மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 29 ஜன 2018

டிஜிட்டல் திண்ணை: கோபத்தில் மோடி... தமிழக அரசு மீது நடவடிக்கை?

டிஜிட்டல் திண்ணை: கோபத்தில் மோடி... தமிழக அரசு மீது நடவடிக்கை?

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. டைப்பிங் செய்து முடித்த மெசேஜ்க்கு செண்ட் கொடுத்தது வாட்ஸ் அப்.

“தமிழகம் முழுவதும் பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சிகள் மறியலில் ஈடுபட்டிருந்த அதே நேரம், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்தனர். அதிமுக உறுப்பினர் அட்டை புதுப்பித்தல் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமைத் தொடங்கி வைக்க இருவரும் அங்கே வந்திருந்தனர். அமைச்சர்கள் பெரும்பாலோனோர் இந்த நிகழ்வுக்கு வந்திருந்தனர். பழனிசாமியும் பன்னீரும் இந்த நிகழ்வைத் தொடங்கி வைத்துவிட்டு, கட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டத்திலும் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில், அமைச்சர்கள் வேலுமணி, ஜெயகுமார் உள்ளிட்ட சில அமைச்சர்களும், அவைத் தலைவர் மதுசூதனனும் பங்கேற்றனர்.

முதலில் பேசியதே மதுசூதனன்தான். ‘ஆர்.கே.நகரில் நம் தோல்விக்குக் காரணம், நம் கட்சியில் உள்ள சிலரேதான். இதைப் பற்றி நான் ஏற்கெனவே உங்களுக்குத் தெளிவாகக் கடிதம் அனுப்பியிருக்கிறேன். ஆனால், இதுவரை நீங்க நடவடிக்கை எதுவும் எடுக்கவே இல்லை. அடிமட்டத்தில் இருக்கும் நிர்வாகிகள் மட்டுமல்ல... சில அமைச்சர்களே எனக்கு எதிராக வேலை பார்த்திருக்காங்க. சில நிர்வாகிகளுக்கு தினகரன் மாச சம்பளமே கொடுத்திட்டு இருந்திருக்காரு. இதுக்கெல்லாம் ஆதாரங்கள் என்னிடம் இருக்கு. அதை நான் ஓ.பி.எஸ். கிட்ட கொடுத்திருக்கேன். எடப்பாடி அண்ணனுக்கும் இதெல்லாம் நல்லாவே தெரியும். நம்மை காலை வாரியவங்க யாருன்னு தெரிஞ்சும், இன்னும் எந்த நடவடிக்கையும் இல்லை. அம்மா இருந்தால் இப்படித்தான் இருந்திருப்பாங்களா... அப்படி செஞ்சவங்க யாரா இருந்தாலும் அடுத்த நிமிஷம் அவங்களை வெளியே அனுப்பியிருக்க மாட்டாங்க? நீங்க ஏன் இன்னும் தயங்கிட்டு இருக்கீங்க...?’ என்று கொந்தளித்திருக்கிறார் மது.

அவரை சமாதானப்படுத்திய எடப்பாடி, ‘அண்ணா, உங்க கோபம் நியாயமானதுதான். நம்மகூட இருக்கிறவங்களை எப்படி இழுக்கலாம்னு அவங்க ப்ளான் பண்ணிட்டு இருக்காங்க. இப்போ நாம நடவடிக்கை என்ற பெயரில் கட்சியை விட்டு நீக்கினால், அது அவங்களுக்கு வசதியாகப் போயிடும். இதுவரைக்கும் நாம நீக்கி இருக்கும் எல்லோருமே ஏற்கெனவே அணி மாறியவங்க மட்டும்தான். அதனால கொஞ்சம் பொறுமையாக நட்வடிக்கை எடுக்கலாம்னுதான் காத்திருக்கோம். நீங்க சொன்னதுல இருந்து, யாரெல்லாம் ஸ்லீப்பர் செல்லாக செயல்பட்டு இருக்காங்க என்பது தெரிஞ்சுடுச்சு. அவங்க மேல நடவடிக்கை நிச்சயமாக எடுக்கலாம். நீங்க கொஞ்சம் பொறுமையா இருங்க...’ என்று சொன்னாராம்.

பன்னீரும், ‘யாரை என்ன செய்யலாம்னு நாங்க எல்லாமே பேசிட்டோம். நடவடிக்கை எடுக்கவில்லை என்ற வருத்தம் எனக்கும் இருந்துச்சு. ஆனால், எடப்பாடி அண்ணன் சில விஷயங்களை சொல்லியிருக்காரு. சீக்கிரமே களையெடுப்பு தொடங்கிடும். நல்லவங்களை விரட்டிடக் கூடாது. அதே நேரத்துல துரோகிகளை கூட வெச்சுக்கக் கூடாது என்பதில் நாங்களும் தெளிவாக இருக்கோம்..’ என்று மதுசூதனனை சமாதானப்படுத்தும் விதமாகப் பேசி இருக்கிறார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் ஜெயகுமார் கடைசி வரை எதுவுமே பேசவில்லையாம்!” என்று முடிந்தது மெசேஜ்.

அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்த ஃபேஸ்புக், தொடர்ந்து ஸ்டேட்டஸ் ஒன்றை அப்டேட் செய்தது.

“தமிழக பிஜேபி மீது கடும் கோபத்தில் இருக்கிறாராம் பிரதமர் மோடி. குறிப்பாக மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், மற்றும் குருமூர்த்தி மீதுதான் மோடிக்குக் கோபமாம். தமிழகத்தில் நடக்கும் அரசியல் நிகழ்வுகளை சரியாக தனது கவனத்துக்கு கொண்டு வரவில்லை என்பதும், பொன்னாரும், குருமூர்த்தியும் தமிழக பாஜகவைத் தவறாக வழிநடத்துகிறார்கள் என்பதும்தான் மோடியின் கோபத்துக்குக் காரணமாம். கடந்த இரண்டு மாதங்களாக மோடியைச் சந்திக்க நேரம் கேட்டபடியே இருக்கிறாராம் பொன்னார். ஆனால், பிரதமர் அலுவலகத்திலிருந்து பொன்னாருக்கு எந்த பதிலுமே வரவில்லையாம்.

நொந்து போன பொன்னார் கடந்த வாரத்தில் ஒரு ஜோசியரின் ஆலோசனைப்படி, மோடி தன்னைச் சந்திக்க வேண்டும் என்பதற்காக ஈரோட்டில் யாகம் ஒன்றை நடத்தியிருக்கிறார். இந்த யாகத்தில் காஞ்சி விஜயேந்திரர் கலந்துகொண்டிருக்கிறார். ஆந்திரா, கேரளா, கர்நாடகா என்று பக்கத்து மாநிலங்களில் இருந்தெல்லாம் வேத விற்பன்னர்கள் கலந்துகொண்டு யாகத்தை நடத்தியிருக்கிறார்கள். பொன்னார் யாகம் நடத்தியும்கூட மோடியின் பார்வை பொன்னார் பக்கம் திரும்பவில்லை.

இதற்கிடையில் உளவுத் துறை மூலமாக டெல்லிக்குப் போன ரிப்போர்ட்டில், ‘தமிழகத்தில் நடக்கும் ஆட்சி மக்களிடம் பெரும் அதிருப்தியை சம்பாதித்து வருகிறது. பிஜேபி இந்த ஆட்சியைக் கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்தபடி இருப்பது தமிழக மக்களிடம் பிஜேபிக்கு கெட்ட பெயரை உண்டாக்கிவருகிறது. இப்படியே போனால், தமிழகத்தில் பிஜேபி மீதான வெறுப்பு இன்னும் அதிகமாகும்’ என்று சொல்லப்பட்டுள்ளது. அதைப் பார்த்து மோடி மேலும் டென்ஷன் ஆனதாகச் சொல்கிறார்கள். எடப்பாடி அரசு மீது நடவடிக்கை எடுக்கலாமா என ஆலோசனை நடந்திருக்கிறது. அப்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் சட்டமன்றம் தொடர்பாக நடக்கும் வழக்கு பற்றியும் விவாதம் போயிருக்கிறது.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்த வழக்கு, ஓ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏக்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனத் தொடரப்பட்ட வழக்கு, குட்கா விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கு என அனைத்திலும் விரைவில் தீர்ப்பு வந்துவிடும். எப்படியும் அந்த தீர்ப்பு எடப்பாடி அரசுக்கு எதிராகத்தான் வரும். அப்படி வரும் பட்சத்தில் அதையே காரணமாக வைத்து எடப்பாடி அரசின் மீது நடவடிக்கை எடுக்கலாம் என மோடிக்கு ஆலோசனை சொல்லியிருக்கிறார்கள்.

நடவடிக்கை என்றால் எதுவரை போகலாம் என சிலர் கேட்டார்களாம். இந்த ஆட்சி இருக்கக் கூடாது. ஆளுநரைப் பயன்படுத்தி இப்போதைக்கு நிர்வாகம் செய்யலாம் என்றும் சொல்லியிருக்கிறார்கள் ஆலோசனை சொன்னவர்கள். ஆக, தமிழகத்தில் பிப்ரவரியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்!” என்ற ஸ்டேட்டஸுக்கு போஸ்ட் கொடுத்துவிட்டு சைன் அவுட் ஆனது ஃபேஸ்புக்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

திங்கள் 29 ஜன 2018