மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 30 ஜன 2018

கோடீஸ்வர எம்.பிக்களுக்குச் சம்பளம் வேண்டாம்!

கோடீஸ்வர எம்.பிக்களுக்குச் சம்பளம் வேண்டாம்!

வசதிபடைத்த கோடீஸ்வர எம்.பிக்கள் தங்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை விட்டுத்தர வேண்டுமென்றும், இதற்கான முயற்சிகளை நாடாளுமன்ற அலுவலகம் முன்னெடுக்க வேண்டுமென்றும், மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்குக் கடிதம் எழுதியுள்ளார் பாஜக எம்.பி வருண் காந்தி. இதன்மூலமாக, தாங்கள் தேர்ந்தெடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் மீது அந்தந்த தொகுதி மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை அதிகமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

பாஜகவைச் சேர்ந்த வருண் காந்தி, தற்போது உத்தரப்பிரதேசத்திலுள்ள சுல்தான்பூர் தொகுதி எம்.பியாக இருந்துவருகிறார். இவர், கடந்த பத்தாண்டுகளில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சம்பளம் 400 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாகச் சமீபத்தில் கூறினார். இதுகுறித்து, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், கோடீஸ்வர எம்.பிக்களுக்காக அரசு செலவழிக்கும் தொகையைக் கைவிடலாம் என்று தெரிவித்துள்ளார்.

“ஜனநாயக சீர்திருத்த கூட்டமைப்பு நடத்திய ஆய்வு முடிவொன்றில், இந்திய எம்.பிக்களில் 449 பேரிடம் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துகள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. அதேபோல, 10 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்து மதிப்புடையவர்கள் எண்ணிக்கை 132 பேர் என்று கூறியுள்ளது. இந்த எம்.பிக்களுக்காக மாதாமாதம் 2.7 லட்சம் ரூபாய் செலவிடப்படுகிறது. இவ்வாறு 2016ஆம் ஆண்டில் மட்டும் 176 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது” என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் வருண் காந்தி.

தமிழகத்திலுள்ள எம்.எல்.ஏக்களின் சம்பளம் உயர்த்தப்பட்டதைக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள வருண் காந்தி, அதே நேரத்தில் டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் மண்டை ஓடு அணிந்து போராட்டம் செய்தார்கள் என்றும் தெரிவித்துள்ளார். “நாடு முழுவதும் எம்.எல்.ஏக்களுக்கு ஒரே சம்பளம் வழங்கப்பட வேண்டும். நாடாளுமன்ற எம்.பிக்களில் அனைவரும் வசதி படைத்தவர்கள் என்று சொல்ல முடியாது. வெறுமனே சம்பளத்தை நம்பியிருக்கும் மக்கள் பிரதிநிதிகளும் உண்டு. அவர்களுக்கு உதவிடும் வகையில், வசதி படைத்த எம்.பிக்கள் தங்களது சம்பளத்தை விட்டுத்தர வேண்டும்.

இந்த தன்னார்வ முயற்சியைச் செயல்படுத்துவதனால் நாடெங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது நல்மதிப்பு உண்டாவதோடு, அவர்களைத் தேர்ந்தெடுத்த தொகுதி மக்களின் நம்பிக்கையும் அதிகரிக்கும்” என்று கூறியுள்ளார்.

நாட்டு மக்களிடையே சமத்துவமின்மை வளர்வது, ஜனநாயகத்தைச் சீரழிக்கும் என்றும் தெரிவித்துள்ளார் வருண் காந்தி. “ஒவ்வொரு நாளும் இந்தியாவில் சமத்துவமின்மை அதிகமாகிறது. மக்கள் பிரதிநிதிகளான நாம் தான், நாட்டின் சமூக பொருளாதார நடப்புகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும்” என்றும் சுமித்ரா மகாஜனுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

2015ஆம் ஆண்டு முதல் தனது எம்.பி பதவிக்கான சம்பளத்தை, உத்தரப்பிரதேசத்திலுள்ள நலிந்த விவசாய குடும்பங்களுக்கு வருண் காந்தி வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

செவ்வாய் 30 ஜன 2018