர் எண்ணிக்கையைக் குறைக்கச் செய்துள்ளது.

மத்திய புள்ளியியல் அலுவலகத்தின் (சி.எஸ்.ஓ) அறிக்கையின்படி, ‘நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த நான்காண்டுகளில் இல்லாத அளவுக்கு, நடப்பு நிதியாண்டில் 6.5 சதவிகிதமாகச் சரிந்துள்ளது. வேளாண் துறை மற்றும் உற்பத்தித் துறையின் மோசமான வளர்ச்சி காரணமாகவே பொருளாதார வளர்ச்சி சரிந்துள்ளது. வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த துறைகளின் வளர்ச்சி 4.9 சதவிகிதத்திலிருந்து 2.1 சதவிகிதமாகச் சரிந்துள்ளது’ என்று தெரியவருகிறது. கடன் அமைப்பும் முறையாக இயங்கவில்லை. சுமார் 40 சதவிகித விவசாயிகள் வேளாண் பணிகளுக்கு முறைசாரா தனியார் கடன் நிறுவனங்களிடமே கடன் வாங்குகின்றனர்.

இவர்களின் எண்ணிக்கை சுமார் 24 கோடி வரை இருக்கும். கிராமப்புற விவசாயத்தில் அழுத்தம் அதிகரித்த பின்னர், அரசாங்கம் தன்னுடைய அதிகபட்ச அரசியல் முயற்சியாகக் கடன் தள்ளுபடியை அறிவிக்கிறது. அவர்களின் வருவாய்க்கு முழுமையான தீர்வை வழங்காமல் கடனைத் தள்ளுபடி செய்வது மட்டுமே விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு முழுத் தீர்வாக அமையாது. வேளாண் துறையைப் புதுப்பித்து உற்பத்தியை மேம்படுத்த வேண்டும். கடனைத் திருப்பிச் செலுத்தும் காலத்தை நீட்டித்து அவர்களின் வருவாய்க்கு நிலையான வழியை அமைத்துத் தர வேண்டும். இது, நம்பகமான கடன் ஆதாரங்கள் விவசாயிகளை அழுத்தத்திலிருந்து விடுவிக்கும்.

பொருளாதாரத்தில் வலுவான நிலையிலுள்ள விவசாயிகளுக்கு வரி விதிக்கும் திட்டம் எதுவுமில்லை என்று கடந்த ஆண்டு மத்திய அரசு கூறியது. ஆனால், தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் இந்தத் திட்டம் பற்றிய சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்வது குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். ஏழை விவசாயிகள் மற்றும் பணக்கார விவசாயிகள் பற்றிய வேறுபாட்டை எளிதில் அறிந்து வரிவிதிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்றும் அவர் கூறினார். வேளாண் வருமானத்தைப் பொறுத்தவரையில் ஏழை மற்றும் பணக்கார விவசாயிகள் என இரு தரப்பினரிடமிருந்தும் அரசுக்குப் பெரும் வருவாய் கிடைக்கிறது.

உண்மையில், இந்திய வேளாண் துறை மிகவும் பாகுபாடு கொண்டதாகவும், சமத்துவமற்றதாகவும் விளங்குகிறது. இதில் விவசாயிகளிடம் நிலவும், அவர்களின் வருவாயும் முக்கியப் பங்காற்றுகின்றன. 70ஆவது தேசிய மாதிரி ஆய்வறிக்கையில், நாட்டிலுள்ள 70 சதவிகித விவசாயிகள் 1 ஹெக்டேருக்கும் குறைவான விவசாய நிலங்களையே வைத்துள்ளனர். 0.4 சதவிகித விவசாயிகள் மட்டுமே 10 ஹெக்டேர் வரையிலான வேளாண் நிலங்களைக் கொண்டுள்ளனர். இதுதான் ஏழை மற்றும் பணக்கார விவசாயிகளை வேறுபடுத்திக் காட்டுவதாகவும், பணக்கார விவசாயிகளுக்கு வரி விதிக்கலாம் என்ற விவாதங்கள் உருவாவதற்குக் காரணமாகவும் உள்ளது.

மேலும், இது விவசாயத்தில் வரி ஏய்ப்பைத் தடுக்கவும் உதவும். பெரிய வேளாண் நிறுவனங்கள் வரிவிலக்குச் சலுகையைப் பெறுகின்றனர். அதிக எண்ணிக்கையிலான மக்களை வரி வளையத்துக்குள் கொண்டுவரும் பணியையும் ஒருபக்கம் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் விவசாயிகளுக்கு வரிவிதிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் பாஜகவுக்கு விவசாயிகளின் வாக்கு வங்கியில் ஏற்பட்டுள்ள சரிவு மேலும் அதிகரிக்கும். ஆனால், ஒருவேளை நிர்வாகம் விவசாயிகளுக்கு வரி விதித்தால் அது பொருள்களின் விலையையும் அதிகரிக்கும்.

நன்றி: க்ரியஸ்

தமிழில்: பிரகாசு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

செவ்வாய் 30 ஜன 2018