கடனில் மிதக்கும் ஏர் இந்தியா!


ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் கடன் சுமையானது மதிப்பிட்டதைவிட 40 சதவிகிதம் கூடுதலாகவே இருக்கும் என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நெட்வொர்க் 18 ஊடகத்திடம் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரான அசோக் கஜபதி ராஜு அளித்துள்ள பேட்டி ஒன்றில், “ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் கடன் சுமையை நாங்கள் கணக்கிடத் தொடங்கியபோது ரூ.50,000 கோடி வரையிலான கடன் இருப்பது தெரியவந்தது. இந்தக் கடன் அளவு ரூ.70,000 கோடியாக இருந்தால்கூட ஆச்சர்யமில்லை. கடன் விவரங்களை நன்கு உற்று நோக்கும்போது அதில் மேலும் கடன் இருப்பது தெரியவரும். என்னைப் பொறுத்தவரையில் ஏர் இந்தியா என்பது கடன் வலை ஆகும். இதைப் பற்றி நான் நாடாளுமன்றத்தில் நிறையவே பேசியுள்ளேன். வரும் ஆண்டில் கடன் சுமையைக் குறைப்பதற்கான நடவடிக்கையில் கவனம் செலுத்தப்படும்” என்றார்.
2017 மார்ச் மாத நிறைவில் ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு ரூ.48,877 கோடி கடன் சுமை இருந்தது. அதில் ரூ.17,360 கோடி ஏர் கிராஃப்ட் விமானங்கள் வாங்கியதற்கான கடனாகும். பொதுத் துறை விமானப் போக்குவரத்துச் சேவை நிறுவனமான ஏர் இந்தியா, கடுமையான கடன் சுமையில் சிக்கியுள்ளதால் இந்நிறுவனத்தைத் தனியார் மயமாக்கும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ஏர் இந்தியாவைக் கைப்பற்றும் முயற்சியில் தனியார் நிறுவனங்களின் போட்டியும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏர் இந்தியாவைக் கடன் சுமையிலிருந்து மீட்க அதில் அந்நிய நாட்டைச் சேர்ந்த விமான நிறுவனங்கள் 49 சதவிகிதம் வரையில் முதலீடு செய்வதற்கு அனுமதிப்பதற்கான ஒப்புதலை மத்திய அரசு சமீபத்தில் வழங்கியது.